பூமி சுற்று வட்டப்பாதையில் நுழைந்து, மோதி பெரும் பாதிப்பு ஏற்படுத்த கூடிய சிறுகோள்கள்
அமெரிக்க விண்வெளி அமைப்பான நாசா, கிரக பாதுகாப்புக்கான பணியை நிர்வகிக்க கிரக பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அலுவலகம் ஒன்றை நிறுவி உள்ளது. இதன் சார்பில் விண்வெளிக்கு விண்கலம் ஒன்றை நாசா அனுப்பியது.
இந்த நிலையில், பூமிக்கு ஆபத்து ஏற்படுத்தும் என கணிக்கப்பட்ட டிடிமோஸ் பைனரி என்ற சிறுகோளை, நாசா அனுப்பிய விண்கலம் கடந்த செப்டம்பர் 27-ந்தேதி மோதி அதன் பயணதிசையை மாற்றியது.
இதனால், அந்த சிறுகோளால் பூமிக்கு ஏற்படவிருந்த ஆபத்து முறியடிக்கப்பட்டது. இதுபோன்ற பூமிக்கு ஆபத்து ஏற்படுத்த கூடிய சிறுகோள்கள் பற்றிய ஆய்வு தொடர்ந்து வருகிறது. அதில், பூமிக்கு மிக அருகே காணப்படும் 3 புதிய சிறுகோள்களை வானியல் ஆய்வாளர்கள் சமீபத்தில் கண்டறிந்து உள்ளனர்.
எனினும் அவை, சூரிய குடும்பத்தின் உட்பகுதியில் மறைந்து காணப்படுகின்றன. இதனால் அவற்றை கண்டறிவது சிரமம் என்ற நிலை இருந்தது. இந்த 3 சிறுகோள்களில் ஒன்று 1.5 கிலோ மீட்டர் அகலம் கொண்டது. என்றாவது ஒரு நாள், தனக்கென தனி சுற்று வட்டப்பாதை கொண்ட அந்த சிறுகோள், பூமியின் சுற்று வட்டப்பாதையின் குறுக்கே வர கூடும் என கணிக்கப்பட்டு உள்ளது. அப்படி பூமியை நேருக்கு நேராக சந்திக்கும்போது, அதனால் பெரும் பாதிப்பு ஏற்படுத்தும் சாத்தியம் உள்ளது.
இதுபற்றி சர்வதேச அளவிலான விஞ்ஞானிகள் குழு தீவிர ஆராய்ச்சியில் இறங்கியுள்ளது. இதுபற்றி பூமி மற்றும் கோள்களுக்கான ஆய்வகத்தின் வானியல் நிபுணர் மற்றும் இந்த ஆய்வின் தலைவரான ஸ்காட் எஸ். ஷெப்பர்டு கூறும்போது, இதற்காக, சிலி நாட்டில் உள்ள செர்ரோ தொலோலோ சர்வதேச அமெரிக்க ஆய்வகத்தில் உள்ள பிளான்கோ எனப்படும் 4 மீட்டர் நீளம் கொண்ட தொலைநோக்கி பயன்படுத்தப்பட்டது. அதில் உள்ள டி.இ.கேம் எனப்படும் கேமிராவை பயன்படுத்தி ஆய்வு மேற்கொண்டோம்.
இதில், பூமி மற்றும் வெள்ளி ஆகியவற்றின் சுற்று வட்டப்பாதைகளின் உட்பகுதியில் இந்த 3 குறுங்கோள்கள் காணப்பட்ட நிலையில், சூரியனின் ஒளி பிரதிபலிப்பு ஏற்பட்டு அவற்றை கண்டறிவது சவாலான பணியாக இருந்தது என கூறியுள்ளார். எனினும், ஆய்வாளர்களின் முயற்சியின் பயனாக 1 கிலோ மீட்டர் குறுக்களவு கொண்ட, பூமியை மிக நெருங்கிய நிலையிலான இரு குறுங்கோள்களை அவர்கள் கண்டறிந்து உள்ளனர்.
இந்த ஆய்வக கண்டுபிடிப்புகள் தி ஆஸ்டிரானாமிகல் ஜர்னல் செய்தி இதழில் வெளியிடப்பட்டு உள்ளது. பூமிக்கு அருகே உள்ள சிறுகோள்களை பற்றிய கணக்கெடுப்பை நிறைவு செய்வதற்கு, இதுபோன்ற உள்ளடங்கிய பகுதியில் உள்ள சிறுகோள்களின் மொத்த எண்ணிக்கையை பற்றி அறிவதும் அவசியம். அவற்றில், பூமிக்கு பாதிப்பு ஏற்படுத்த கூடிய அதிக சாத்தியமுள்ள சில குறுங்கோள்களும் அடங்கும். அவை பிற ஆய்வுகளில் கண்டறியப்படுவதில்லை என அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இவற்றில் பூமிக்கு மிக அருகே உள்ள 1.5 கிலோமீட்டர் அகலம் கொண்ட குறுங்கோளுக்கு 2022 ஏ.பி.7 என பெயரிடப்பட்டு உள்ளது. மற்ற இரு சிறுகோள்கள் 2021 எல்.ஜே.4 மற்றும் 2021 பி.எச்.27 என பெயரிடப்பட்டு உள்ளது. இவை இரண்டும் பூமியின் சுற்று வட்டப்பாதையில் இருந்து தொலைவில் பாதுகாப்புடனேயே உள்ளது.
ஆனால், 1 கிலோ மீட்டர் வரை அகலம் கொண்ட சிறுகோள்களை கிரகங்களை அழிக்க கூடியவை என்ற வகைப்பாட்டிலேயே விஞ்ஞானிகள் வைத்துள்ளனர். இந்த 2021 பி.எச்.27 சிறுகோளானது சூரியனுக்கு மிக அருகில் காணப்படும் விஞ்ஞானிகளுக்கு தெரிந்த சிறுகோள்.
சூரிய மண்டலத்தில் அதிக ஈர்ப்பு சக்தி கொண்ட இந்த சிறுகோளானது வட்டப்பாதையில் சுற்றி வரும்போது, அதன் மேற்பரப்பு காரீயம் என்ற உலோகம் உருக கூடிய அளவுக்கு அதிக வெப்பநிலையுடன் காணப்படும். பூமிக்கு மிக அருகே இதுபோன்ற அளவில் பெரிய சிறுகோள்கள் ஒரு சில எண்ணிக்கையிலேயே இருக்க கூடும் என்றும் அவை இன்னும் கண்டறியப்படாமல் உள்ளன என்றும் ஷெப்பர்டு கூறியுள்ளார்.
இதுவரை, பூமியின் சுற்று வட்டப்பாதையில் முழுவதும் வர கூடிய 25 சிறுகோள்கள் மட்டுமே கண்டறியப்பட்டு உள்ளன. ஏனெனில் சூரியனின் ஒளி பிரதிபலிப்புக்கு அருகே அவற்றை கண்டறிவது சுலபமல்ல என்றும் அவர் கூறியுள்ளார். இந்த ஆய்வானது, நமது சூரிய குடும்பத்தில் உள்ள சிறிய பொருட்கள் எந்தளவுக்கு பரவி கிடக்கின்றன என்பது பற்றிய புரிதலுக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருக்கும் என அவர் கூறியுள்ளார். இந்த 3-வது பெரிய சிறுகோள் எப்போது பூமியின் சுற்று வட்டப்பாதையில் வரும் என்ற கால அளவு நிபுணர்களால் அறியப்படாத சூழலில், அதனை முறியடிக்கும் வகையில், நாசா, கிரக பாதுகாப்பு பணியை நிர்வகித்து வருவது கவனத்தில் கொள்ளத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply