ஜப்பான் பிரதமர் சுகாவுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை
அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் நடந்த ‘குவாட்’ உச்சி மாநாட்டின் இடையே ஜப்பான் பிரதமர் யோஷிஹிடே சுகாவுடன் நேற்று இரு தரப்பு பேச்சு வார்த்தை நடத்தினார்.
இந்த பேச்சு வார்த்தையில் இந்தியாவின் புல்லட் ரெயில் திட்டம் மிக முக்கியமான இடம் பிடித்தது. இந்த திட்டத்தின் முக்கியத்துவம் குறித்து விவாதித்த இரு தலைவர்களும், இந்த திட்டம் நன்றாக சென்று கொண்டிருப்பதாக திருப்தி தெரிவித்தனர்.
மும்பை-ஆமதாபாத் அதிவிரைவு ரெயில் திட்டத்தை சுமுகமாக, உரிய கால கட்டத்தில் செயல்படுத்துவதற்கு தேவையான முயற்சிகளை முன்னெடுப்பதற்கு இரு தலைவர்களும் உறுதி பூண்டனர்.
மும்பை-ஆமதாபாத் இடையேயான இந்த புல்லட் ரெயில் திட்டம் ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் கோடி மதிப்பிலானது. இதில் ரூ.88 ஆயிரம் கோடி ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகமை மூலம் வழங்கப்படுகிறது.
ஜப்பான் பிரதமர் சுகாவுடன் நடத்திய சந்திப்பு பற்றி பிரதமர் மோடி டுவிட்டரில் குறிப்பிடுகையில், “ ஜப்பான், இந்தியாவின் மதிப்புக்குரிய கூட்டாளி நாடுகளில் ஒன்று. ஜப்பான் பிரதமர் சுகாவுடன் இரு தரப்பு ஒத்துழைப்புக்கு வலுவூட்டும் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினேன். இந்தியா, ஜப்பான் இடையேயான வலுவான உறவு, ஒட்டுமொத்த பூமிக்கும் நல்லது” என கூறி உள்ளார்.
ஆப்கானிஸ்தான் விவகாரம் பற்றியும் இரு தலைவர்களும் விவாதித்தனர். ராணுவ தளவாடங்கள், தொழில்நுட்பங்கள் உள்பட இரு தரப்பு பாதுகாப்பு, ராணுவ ஒத்துழைப்பை அதிகரிக்கவும் இரு தரப்பும் ஒப்புக்கொண்டனர்.
பிரதமர் மோடி, குவாட் உச்சி மாநாட்டின் இடையே ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரீசனுடனும் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த பேச்சு வார்த்தையின்போது ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய 3 நாடுகள் உருவாக்கியுள்ள ஆக்கஸ் கூட்டணி பற்றியும் விவாதிக்கப்பட்டது.
இந்த சந்திப்பு பற்றி பிரதமர் மோடி வெளியிட்ட டுவிட்டர் பதிவில், “எனது சிறந்த நண்பர் ஸ்காட் மோரீசுனுடன் கலந்துரையாடுவது எப்போதுமே அற்புதமான அனுபவம் ஆகும். நாங்கள் வர்த்தகம், வணிகம், எரிசக்தி மற்றும் பல துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது பற்றி விரிவாக பேசினோம்” என கூறி உள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply