ஜனாதிபதி ரணில் என்ன முட்டுக்கட்டை போட்டாலும் ஜனாதிபதித் தேர்தல் நிச்சயமாக இடம்பெற்றே தீரும் : அனுரகுமார திஸநாயக்க எம். பி
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எந்த விதமான முட்டுக்கட்டை போட்டாலும் சரி ஜனாதிபதி தேர்தல் நிச்சயம் நடந்தே தீரும் என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸநாயக்க எம். பி தெரிவித்தார். அம்பாறை மாவட்ட கரையோர பிரதேச வர்த்தக பிரமுகர்களை வெள்ளிக்கிழமை(12) மாலை காரைதீவில் சந்தித்து கலந்துரையாடிய போது மேற்கண்டவாறு தனது உரையில் குறிப்பிட்டார்.
மேலும் அங்கு கருத்து தெரிவிக்கையில்
எமது நாட்டு மக்கள் காலம் காலமாக தொடர்ந்தேச்சையாக நாட்டையும், மக்களையும் அழித்து வருபவர்களுக்கே வாக்குகளை வழங்கி வந்திருக்கின்றார்கள். இதனால்தான் நாடு அனைத்து விதங்களிலும் கெட்டு குட்டி சுவராகி இருக்கின்றது.
இனவாதிகளும், ஊழல்வாதிகளும், இந்நாட்டை ஆண்டதால் தான் நாட்டில் இனவாதம் மேலோங்கி பொருளாதாரம் சீரழிந்து அனைத்து விதத்திலும் நாடு பின்னடைந்து காணப்படுகிறது.இனவாதத்தை முதலீடாக பயன்படுத்தி ஆட்சி நடத்திய ராஜபக்ஸக்களால் நாட்டை கட்டியெழுப்ப முடியாது. மத்திய வங்கி கொள்ளையில் ஈடுபட்ட ரணில் விக்கிரமசிங்கவால் நாட்டை கட்டியெழுப்ப முடியாது.
வீடமைப்பு அமைச்சின் பணத்தை வீணடித்த சஜித் பிரேமதாஸவால் நாட்டை கட்டியெழுப்ப முடியாது. ரணில் அரசாங்கத்திடம் இருந்து மதுபான விற்பனைசாலை அனுமதி பத்திரம் பெற்ற எம். பிகள் சஜித்துடன் உள்ளனர். இதை சஜித் மறுப்பாரா?
சஜித் தரப்பினர் பகலில் ரணி விக்கிரமசிங்கவுடன் ஊடல் செய்கின்றனர், இரவில் கூடல் செய்கின்றனர். ரணில் விக்கிரமசிங்க என்ன முடிச்சுகளை போட்டாலும் அடுத்த இரண்டரை மாதங்களுக்கு இடையில் ஜனாதிபதி தேர்தல் நடந்தேயாகும்.
இத்தேர்தலில் தேசிய மக்கள் சக்தி மகத்தான வெற்றியை பெற்று அதன் மூலமாக எமது நாட்டு மக்கள் விரும்புகின்ற மக்கள் ஆட்சி நிச்சயம் மலரும். எமது ஆட்சியில் இனவாதம் இருக்காது. பொருளாதார மாட்சி ஏற்படும். எமது மக்களுக்கு மீட்சி ஏற்படும்.
தென்னிலங்கை மக்கள் தேசிய மக்கள் சக்தியுடன் ஒன்றித்து நிற்கின்றனர். அதே போல தேசிய மக்கள் சக்தி மூல்மாக மக்கள் ஆட்சி உருவாக்கப்படுவதில் கிழக்கு மக்களும் பங்காளிகளாக இணைய வேண்டும்.
மாற்றுத்துக்காக நாம் அனைவரும் ஒன்றிணைவோம். இலங்கையர்களாக நாம் அனைவரும் வாழ்வோம். புதிய தேசத்தை கட்டியெழுப்புவோம்.என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply