தேர்தலிலிருந்து விலகிய பைடன்
அமெரிக்க அதிபர் தேர்தலிலிருந்து அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் விலகியுள்ளார். தமக்குப் பதிலாக தேர்தலில் ஜனநாயகக் கட்சியைப் பிரதிநிதிக்க துணை அதிபர் கமலா ஹாரிசை அவர் முன்மொழிந்துள்ளார்.
81 வயது பைடன், கொவிட்-19 கிருமித்தொற்று காரணமாக தம்மைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியை முன்னாள் அதிபர் டோனல்ட் டிரம்ப் பிரதிநிதித்துப் போட்டியிடுகிறார்.
டிரம்ப்பிற்கு எதிரான விவாதத்தில் பைடன் மிகவும் மோசமாகச் செயல்பட்டதை அடுத்து, தேர்தலிலிருந்து அவர் விலக வேண்டும் என்று அவரது சொந்த கட்சியிலிருந்து குரல்கள் எழுந்தன.
அவர் மீதான அதிருப்திநிலை நாளுக்கு நாள் வலுவடைந்தது. பைடன் தொடர்ந்து போட்டியிட்டால் டிரம்ப் வெற்றி பெறுவது உறுதி என்று பரவலாகப் பேசப்பட்டது.
இந்த எதிர்ப்புகளையும் மீறி தேர்தலில் தாம் களமிறங்குவது உறுதி என்று விட்டுக்கொடுக்காமல் உறுதியுடன் இருந்த பைடன் இறுதியில் தேர்தலிலிருந்து விலகியுள்ளார்.
தேர்தலிலிருந்து விலகுவதாக பைடன் அறிவித்ததை அடுத்து, அதுகுறித்து டிரம்ப் கருத்து தெரிவித்தார்.
பைடனைக் காட்டிலும் கமலா ஹாரிசைத் தோற்கடிப்பது எளிது என்று அவர் சிஎன்என் செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
ஜனநாயக் கட்சியின் அதிபர் வேட்பாளராக 59 வயது கமலா ஹாரிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டால், அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் முதல் கறுப்பினப் பெண் எனும் பெருமை அவரைச் சேரும்.
“தேர்தலில் ஜனநாயகக் கட்சியைப் பிரதிநிதிப்பதே எனது இலக்கு. ஜனநாயகக் கட்சியினர் அனைவரையும் அமெரிக்கர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து டோனல்ட் டிரம்ப்பை வீழ்த்த என்னால் ஆன அனைத்தையும் செய்வேன்,” என்று கலிஃபோர்னியாவின் முன்னாள் தலைமைச் சட்ட அதிகாரியும் முன்னாள் செனட்டருமான கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply