ஆப்கானிஸ்தான் பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறக்கூடாது : ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம்

ஆப்கானிஸ்தான் நாடு முழுவதையும் கடந்த ஆகஸ்ட் 14-ம் தேதி தலிபான்கள் கைப்பற்றினர். இதையடுத்து, பல்வேறு நாட்டு மக்களை அவரவர் நாடுகளுக்கு அனுப்பி வைக்கும் பணியில் அமெரிக்க ராணுவம் ஈடுபட்டு வந்தது. இதன்படி, நேற்று அமெரிக்க ராணுவத்தின் கடைசி வீரரும் ஆப்கானிஸ்தான் மண்ணில் இருந்து கிளம்பி தங்கள் தாயகம் சென்றார்.

அமெரிக்கா வெளியேறி விட்டாலும் மக்களுக்குத் தேவையான உதவிகளை ஐக்கிய நாடுகள் சபையின் மூலமாக செய்வோம் என அந்நாடு உறுதி அளித்தது.

இதற்கிடையே, ஆப்கானிஸ்தான் விவகாரம் தொடர்பாக அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் ஒன்றை முன்மொழிந்தன. அந்த தீர்மானம், “எந்த ஒரு நாட்டையும் அச்சுறுத்துவதற்கு அல்லது தாக்குதல் நடத்துவதற்கு ஆப்கானிஸ்தான் பயன்படுத்தப்படக் கூடாது; அந்த நாட்டில் பயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளிக்கக்கூடாது” என வலியுறுத்தியது.

மேலும் “ஆப்கானிஸ்தானிலிருந்து அனைத்து வெளிநாட்டினர் மற்றும் உள்நாட்டு மக்கள் பாதுகாப்பான மற்றும் ஒழுங்கான முறையில் வெளியேற தலிபான்கள் அனுமதிக்க வேண்டும்” எனவும் அந்த தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தியாவின் தலைமையில் காணொலி காட்சி வாயிலாக நடந்த ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்த தீர்மானத்தின் மீது ஓட்டெடுப்பு நடந்தது.

இதில் 13 நாடுகள் இந்தத் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தன. எந்த ஒரு நாடும் தீர்மானத்துக்கு எதிராக வாக்களிக்கவில்லை. அதேவேளையில், நிரந்தர உறுப்பு நாடுகளான ரஷ்யா மற்றும் சீனா இந்த ஓட்டெடுப்பை புறக்கணித்தன. எனினும் 13 நாடுகள் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்ததால் தீர்மானம் வெற்றிகரமாக நிறைவேறியது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply