கொரோனாவால் உயிரிழந்த பெண். மருத்துவர் சொல்லும் கருத்து! இந்த உண்மையில் எவ்வித மாற்றமும் இல்லை
அன்புள்ளவர்களே!
68 வயதுடைய பெண் நோயாளியொருவர் கொரோனாவினால் வைத்தியசாலையில் அனுமதித்தவுடனேயே இறந்துவிட்டார். அவரது இதயத்துடிப்பு நின்றதும் முயன்று போராடினோம்.நம்மோடு பெண் மருத்துவர் ஒருவரும் போராடினார்.
இருவரும் தாதியருமாய் போராடியும் அந்த அம்மையாரினை மீட்கமுடியவில்லை.
அவருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டது.
உங்களிடம் நான் ஒரு மருத்துவனாக சிலவற்றை முன்வைக்க விரும்புகின்றேன். சில குறுந்தகவல்கள் அந்தவிட்டமின், இந்த விட்டமின் எடுங்களென்று பரப்பபடுகின்றது. நாம் இந்தச் செய்தியை மிகவும் பொறுப்புணர்வுடன் துறைசார் மருத்துவ நிபுணர்களுடன் (immunologist, microbiologist) உரையாடி, ஒரு மருத்துவரென்னும் ஆதீத பொறுப்புணர்வுடன் பதிவுசெய்கின்றோம்.
விட்டமின் D,விட்டமின் C, மல்டி விட்டமின்(Multivitamins tablets) மாத்திரைகள் என்பவற்றை எடுக்கும்படி பரவிவரும் குறுந்தகவல்களை மருத்துவர்களின் ஆலோசனையில்லாது செவிமடுக்காதீர்.
தினமும் விட்டமின் 5000 units பாவிக்கவேண்டுமென்று சமூக ஊடகங்களில் பரவும் செய்தி பொறுப்புணர்வற்ற மருந்து நிறுவனங்கள் விற்பனையைப் பெருக்க உருவாக்கிவிட்டுள்ள செய்தியாகும்.
விட்டமின் D 5000 Units விட்டமின் D குறைபாடானவர்களுக்கே மருத்துவர்கள் எழுதுவதுண்டு.
ஏனையோர் தொடர்ச்சியாக குறிப்பிட்டகாலத்திற்கு மேலதிகமாக அதேயளவு எடுப்பார்களாயின், விட்டமின் D உடலில் அதிகரித்து நச்சுவிளைவையே (Toxicity) உருவாக்கும்.
அதுபோல் சில நோயாளர்கள் விட்டமின் C தொடர்ச்சியாக அதிகளவில் எடுக்கும்போது சிறுநீரகக்கல் உருவாகும் வாய்ப்புண்டு.
மல்டி விட்டமின்கள் நீங்கள் விரும்பிய பிராண்ட் வாங்கிக்கொள்ளலாம்.
சமூக ஊடகங்கள் முன்மொழியும் brand வாங்கவேண்டும் என்றில்லை.
அதேசமயம், அவை கொரோனாவை வெல்லுமென்று எந்தவொரு ஆய்வும் இல்லை. விட்டமின் குறைபாடானவர்கள், வயது முதிர்ந்தவர்கள் முதலியோருக்கே பிரயோசனமாகவிருக்கும்.
அடிக்கடி சுடுதண்ணீரில் ஆவிபிடிக்கவேண்டாம். சளி முதலியன இருக்கும்போது அது பிரயோசனமாகவிருக்கும். சும்மா சும்மா ஆவி பிடித்தீர்களாயின், வெப்ப ஆவி தீமையையே ஏற்படுத்தும்.
வெப்ப ஆவி உங்கள் மூச்சுக்குழாய்களில் எரிகாயங்களை ஏற்படுத்தலாம்.
மூச்சுக்குழாய்களில் புதிய கலங்கள் உருவாகும் வினைத்திறனை குறைக்கலாம்.சுகதேகியாக இருக்கும் ஒருவர், அடிக்கடி வெப்ப ஆவி சுவாசிப்பாராயின் (steam inhalation) அவருக்கு இத்தாக்கங்கள் உண்டாக வாய்ப்புண்டு.
இவ்வாறான தாக்கங்களுக்கு உள்ளான ஒருவர் கொரோனா நோய்க்கு உள்ளாகும்பட்சத்தில் மோசமான விளைவேயுண்டாகும்.
நீங்கள் கொரோனாவிலிருந்து பாதுகாப்பாக இருக்கவேண்டுமாயின், உங்கள் உடல் சுத்தம், உள நலம் என்பவற்றில் கவனம் செலுத்துங்கள்.
கடவுள் நம்பிக்கையுள்ளவர்கள் கடவுளையும் நம்புங்கள்.
காய்ச்சல் முதலிய அறிகுறிகள் இருக்குமாயின், நேர்மையாக நடவுங்கள்.பொது இடங்களுக்கு உங்கள் சுயநலத்திற்காய் செல்லாதீர்கள்.
நீரிழிவு நோய், இதய நோய் உள்ள உறவினர்களுடன் உங்களுக்கு காய்ச்சல் முதலியன இருக்கும்போது பழக முயற்சிக்காதீர்கள்.
அது நீங்கள் அவர்களுக்குச் செய்யும் பெரும் உபகாரமாகும். அதுபோல், உங்களுக்கு அப்படியான வருத்தங்கள் இருக்குமாயின், அதற்குரிய மருந்துகளை நியமமாக எடுங்கள். அலைபேசிகளினூடாக மருத்துவ ஆலோசனைகளை தக்காரிடம் பெறமுடியுமாயின் பெறுக.ஆனால், மருத்துவமனைக்கு செல்வதே நன்றென்று அவர்கள் கூறுவார்களாயின், அதனை நேர்மையோடு ஏற்றுக்கொள்ளுங்கள்.
உங்கள் சொந்த பந்தங்கள் இல்லாது தனியே செயற்படக்கூடியவர்களாயின், மருத்துவமனைக்கு உரிய அடையாள அட்டைகள்,அலைபேசி இலக்கங்களோடு தனித்தே செல்க.
இதற்கு உங்களுக்கு மிகவும் தைரியமான உள்ளம் வேண்டும்.அப்படியில்லாவிட்டால், உங்களுடன் அதிகம் நெருக்கமாய் இருக்கும் ஒருவரோடு செல்க.
உடலில் விட்டமின்களைக்காட்டிலும் நீர்ச்சத்து முக்கியம். நன்றாகத் தண்ணீர் குடியுங்கள். இளநீர் குடியுங்கள்.
பழச்சாறுகள் குடியுங்கள்.
ஜீவனி முதலியவற்றைக் குடியுங்கள்.
சிறுநீரக நோயாளிகளும் பொட்டாசியம் அதிகரிக்கும் இரத்த அழுத்த மருந்துகள் எடுப்பவர்களும் பழச்சாறுகளை மருத்துவரிடம் ஆலோசிக்காது தன்னிச்சையாக அதிகளவு குடிக்காதீர்கள்.
உங்களுக்கு கொரோனா அறிகுறிகள் இருந்தால், மழுப்பல் காரணங்களைத் தேடாது நேர்மையாக எதிர்கொள்ளுங்கள்.
கடைசிவரை இருந்துவிட்டு மருத்துவமனைக்கு இறுதித்தருணங்களில் வருகின்றீர்களாயின், மருத்துவர்களால் உங்களைக் காப்பாற்ற முடியாது. எனவே, மூச்செடுக்கக் கடினமாக இருந்தாலோ, நெஞ்சுவலி முதலியன இருந்தாலோ மருத்துவமனைக்கு செல்லுங்கள்.
பனடோல்(பரசிட்டமோல் முதலியன) காய்ச்சல்,மூட்டு நோ முதலியன இருந்தால் 6 மணித்தியாலத்திற்கு ஒருமுறை இரண்டு மாத்திரைகள் (1g) எடுத்துக்கொள்ளுங்கள்.
பணிசார் நிபுணர்கள் அல்லாதவர்களின் எந்தவொரு செய்தியையும் செவிமடுக்காதீர்.அப்படியான போலிச்செய்திகளைப் பரப்பாதீர்.உங்களின் ஆதீத அக்கறையுணர்வால் போலிச்செய்திகளை மக்களிடம் பரப்பும்போது, பாதக விளைவுகளைக்கூட ஏற்படுத்தும்.
சாதி,மத, இன அடையாளங்களெல்லாம் தோற்றுப்போய் நிற்கும் இடம் மருத்துவமனையின் கொரோனா விடுதியேயாகும். இன்று இறந்த அந்த அம்மையாரின் மகன் என்னிடம் சில வார்த்தைகள் கூரினார்.
அதனை நான் இங்கு பதியவிரும்பவில்லை.ஆனால், நான் பிறந்து வாழ்ந்ததன் பயனை அவரது வார்த்தைகளால் உணர்ந்து கொண்டேன்.
புத்தரின் ஆசிகள் இருக்கும் என்று கூறியவர், சுதாகரித்து உங்களுக்கு கத்திரகம தெய்யோவின் ஆசீர்வாதம் இருக்கும் என்றார்.
நான் அவரது தாயாரினை மீட்க முயற்சித்து தோற்றுப்போய் நின்றபோது, அவர் என் மனம் குளிருமாறு நன்றியைத் தெரிவிக்க விரும்பினார் என்று விளங்கிக்கொண்டேன்.
நான் அவருக்கு, புத்தரின் அருள் உங்கள் அம்மாவின் ஆன்மாவுக்கு இருக்குமென்று தேற்றிவிட்டேன்.
இந்தப்போராட்டம் ஓய்ந்து அரைமணித்தியாலத்தில் 26 வயது இளம்பெண், பேச்சும் நினைவும் இல்லாது அனுமதிக்கப்படுகின்றார்.
அவரை நாம் பார்த்துக்கொண்டிருக்கும்போது 40 வயது ஆண் ஒருவர் வலிப்போடு(convulsion) அனுமதிக்கப்படுகின்றார்.
இருவருக்கும் கொரோனா தோற்று உறுதிசெய்யப்பட்டது. இருவரது நிலைமையும் மோசமாகவிருந்தது. எனது கடமை நேரம் முடியவே, அடுத்த மருத்துவரிடம் பொறுப்பைக் கையளித்துவிட்டு இறந்துபோன தாயினையும் நினைவிழந்து நிற்கும் 26 வயதுப் பெண்ணையும் வலிப்போடு அவதியுற்ற ஆணினையும் நினைத்து நொந்தவாறு வீடு வந்தேன்.
மருத்துவ அனுபவங்களை அதிகமாய் பகிர்வதில்லை.
மருத்துவ சட்டதிட்டங்களை அனுசரித்தல் வேண்டும் என்பதும் அதற்குக் காரணம்.
இங்கு நாம் இவற்றைப் பதிவுசெய்வது யாதாயின், நம்மக்கள் மிக அலட்சியமாய் இருக்கின்றனர்.
ஆடி அமாவாசையென்று பெரும் திரளாகக் கூடி குளித்தனர்.
அந்த மதத்துக்கு அனுமதி, இந்த மதத்துக்கு அனுமதியில்லையென்று ஒப்புநோக்கி சண்டைசெய்கின்றனர்.
எல்லாவற்றுக்கும் தடைபோடச்சொல்லலாம்.
அதைவிடுத்து, ஒன்றைக்காட்டி இன்னொன்றை நியாயம் செய்கின்றனர். மனம்விட்டுச் சொல்கின்றேன்.
இளம் மருத்துவர்களும் பொதுமருத்துவம் சார்ந்த மேற்படிப்பு மருத்துவர்களும் மிகுந்த மன அழுத்தத்திற்குள் உள்ளனர்.
அவர்களுக்கே அதிக வேலை. அதுபோல் தாதியர்களும் வேலைச்சுமையால் சலிப்புற்றுள்ளனர்.
மருத்துவமனைகளின் வசதி உங்கள் அலட்சியங்களைத் தாங்கும் வலிமையில் இல்லை . மருத்துவர்கள் பற்றாக்குறை.
தாதியர் பற்றாக்குறை.
சிற்றூழியர் பற்றாக்குறை என்று மருத்துவமனை தடுமாறுகின்றது.
தயவுசெய்து சிந்தித்து ஒழுகுங்கள்.
நாம் நம்பும் கடவுள், இந்த நாட்டின் மக்களைக் காக்கவேண்டும் என்று வேண்டுகின்றேன்.
நன்றி
Dr. Krishnakumar Prathapan
(Senior Health officer in Colombo south hospital-kalubowila, srilanka)
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply