கணக்கில் வராத 3 ஆயிரத்து 800 பேர் – 26 ஆயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை : அதிர்ச்சியில் உறைந்த இங்கிலாந்து

கொரோனா பாதிக்கப்பட்ட நபர்

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கபட்டது. தற்போது உலகின் 210 நாடுகளுக்கு பரவியுள்ள இந்த கொடிய வைரஸ் பெரும் மனித உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 31 லட்சத்து 92 ஆயிரம் பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 9 லட்சத்து 80 ஆயிரத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், இந்த கொடிய கொரோனாவுக்கு 2 லட்சத்து 26 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த வைரஸ் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளை புரட்டி எடுத்து வருகிறது. குறிப்பாக இங்கிலாந்து வைரசின் கோரப்பிடியில் சிக்கியுள்ளது.

நேற்றைய நிலவரப்படி அந்நாட்டில் ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 145 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. மேலும், அந்நாட்டில் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 21 ஆயிரத்து 678 ஆக இருந்தது.

இதற்கிடையில், சீனா உள்பட பல்வேறு நாடுகளில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்பான விவரங்களின் உண்மைத்தன்மையில் பல்வேறு சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு பலியானவர்களை கணக்கிடுவதில் ஏற்படும் சிக்கல்களால் இந்த குழப்பம் நிலவி வருகிறது.

குறிப்பாக ஆதரவற்றோர் இல்லங்களிலும், கிராமப்புற பகுதிகளிலும் கொரோனாவுக்கு உயிரிழப்போரின் தகவல்கள் எதுவும் அரசுத்துறையினருக்கு தெரியாமலேயே இருந்துவருகிறது.

இதனால் பல நாடுகள் வைரசுக்கு பலியானோர் தொடர்பான தகவல்களை மறு கணக்கீடு செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கணக்கீட்டின் போது கணக்கில் வராமல் ஏற்கனவே கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.

அதேபோல், இங்கிலாந்து நாட்டிலும் கொரோனா பரவிய நாள் முதல் கணக்கில் வரமால் வைரசுக்கு உயிரிழந்தவர்களின் விவரங்களை சேகரிக்கும் பணி நடைபெற்றது.

இந்நிலையில், இந்த மறு கணக்கீட்டு விவரங்கள் இன்று வெளியிடப்பட்டது. அதில் வைரசுக்கு கணக்கில் வரமால் ஏற்கனவே 3 ஆயிரத்து 811 பேர் உயிரிழந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த உயிரிழப்புகள் பெரும்பாலும் ஆதரவற்றோர் மற்றும் முதியோர் இல்லங்களை சேர்ந்தவர்களாக உள்ளனர்.

இந்த கணக்கீட்டின் படி, இங்கிலாந்து நாட்டில் ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 221 பேருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. மேலும், அங்கு நேற்று மட்டும் புதிதாக 601 பேர் பலியாகியுள்ளனர்.

இதனால் அந்நாட்டில் வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 26 ஆயிரத்து 97 ஆக அதிகரித்துள்ளது.

இதனால் உலக அளவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு அதிக உயிரிழப்புகளை சந்தித்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இத்தாலிக்கு அடுத்தபடியாக இங்கிலாந்து மூன்றாவது இடத்திற்கு சென்றுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply