பிரெக்சிட் விவகாரம்- எம்பிக்களின் 8 மாற்று திட்டங்களையும் நிராகரித்தது பிரிட்டன் பாராளுமன்றம்

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து பிரிட்டன் வெளியேறும் ‘பிரெக்சிட்’ நடவடிக்கையின் காலக்கெடு வருகிற 29-ந் தேதி முடிவடைகிறது. ஆனால் பிரெக்சிட்டுக்காக ஐரோப்பிய கூட்டமைப்புடன் பிரிட்டன் பிரதமர் தெரசா மே ஏற்படுத்திய ஒப்பந்தத்தை 2 முறை அந்நாட்டு பாராளுமன்றம் பெருவாரியான ஓட்டு வித்தியாசத்தில் நிராகரித்துவிட்டது.

அத்துடன் ஒப்பந்தம் இல்லா ‘பிரெக்சிட்’ தீர்மானமும் 2 முறை நிராகரிக்கப்பட்ட நிலையில், பிரெக்சிட்டை தாமதப்படுத்துவதற்கான தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது. இதனால் பிரெக்சிட்டின் காலக்கெடுவை நீட்டிக்க வேண்டுமென தெரசா மே ஐரோப்பிய கூட்டமைப்பிடம் கோரிக்கை வைத்தார். இதனை ஐரோப்பிய கூட்டமைப்பின் தலைவர் டொனால்டு டஸ்க் ஏற்றுக் கொண்டார்.

“பிரெக்சிட் ஒப்பந்தத்தை பிரிட்டன் பாராளுமன்றம் ஆதரித்தால் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேற மே மாதம் 22-ந் தேதி வரை காலக்கெடு வழங்கப்படுகிறது. மாறாக அந்த ஒப்பந்தம் நிராகரிக்கப்பட்டால் அடுத்த மாதம் (ஏப்ரல்) 12-ந் தேதிக்குள் வெளியேறியாக வேண்டும்” என்று டொனால்டு டஸ்க் கூறியுள்ளார்.

இதற்கிடையே, பிரெக்சிட் விவகாரத்திற்கு அறுதி பெரும்பான்மை அளிக்கக்கூடிய ஒப்பந்தத்தை முடிவுசெய்வதற்காக முன்னெப்போதும் இல்லாத வகையில், பிரிட்டனின் பாராளுமன்றத்தின் நடவடிக்கையை எம்பிக்கள் ஓட்டெடுப்பின் மூலம் தங்களது கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்தனர். உறுப்பினர்கள் எடுக்கும் முடிவை ஏற்றுக்கொள்வது தொடர்பாக எவ்வித உத்தரவாதத்தையும் அளிக்க முடியாது என்று பிரதமர் தெரசா மே தெரிவித்தார்.

இந்த பரபரப்பான சூழ்நிலைக்கு மத்தியில், பிரெக்சிட் தொடர்பாக நேற்று 8 மாற்று ஒப்பந்தங்களை எம்பிக்கள் முன்வைத்தனர். ஆனால் இந்த ஒப்பந்தங்களுக்கும் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகள் கிடைக்கவில்லை. அனைத்தும் நிராகரிக்கப்பட்டன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply