தெலுங்கானாவில் கல்லூரி மாணவியை ஆட்டோவில் கடத்தி கற்பழித்த 5 பேர் கும்பல்
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் கால்நடை பெண் மருத்துவரை 4 வாலிபர்கள் கற்பழித்து கொன்று உடலை எரித்தனர்.பெண் மருத்துவரின் மொபட்டின் டயரை பஞ்சராக்கி அவருக்கு உதவி செய்வதுபோல் நடித்து இந்த கொடூரத்தில் ஈடுபட்டனர். இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கைது செய்யப்பட்ட 4 பேரும் என்கவுண்டரில் சுட்டு கொல்லப்பட்டனர்.
இந்தநிலையில் ஐதராபாத்தில் மீண்டும் கல்லூரி மாணவி ஒருவர் கூட்டு பாலியல் வன்முறைக்கு உள்ளாகி இருக்கிறார்.
ஐதராபாத் அருகே கீசேரா பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் பகுதி நேரமாக ஒரு மருந்தகத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று இரவு வீட்டுக்கு செல்வதற்காக ஒரு ஆட்டோவில் ஏறினார்.
அப்போது அந்த ஷேர் ஆட்டோவில் மேலும் 2 பயணிகள் இருந்தனர். அவர்கள் வழியில் இறங்கி சென்றுவிட்டார்கள். பின்னர் கல்லூரி மாணவி இறங்க வேண்டிய இடத்தில் ஆட்டோவை நிறுத்தாமல் டிரைவர் வேகமாக ஓட்டிச் சென்றார்.
இதனால் அதிர்ச்சியடைந்த கல்லூரி மாணவி, கூச்சல் போட்டார். ஆனால் ஆட்டோவை நிறுத்தாமல் டிரைவர் ஓட்டி சென்றதால் உடனே மாணவி தனது தாய்க்கு செல்போனில் தகவல் தெரிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த தாய் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் கல்லூரி மாணவியின் செல்போன் சிக்னல்களை ஆய்வு செய்தனர். அப்போது மெச்சால் காடிகேசர் என்ற பகுதியில் இருந்து தனது தாய்க்கு செல்போனில் தகவல் தெரிவித்தது தெரிய வந்தது.
இதையடுத்து அந்த பகுதி முழுவதிலும் போலீசார் தேடுதல் வேட்டையை நடத்தினார்கள். மாணவியின் செல்போன் சிக்னல், ஊருக்கு ஒதுக்குப்புறமான அன்னோஜி கூடா என்ற பகுதியில் இருப்பதாக காட்டியது. இதையடுத்து அங்கு சென்று போலீசார் பார்த்த போது கல்லூரி மாணவி மயங்கிய நிலையில் கீழே கிடந்தார்.
உடனே அவரை மீட்ட போலீசார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். விசாரணையில் அவரை ஆட்டோ டிரைவரும், அவரது நண்பர்கள் 4 பேரும் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து இருப்பது தெரியவந்தது. மேலும் அவரை அடித்து துன்புறுத்தியும் உள்ளனர்.
இதையடுத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேரை கைது செய்தனர். தப்பி ஓடிய ஆட்டோ டிரைவரை தேடி வருகின்றனர். பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான மாணவி உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கடந்த 2019-ம் ஆண்டு நடந்த கால்நடை பெண் மருத்துவர் கற்பழித்து கொல்லப்பட்ட சம்பவத்துக்கு பிறகு பெண்கள் பாதுகாப்புக்காக பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்தது.
ஆனால் தற்போது கல்லூரி மாணவி ஒருவர் கொடூரமாக கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தெலுங்கானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply