பிள்ளையானுக்கு அமைச்சுப் பதவியை வழங்குவதாக மஹிந்த தரப்பு உறுதியளிப்பு

எதிர்வரும் பொதுத் தேர்தலில் வெற்றிபெற்றால் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவனேசதுரை சந்திரகாந்தன் அல்லது பிள்ளையானுக்கு அமைச்சு பதவி வழங்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

சிறையில் இருக்கும் பிள்ளையான் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கீழ் உள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் சார்பாக கிழக்கில் தேர்தலில் போட்டியிடுகின்றார்.

இந்நிலையில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்றால் அவருக்கு  அமைச்சு பதவியை வழங்குவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில்  உறுதி அளிக்கப்பட்டுள்ளது என பிள்ளையானுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எனினும் அவர் பிணை பெற்று சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டால் மட்டுமே அவர் அந்தப் பதவியைப் பெறுவார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சுட்டிக்காட்டியுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கு தொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட பிள்ளையன் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இருப்பினும் பிள்ளயனை சிறையில் அடைத்து, அமைச்சுப் பதவியைப் பெறுவதைத் தடுக்கும் முயற்சியில் சிலர் இருப்பதாக பிள்ளையானுக்கு நெருக்கமான ஒருவர் கூறியுள்ளார்.

2005 ஆம் ஆண்டு டிசம்பர் 25 ஆம் திகதி மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயத்திற்குள் வைத்து நத்தார் நள்ளிரவு ஆராதனையின் போது ஜோசப் பரராஜசிங்கம் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தில் அவரது மனைவி உட்பட சிலர் காயமடைந்திருந்தனர்.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக 2015 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 11 ஆம் திகதி கொழும்பிலுள்ள குற்றப்புலனாய்வு துறை தலைமையகத்திற்கு விசாரணைக்காக அழைக்கப்பட்ட பிள்ளையான் கைது செய்யப்பட்டிருந்தார்.

பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதால், அவருக்கு பிணை வழங்க மறுக்கப்பட்டு, இன்றுவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply