அதிமுகவுடன் கூட்டணி தொடரும்: பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பு
தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று கோவை பாராளுமன்ற தொகுதி பா.ஜனதா வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனை ஆதரித்து பல்லடத்திலும், திருப்பூர் பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் எம்.எஸ்.எம்.ஆனந்தனை ஆதரித்து வெள்ளியங்காடு நால்ரோடு, எம்.எஸ்.நகரிலும் திறந்த வேனில் நின்றபடி பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது:-
அதிமுக-தேமுதிக கூட்டணி இயற்கையான கூட்டணி. அதிமுக-தேமுதிக கூட்டணியை உடைக்க தி.மு.க. பல்வேறு சூழ்ச்சிகளுடன் கடுமையாக முயற்சி செய்தது. ஆனால் மக்கள் போற்றும் கூட்டணியாக அதிமுக தலைமையிலான கூட்டணி அமைந்துள்ளது. கருத்து கணிப்புகளில் இந்தியாவின் அடுத்த பிரதமராக மீண்டும் மோடி வருவார் என்று தெரிவிக்கிறது. நாட்டை காப்பதற்கு பிரதமர் மோடி வர வேண்டும். ஊழல்களின் மொத்த உருவமாக தி.மு.க.-காங்கிரஸ் கட்சிகள் இருந்ததை மக்கள் மறந்து விடவில்லை. மோடி ஊழல் இல்லாத ஆட்சியை கொடுத்துள்ளார்.
அதிமுக, தேமுதிக கட்சிகள் ராணுவ கட்டுப்பாடு கொண்டது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, விஜயகாந்த் ஆகியோர் திரையுலகில் இருந்து வந்தவர்கள். மக்களுக்கு நல்லதை செய்ய அரசியலுக்கு வந்தவர்கள். இந்த பாராளுமன்ற தேர்தலில் மட்டுமில்லாமல் வருகிற உள்ளாட்சி தேர்தல், வரும் சட்டமன்ற தேர்தலிலும் அதிமுக-தேமுதிக கூட்டணி உறுதியுடன் தொடரும்.
பல்லடம் பகுதியில் கைத்தறி, விசைத்தறி தொழில் அதிகம் உள்ளது. பா.ஜனதா வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றதும் டெல்லி சென்று நெசவாளர்களின் பிரச்சினையை எடுத்துக்கூறி, ஜி.எஸ்.டி.யை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். காடா துணி தயாரிப்பு உலகத்தரத்தில் மேம்படுத்தப்படும்.
பின்னலாடை நகரான திருப்பூரில் ஸ்மார்ட் சிட்டி திட்டம், 4-வது குடிநீர் திட்டம், பாதாள சாக்கடை திட்டம், அத்திக்கடவு-அவினாசி திட்டம் ஆகியவற்றை கொண்டு வந்த அரசு அதிமுக அரசு. அதிமுக வேட்பாளர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் வெற்றி பெற்றால், போக்குவரத்து நெரிசலை குறைக்க திருப்பூரில் மெட்ரோ ரெயில் திட்டம், சாயக்கழிவுநீரை சுத்திகரிப்பு செய்து அதில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் கொண்டு வர பிரதமரிடம் வலியுறுத்தப்படும்.
தென்னிந்திய நதிகளை இணைத்தால் நாடு வல்லரசாகும். தமிழக நதிகள் இணைப்பு திட்டத்தை உறுதியாக நிறைவேற்ற வேண்டும் என்று பிரதமரிடம் வலியுறுத்தப்படும். ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறைப்படுத்தப்படும். வேற்றுமைகளை மறந்து தேனீக்கள் போல் சுறுசுறுப்பாக பணியாற்றி கொங்கு மண்டலம் அதிமுக வின் கோட்டை என்பதை நிரூபிப்போம்.
இவ்வாறு அவர் பேசினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply