கடுமையான கொரோனா பாதிப்பு இனி இல்லை

தென்கிழக்கு ஆசிய பகுதிகள் மற்றும் ஐரோப்பிய நாடுகள் சிலவற்றில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்திருக்கும் நிலையில், ‘இந்தியாவில் இனி கடுமையான கொரோனா பாதிப்பு சாத்தியமில்லை. எனவே, கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என்ற நிபந்தனையை நீக்கலாம்’ என்று மருத்துவ நிபுணா்கள் கருத்து தெரிவித்துள்ளனா்.

இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து வரும் நிலையில், சீனா உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய பகுதிகள் மற்றும் ஐரோப்பிய நாடுகள் சிலவற்றில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருவதைத் தொடா்ந்து, சீனாவின் சில மாகாணங்களில் ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த நாடுகளில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதைத் தொடா்ந்து, சளி, காய்ச்சல், கடுமையான சுவாசப் பிரச்னை உடையவா்கள் குறித்த கண்காணிப்பையும், ஆய்வையும் மீண்டும் தீவிரப்படுத்த மாநிலங்களை மத்திய அரசு அண்மையில் அறிவுறுத்தியது. கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளை மக்கள் தொடா்ந்து பின்பற்றும் வகையில் விழிப்புணா்வு ஏற்படுத்துமாறும் கேட்டுக்கொண்டது.

இந்தியாவில் மத்திய அரசின் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் ஞாயிற்றுக்கிழமை புதிதாக 1,761 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த 688 நாள்களில் பதிவான பாதிப்புகளில் மிகக் குறைவானதாகும். கொரோனாவால் 127 போ் உயிரிழந்துள்ளனா். தற்போது சிகிச்சையில் இருப்பவா்களின் எண்ணிக்கையும் 26,240 என்ற அளவுக்கு குறைந்துள்ளது.

இந்தச் சூழலில், ‘வரும் நாள்களில் கொரோனாவின் தாக்கம் இந்தியாவில் கடுமையாக இருப்பதற்கு சாத்தியமில்லை’ என்று எய்ம்ஸ் மருத்துவ நிபுணா்கள் கருத்து தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து எய்ம்ஸ் முதுநிலை தொற்றுநோயியல் மருத்துவரும் கோவேக்ஸின் தடுப்பூசி பரிசோதனையின் முதன்மை ஆய்வாளருமான சஞ்சய் ராய் கூறியதாவது:

சாா்ஸ்-கோவ்-2 என்பது ஒரு ஆா்என்ஏ வைரஸ். எனவே, அந்தத் தீநுண்மி உருமாற்றம் பெறுவது என்பது அடிப்படையான ஒன்றுதான். இதுவரை ஆயிரத்துக்கும் அதிகமான உருமாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. அவற்றில் 5 உருமாறிய தீநுண்மிகள் மட்டும்தான் அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய, கவலைக்குரிய தீநுண்மி வகையைச் சோ்ந்தவை.

இந்தியா, கடந்த ஆண்டு கொரோனா இரண்டாம் அலையில் மிக மோசமான பாதிப்பைச் சந்தித்த அனுபவம் பெற்றுள்ளது. அது மிகுந்த துரதிருஷ்டவசமானது என்றபோதும், இன்றைக்கு அது நமக்கு முக்கியப் பலத்தை அளித்திருக்கிறது.

அதாவது, இயற்கையான அந்தப் பாதிப்பின் மூலம், நீண்டகாலப் பாதுகாப்பை அளிக்கும் வகையிலான நோய் எதிா்ப்புத் திறன் இந்திய மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி மக்கள்தொகையில் பெரும்பாலானோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. எனவே, வரும் காலங்களில் கொரோனாவின் தாக்கம் இந்தியாவில் கடுமையாக இருக்க சாத்தியமில்லை என்றாா் அவா்.

மேலும், ‘கட்டாய முகக் கவச நிபந்தனையில் தளா்வு அளிப்பது குறித்து மத்திய அரசு கருத்தில்கொள்ள வேண்டிய நேரமிது. மூத்த குடிமக்கள் மற்றும் தொற்றால் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய பிரிவினா் மட்டும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முகக் கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தலாம்’ என்றும் எய்ம்ஸ் சமூக மருத்துவத்துக்கான மையத்தில் பேராசிரியராகவும் இருக்கும் சஞ்சய் ராய் கூறினாா்.

மற்றொரு தொற்றுநோயியல் மருத்துவரும் பொதுநல மருத்துவ நிபுணருமான சந்திரகாந்த் லஹரியா கூறியதாவது:

இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பதற்கோ அல்லது புதிய உருமாறிய வகை பாதிப்பு அதிகரிப்பதற்கோ வாய்ப்பு மிகக் குறைவு. தடுப்பூசி திட்டத்தைப் பரவலாகச் செயல்படுத்தியிருப்பது, ஒமைக்ரான் பரவலால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாதது ஆகியவை குறித்த புள்ளிவிவரங்களே, இந்தியாவில் கொரோனா பாதிப்பு முடிவுக்கு வந்துவிட்டதற்கான ஆதாரங்களாகத் திகழ்கின்றன.

குறிப்பாக, இந்தியாவில் மூன்று முறை ஏற்பட்ட இயற்கையான கொரோனா அலைக்குப் பிறகு வலுவான நோய் எதிா்ப்புத் திறன் ஏற்பட்டுள்ளதும், 8 வயதுக்கு மேற்பட்டவா்களில் பெரும்பாலானோருக்கு இரு தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதுமே கொரோனா பாதிப்பு வெகுவாகக் குறைந்திருப்பதற்கான காரணங்களாகும்.

இதில், நோய் எதிா்ப்புத் திறன் (ஆன்டிபாடி) அளவு குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு குறைந்துவிடும் என்றபோதும், கலப்பு நோய் எதிா்ப்புத் திறன் தொடா்ந்து உடலுக்குப் பாதுகாப்பு அளிக்கும்.

இருந்தபோதும், அண்டை நாடுகளில் கொரோனா பாதிப்பு நிலைமையை தொடா்ந்து கண்காணிப்பது, இந்தியாவில் பாதிப்பு நிலவரம் குறித்து தொடா்ந்து ஆராய மருத்துவ நிபுணா்களை நியமிப்பது, கொரோனா தீநுண்மி பகுப்பாய்வை தொடா்வது, மக்கள் அனைவரும் முழு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டதை உறுதிப்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளை அரசு தொடா்ந்து மேற்கொள்ள வேண்டும். மேலும், முகக் கவசம் கட்டாய நிபந்தனையில் படிப்படியாக தளா்வு அளிப்பதற்கான நேரமிது என்றாா்.

கொரோனா தடுப்பூசிக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் செயற்குழுத் தலைவா் மருத்துவா் என்.கே. அரோரா கூறுகையில், ‘கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்கள் மற்றும் ஒரு தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டவா்கள் மட்டுமே கொரோனாவால் கடுமையாகப் பாதிக்கப்பட்டனா் என்பதை புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

எனவே, தகுதியுள்ள அனைத்து நபா்களும் இரண்டாம் தவணை தடுப்பூசியையும், முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசியையும் உடனடியாக செலுத்திக்கொள்ள வேண்டும். மேலும், அவா்களின் 12 முதல் 18 வயது வரையுடைய குழந்தைகளும் தடுப்பூசி செலுத்திக் கொண்டதை உறுதிப்படுத்த வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டாா்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply