வவுனியாவை உலுக்கியுள்ள சம்பவம்-இரண்டு மாணவிகள் கடத்தப்பட்டு துன்புறுத்தல்

வவுனியாவை உலுக்கியுள்ள சம்பவம்-இரண்டு மாணவிகள் கடத்தப்பட்டு துன்புறுத்தல்! வவுனியாவில் கடத்தப்பட்ட இரு பாடசாலை சிறுமிகள் அலரிவிதையை உட்கொண்ட நிலையில் வைத்தியசாலையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வவுனியா நகர்ப்பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 15, 16 வயதுகளையுடைய சிறுமிகள் இருவர் நேற்று பாடசாலையை விட்டு வீடு திரும்பிய நிலையில் காணாமல்போயிருந்தனர். இதனையடுத்து அவர்கள் இருவரும் வவுனியா, சாந்தசோலை வீதியில் உள்ள கைவிடப்பட்ட வீடு ஒன்றில் வைக்கப்பட்டிருந்ததாக தெரியவருகிறது. சிறுமிகள் அங்கிருந்து வெளியேறி அயலவர்களின் உதவியுடன் தப்பித்துள்ள போது, அவர்கள் அலரி விதை உட்கொண்டது அறியப்பட்டு உடனடியாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து அந்த வீட்டை நேற்று இரவு பூந்தோட்டம் இளைஞர்கள் முற்றுகையிட்டதுடன், பொலிஸாரும் சம்பவ இடத்திற்கு வருகை தந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். இரு சிறுமிகளும் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படும் கைவிடப்பட்ட வீட்டில் இருந்து சாப்பாட்டு பொதி, தண்ணீர் போத்தல், ஆண் ஒருவரின் பாதணி என்பனவும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இது தொடர்பில் பாதிக்கப்பட்ட சிறுமிகளின் உறவினர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில்,பாடசாலை முடிந்து வீடு திரும்பிய பின்னர், பாடப்புத்தகம் வாங்குவதற்காக சிறுமிகள் இருவரும் சைக்கிளில் சென்றனர். அப்பொழுது முச்சக்கரவண்டியில் வந்தவர்கள் அவர்களை கட்டாயப்படுத்தி சாந்தபுரம் பகுதிக்கு அழைத்து சென்று கத்திமுனையில் துன்புறுத்தியுள்ளனர்.அதன்பின்னர் பலவந்தமாக சிறுமிகளுக்கு அலரி விதையை உட்கொள்ள கொடுத்துள்ளனர்.

சிறுமிகளை காணவில்லையென உறவினர்கள் தேடிய நிலையில், சம்பவ இடத்திலிருந்து தப்பி வந்த சிறுமிகள் நடந்தவற்றை கூறினர்.இதையடுத்து இரவு 9 மணியளவில் வவுனியா பொது வைத்தியசாலையில் அவர்கள் இருவரும் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டனர் என குறிப்பிட்டார்

மூலம்/ஆக்கம் : TELOnews


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply