வடக்கில் சீனாவின் பிரசன்னம் ஆமை புகுந்த வீடாக மாறும் இலங்கை : சிறிரெலோ உதயராசா
வடக்கில் சீனாவின் பிரசன்னம் ஆமை புகுந்த வீடாக மாறும் இலங்கை.. சிறிரெலோ உதயராசா தெரிவிப்பு
சீன தூதுவரின் வடக்கு விஜயம் தொடர்பாக தமது விசனத்தை தெரிவித்துள்ள சிறிரெலோ கட்சியின் செயலாளர் நாயகம் ப.உதயராசா அவர்களின் ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:-
முன் எப்போதும் இல்லாத அளவிற்கு இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்துள்ள நிலையில் தற்போது மெல்ல மெல்ல தமிழர்கள் செறிந்து வாழும் வடக்கு மாகாணத்திலும் சீனாவின் பிரசன்னம் அதிகரித்து வருவதை நேற்றைய தினம் சீன தூதுவர் வவுனியாவிற்கு விஜயம் செய்து வவுனியா மக்களுக்கான வாழ்வாதார உதவிகளை வழங்கி வைத்தமை மூலம் மேலும் உறுதியாகியுள்ளது.
இவர்களது திடீர் அக்கறை காலம் காலமாக எமது மக்களுக்கான ஆக்கப்பூர்வமான பல உதவிகளை வழங்கி எமது மக்களின் வாழ்வியலையும் கலாச்சாரத்தையும் எமக்கிருக்கும் அரசியல் பிரச்சனைகளையும் உணர்ந்து செயற்படும் எமது அயல் நாடான இந்தியாவை ஆத்திரமூட்டும் செயலாக அமையலாம்.
நீண்ட காலமாக இலங்கை மக்களுக்கும் வடக்கு, கிழக்கு, மலையக மக்களுக்கும் சுகாதார உதவிகள், வீட்டு திட்டங்கள் புகையிரத பாதைகள் என நிலையான அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப் படுத்துவதுடன் கொரோனா பெரும் தொற்றின் போதும் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் போதும் எமது மக்கள் மீண்டெழ தன்னாலான உதவிகளை வழங்கிய இந்தியாவின் நலனை பாதிக்கும் வகையில் வடக்கு மாகாணத்தை சீனா பயன்படுத்த அனுமதிப்பது நாம் இந்தியாவிற்கு செய்யும் துரோகமாகவே அமையும்.
தன் பொருளாதார நலனையும் பிராந்திய அச்சுறுத்தல்களையும் நோக்கமாக கொண்டு ஏனைய நாடுகளுக்கு உதவுவது போன்று பாசாங்கு காட்டி ஆமை புகுந்த வீடு போல் தாம் புகுந்த நாடுகளை விளங்க விடாமல் செய்யும் சீனாவை சுதந்திரமாக செயற்பட அனுமதிப்பது இந்தியா உள்ளிட்ட எமது நலன் விரும்பும் நாடுகளிடம் எம்மை தனிமைப்படுத்தி எதிர்காலத்தில் எம்மை இதைவிடவும் பாரதூரமான வீழ்ச்சிக்கு இட்டு செல்லும் செயற்பாடாகவே அமையும்.
இதை இலங்கை அரசாங்கம் புரிந்து செயற்பட வேண்டியதுடன் வடக்கு மாகான அரசியல் பிரதிநிதிகளும் மக்களும் விழித்துக் கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். இது தொடருமானால் சீனாவிற்கு எதிரான பாரிய ஆர்ப்பாட்டத்தை முன்னெடுப்போம்.
ப.உதயராசா
செயலாளர் நாயகம்
சிறி தமிழீழ விடுதலை இயக்கம்
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply