ரிசர்வ் வங்கியில் இருந்து பணத்தை திருடவில்லை : ராகுலுக்கு நிர்மலா சீதாராமன் பதில்
ரிசர்வ் வங்கியின் உபரி நிதி ரூ.1.76 லட்சம் கோடியை குறிப்பிட்ட கால இடைவெளியில் மத்திய அரசுக்கு அளிக்க ரிசர்வ் வங்கி நிர்வாக குழு ஒப்புதல் வழங்கியது.இந்த விவகாரத்தை முன் வைத்து மத்திய அரசை எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. ரிசர்வ் வங்கியில் இருந்து நிதியைத் திருடுவதால் பலனில்லை என ராகுல்காந்தி கூறினார்.
பொருளாதார சீரழிவில் இருந்து எவ்வாறு மீண்டு வருவது என்று தெரியாமல் பிரதமரும், மத்திய நிதி மந்திரியும் குழப்பத்தில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் புனேயில் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஆர்.பி.ஐ. உபரி நிதி தொடர்பாக மத்திய அரசு மீது குற்றச்சாட்டை சுமத்தும் முன்பு தனது கட்சியை சேர்ந்த முன்னாள் நிதி மந்திரிகளிடம் ராகுல்காந்தி ஆலோசித்திருக்க வேண்டும். திருட்டு குற்றச்சாட்டை முன் வைப்பதில் காங்கிரஸ் கட்சி நிபுணத்துவம் பெற்று விட்டது. அவர்கள் கூறும் குற்றச்சாட்டுகளுக்கு முக்கியத்துவம் அளிக்க விரும்ப வில்லை.
தேர்தல் தோல்விக்கு பிறகும் இதுபோன்ற விமர்சனங்களை காங்கிரஸ் தொடர்ந்து முன் வைத்து வருவது வியப்பளிக்கிறது. உபரி நிதி தொடர்பாக முடிவெடுப்பதற்காக, பிமல் ஜலான் குழுவை ரிசர்வ் வங்கிதான் அமைத்தது. நிதி ஸ்திரத்தன்மை உள்பட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து பலமுறை ஆலோசித்த பிறகுதான் உபரி நிதியை மத்திய அரசுக்கு வழங்க அந்த குழு முடிவு செய்தது.
ரிசர்வ் வங்கியின் நம்பகத்தன்மை தொடர்பாக எழுப்பப்படும் சந்தேகங்கள் கற்பனையானவை. ஆர்.பி.ஐ. அளிக்க முடிவு செய்துள்ள உபரி நிதியை எவ்வாறு பயன்படுத்துவது என்று அரசு இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply