நாட்டை வங்குரோத்துக்கு தள்ளிய ராஜபக்ஷர்களின் ஒத்துழைப்பை பெறும் வேட்பாளருக்கு ஆதரவு வழங்கபோவதில்லை : பாட்டலி சம்பிக்க ரணவக்க
ராஜபக்ஷர்கள் ஒத்துழைப்பு வழங்கும் ஜனாதிபதி வேட்பாளருக்கு நாங்கள் ஆதரவு வழங்க போவதில்லை. ஏனெனில் இந்த நாட்டை ராஜபக்ஷர்கள் தான் வங்குரோத்து நிலைக்கு தள்ளி ஒவ்வொரு குடும்பங்களையும் நெருக்கடிக்கு தள்ளியுள்ளார்கள். பொருளாதார படுகொலையாளிகள் என்று உயர்நீதிமன்றத்தால் பெயர் குறிப்பிடப்பட்ட ராஜபக்ஷர்களுக்கு எதிராக எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
கொழும்பில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
நாட்டை கட்டியெழுப்பும் விரிவான செயற்திட்டத்தை நாங்கள் வெளிப்படுத்தியுள்ளோம்.பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கும்,குடும்பங்களின் தரத்தை மேம்படுத்துவதற்கும் குறுகிய மற்றும் நீண்டகால அடிப்படையில் அமுல்படுத்தப்பட வேண்டிய திட்டங்களை முன்வைத்துள்ளோம்.
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் உத்தியோகபூர்வமான அறிவிப்பு விடுக்கும் அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு பொறுப்பாக்கப்பட்டுள்ளது.இருப்பினும் ஒரு தரப்பினர் ஏதாவதொரு வழியில் தேர்தலை பிற்போடுவதற்கு விசேட கவனம் செலுத்தியுள்ளார்கள்.
அரசியலமைப்பில் திருத்தம் செய்யும் வகையில் சட்ட வரைவு ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த திருத்தத்தை நிறைவேற்றுவதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் மக்கள் வாக்கெடுப்புக்கும் செல்ல நேரிடும். ஜனாதிபதி தேர்தலுக்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடைய ஒரு விவகாரத்துக்கு மக்கள் வாக்கெடுப்புக்கு செல்லும் போது ஜனாதிபதி தேர்தல் நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படும்.
ராஜபக்ஷர்கள் ஒத்துழைப்பு வழங்கும் ஜனாதிபதி வேட்பாளருக்கு நாங்கள் ஆதரவு வழங்க போவதில்லை,ஏனெனில் ராஜபக்ஷர்கள் தான் இந்த நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளினார்கள்.2042 ஆம் ஆண்டு வரை கடன் செலுத்த வேண்டியள்ளது.இந்த நிலைமையை ராஜபக்ஷர்கள் தான் தோற்றுவித்தார்கள்.
அதேபோல் பொருளாதார படுகொலையாளிகள்,பெற்றோலிய கூட்டுத்தாபனத்தை கொள்ளையடித்தவர்கள்,உர இறக்குமதியை தடை செய்து விவசாயத்தை நிர்மூலமாக்கியவர்கள்,மருந்து கட்டமைப்பை இல்லாதொழித்தவர்கள் உட்பட அனைத்து குற்றச் செயல்களிலும் ஈடுபட்டவர்களுக்கு எதிராக விசாரணைகளை மேற்கொண்டு அவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும்.இதற்கான யோசனைகளை நாங்கள் எமது கொள்கைத்திட்டத்தில் முன்வைத்துள்ளோம்.இவற்றை செயற்படுத்துவதாக உறுதியளிப்பவர்களுக்கு ஆதரவு வழங்குவோம்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply