நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வரியில்லா வாகன அனுமதிப்பத்திரம் ரத்து?: அரசாங்கம் நடவடிக்கை
நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம் மற்றும் வரியில்லா வாகன அனுமதிப்பத்திரத்தை ரத்து செய்வது தொடர்பில் அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை, தற்போது அமைச்சுக்களுக்குச் சொந்தமான 150 சொகுசு வாகனங்களை விற்பனை செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு V8 மற்றும் Montero போன்ற சொகுசு வாகனங்களை வழங்குவதில்லை எனவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அமைச்சர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பான உண்மைகளை மீளாய்வு செய்த பின்னர் முடிவு எடுக்கப்படும் என்றும் அதே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு துப்பாக்கி மற்றும் துப்பாக்கி பயிற்சி வழங்குதல், மக்கள் பிரதிநிதிகளுக்கான வீடுகள் தொடர்பாகவும் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
அமைச்சர்களின் சிறப்புரிமைகளை மீளாய்வு செய்வதற்காக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால் விசேட குழுவொன்று அண்மையில் நியமிக்கப்பட்டது.
குறித்த குழுவின் பரிந்துரையை கருத்தில் கொண்டு அமைச்சர்களின் சிறப்புரிமைகள் குறித்து தீர்மானிக்கப்படும் எனத் தெரியவருகிறது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிறப்புரிமைகள் தொடர்பில் அரசாங்கம் இதுவரை உத்தியோகபூர்வ அறிவித்தல் வழங்கவில்லை என நாடாளுமன்ற அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அதுவரை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தேவையான வீடுகள் மற்றும் ஏனைய வசதிகளுக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான செயலமர்வில் அவர்களின் சிறப்புரிமைகள் தொடர்பான விடயங்கள் தெளிவுபடுத்தப்பட இருந்த போதிலும் அது நடைபெறவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply