முக்கொம்பு அணை உடைப்புக்கு கண் திருஷ்டியே காரணம் : அமைச்சர் உதயகுமார்

விருதுநகர் மாவட்டத்தில் அரசின் சாதனைகளை விளக்கி அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் ஜெயலலிதா பேரவையினர் மற்றும் இளைஞர்கள் சைக்கிள் பேரணி நடத்தி வருகிறார்கள்.அருப்புக்கோட்டையில் நிறைவு பெற்ற சைக்கிள் பேரணியில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ராதாகிருஷ்ணன் எம்.பி. முன்னிலை வகித்தார். அமைச்சர்கள் ஆர்.பி.உதய குமார், கே.டி.ராஜேந்திர பாலாஜி ஆகியோர் 214 பயனாளிகளுக்கு ரூ.1.21 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

விழாவில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:-

ஏழை-எளிய மக்களுக்காகவே தனது வாழ்நாளை அர்ப்பணித்தவர் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா. அவர் மக்களுக்காக சிந்தித்து செயல்படுத்திய அனைத்து திட்டங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழக மக்களுக்கு தொடர்ந்து கொண்டு செல்லும் பணியினை சிறப்பாக செய்து வருகிறார்.

காவிரி உரிமை, எய்ம்ஸ் மருத்துவமனை, ஜல்லிக்கட்டு போன்ற முக்கிய உரிமைகளை அ.தி.மு.க. அரசு சட்டப்போராட்டம் நடத்தி பெற்று தந்துள்ளது.

தமிழகம் முழுவதும் நீர்நிலைகளில் குடிமராமத்து பணிகள் சிறப்பாக செய்யப்பட்டு வருகின்றன. உழைக்கும் மகளிருக்கு அம்மா இரு சக்கர வாகன திட்டத்தின் கீழ் வாகனங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் உழைக்கும் பெண்கள் பணிச்சுமை வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விவசாயியின் மகன் என்பதால் எளிதில் அணுகக்கூடிய சாமானிய முதல்வராக இருந்து வருகிறார். திட்டங்கள் உடனுக்குடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் முக்கிய அணையான மேட்டூர் அணை கடந்த சில வாரங்களுக்கு முன்பு வறண்டு கிடந்தது. இந்த அணை நிரம்புமா? விவசாயத்திற்கு தண்ணீர் கிடைக்குமா? என்றெல்லாம் விவசாயிகள் ஏங்கினர்.

ஆனால் கடந்த மாதத்தில் மட்டும் 4 முறை மேட்டூர் அணை நிரம்பி வழிந்துள்ளது. மேட்டூர் அணை மட்டுமல்ல, கன்னியாகுமரி பக்கம் சென்றாலும் பேச்சிப்பாறை நிரம்பி வழிகிறது. அதுபோல வைகை, பவானி சாகர், பெருஞ்சாணி உள்ளிட்ட அத்தனை அணைகளும் நிரம்பி வழிகின்றன.

பக்கத்து மாநிலங்களில் நாம் தண்ணீர் கேட்காமலேயே அவர்களே திறந்து விடுறார்கள். நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் திறந்து விடுங்கள் நாங்கள் அதை பெற்றுக்கொள்கிறோம் என்ற அளவிலே தமிழகத்தில் உள்ள பல்வேறு அணைகள், நீர் நிலைகள் நிரம்பி உள்ளன.

முதல்-அமைச்சருக்கு தண்ணீர் ராசி என்று நினைக்கிறேன். இங்கே பேசிய அமைச்சர் மற்றும் நிர்வாகிகளும் எடப்பாடி பழனிசாமிக்கு தண்ணீர் ராசி இருக்கிறது என்று குறிப்பிட்டார்கள்.

முக்கொம்பு அணை உடைப்புக்குக்கூட கண்திருஷ்டியே காரணமாக இருக்கலாம். அந்த அளவுக்கு மக்கள் நலப்பணிகளை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விரைவுபடுத்தி சிறப்பாக செய்து வருகிறார்.

ஜெயலலிதா வழியில் செயல்படும் இந்த அரசுக்கு தமிழக மக்கள் துணை நிற்பார்கள். இனிவரும் அனைத்து தேர்தல்களிலும் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அதிகாரி உதயகுமார் மற்றும் அ.தி. மு.க. நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply