அஞ்சல் வாக்களிப்பிற்காக பலரையும் சிரமத்திற்குள்ளாக்கும் நுவரெலியா வலயம்

நடைபெறவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் வாக்குப்பதிவுகள் எதிர்வரும் நவம்பர் 14ஆம் திகதி இடம்பெற உள்ள நிலையில் அஞ்சல் மூல வாக்குப் பதிவுகள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

அதற்குமைய அக்டோபர் 30, நவம்பர் 1 மற்றும் 4 ஆம்  திகதிகளில் அஞ்சல் மூல வாக்கு பதிவுகள் செய்யலாம் என்றும் அவ்வாறு செய்ய தவறும் பட்சத்தில் மேலும் இரு தினங்களை அஞ்சல் வாக்கு பதிவுகளுக்காக தேர்தல் திணைக்களம் ஒதுக்கீடு செய்துள்ளது.  

நுவரெலியா மாவட்டத்தை பொறுத்தவரையில் கல்வி சார் மற்றும் சாரா உத்தியோகத்தர்களுக்கான அஞ்சல் வாக்குப்பதிவுகளுக்கு  என வாக்களிப்பு மத்திய நிலையங்களாக வலய கல்வி காரியாலயங்கள்  பயன்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தொலைதூரத்தில் இருந்து வருகை தரும் அதிபர்கள் ஆசிரியர்கள் மற்றும் ஏனைய கல்வி சார் சாரா உத்யோகத்தர்களுக்காக அவர்களின் போக்குவரத்து சிரமங்கள் மற்றும் பொருளாதார நிலைமைகளை கருதிக் கொண்டு ஹட்டன் கல்வி வலயமானது தனது நிர்வாக எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் காணப்படும் நான்கு கோட்டங்களை மையமாகக் கொண்டு கோட்டக் கல்வி காரியாலயம் அல்லது அதற்கு அண்மையில் உள்ள பாடசாலையை மத்திய நிலையமாகக் கொண்டு அஞ்சல் வாக்கு பதிவுகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதற்கமைய ஹட்டன் வலயத்தில் மஸ்கெலியா, நோர்வூட் , ஹட்டன் மற்றும் கினிகத்ஹேன ஆகிய பகுதிகளில் நான்கு வாக்களிப்பு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே குறித்த கல்வி வலயத்திலுள்ள கல்விசார் – சாரா உத்தியோகத்தர்கள் தமது அஞ்சல் வாக்குகளை பதிவு செய்வதற்காக ஹட்டனுக்கு வரகை தர வேண்டிய அவசியமில்லை.

ஆனால் நுவரெலியா கல்வி வலயத்தை பொருத்தவரையில் அங்குள்ள அனைத்து பாடசாலைகளில் கல்வி சார் மற்றும் சாரா உத்யோகத்தர்கள் அனைவருமே நுவரெலியாவிலுள்ள வலய கல்வி காரியாலயத்திற்கு சென்றே தத்தமது அஞ்சல் வாக்குப்பதிவினை செய்ய வேண்டிய தேவையுள்ளது.

ஹட்டனைப் போல் ஏன் நுவரெலியா கல்வி வலய பாடசாலைகளில் பணிபுரிவோரின் நலன் கருதி அஞ்சல் வாக்குப்பதிவுகளுக்காக கோட்டக்கல்வி காரியாலயங்களைப் பயன்படுத்த முடியாது என பலரும் கேள்வி எழுப்புகின்றனர்? இவ்வலயத்திலும் வெகு தொலைவில் இருந்து பலரும் வருகை தந்து தமது வாக்குகளை அளிக்க வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

எனவே இவ்விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட கல்வி அதிகாரிகள் தேர்தல் திணைக்களத்துடன் தொடர்பு கொண்டு இவ்வலயத்தில் உள்ள பலரது நன்மை கருதி அஞ்சல் வாக்கு பதிவுகளுக்காக இலகுவான ஒரு நடைமுறையினை கொண்டு வருவதற்கான துரித நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அதிபர்கள் ஆசிரியர்கள் மற்றும் ஏனைய கல்வி சார் கல்விசாரா உத்தியோகத்தர்கள் பகிரங்க வேண்டுகோளை விடுகின்றனர். 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply