தயா-ஜோர்ஜ் மீதான விசாரணை தொடரும் : புலனாய்வுப் பிரிவினர்

தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஷ்ட உறுப்பினர்களாகக் கருதப்படும் தயா மாஸ்டர், ஜோர்ஜ் மாஸ்டர் ஆகியோரது நடவடிக்கைகள் குறித்த விசாரணைகள் தொடரும் என புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். குறித்த இருவரும் அரசாங்கத்திற்கு எதிராக செயற்பட்டார்களா என்பது குறித்து விரிவான விசாரணைகள் நடத்தப்படும் எனவும் அவர்கள் நீதிமன்றில் குறிப்பிட்டுள்ளனர்.

வேலாயுதம் தயாநிதி எனப்படும் தயா மாஸ்டர் மற்றும் குமரன் பஞ்சரட்னம் எனப்படும் ஜோர்ஜ் மாஸ்டர் ஆகியோர் நேற்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர். தயா மாஸ்டரின் பிணைப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட அரசரட்னம், தனது பொறுப்பை வாபஸ் பெற்றுக் கொண்டதாகவும், அவருக்கு பதிலாக தயா மாஸ்டரின் சகோதரி பிணைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் நீதிமன்றில் அறிவிக்கப்பட்டது.

அகதி முகாமில் அடைக்கலம் பெற்றிருந்த காலப்பகுதியில் குறித்த இருவரும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்டார்களா, அகதிகளை அரசாங்கத்திற்கு எதிராக தூண்டினார்களா என்பது குறித்து விசாரணை நடத்தப்படவுள்ளது.

இவர்கள் இருவரும் இரகசியமான முறையில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இணைந்து செயற்பட்டார்களா என்பது குறித்தும் ஆராயப்பட உள்ளதாக புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். நான்கு மாதங்களுக்கு முன்னர் அகதி முகாமொன்றில் அடைக்கலம் பெற்றிருந்த போது இவ்விருவரும் கைது செய்யப்பட்டு, பின்னர் 2.5 மில்லியன் ரூபா தனிப்பட்ட பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply