புதுடில்லி வரும் மகிந்தவிடம் இரு முக்கிய விடயங்களைப் பேச வேண்டும்: தமிழக முதல்வர்
புதுடில்லிக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு வருகை தரவிருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் இருபிரதான விடயங்கள் குறித்து முக்கிய கவனம் செலுத்திப் பேச்சு நடத்த வேண்டுமென தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிடம் வேண்கோள் ஒன்றை விடுத்துள்ளார். தேசிய இனப்பிரச்சினைக்கு நீதியான நிரந்தரத் தீர்வுக் காண்பது மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் அனைவரும் விரைவாக மீள் குடியேற்றப்படுவது ஆகிய இரு விடயங்கள் குறித்தே கூடிய கவனம் செலுத்த வேண்டுமென அவர் தமது கோரிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாளை 8 ஆம் திகதி இந்தியாவுக்கான விஜயமொன்றை மேற்கொண்டு பிரதமர் மன்மோகன்சிங் உட்பட முக்கிய தலைவர்களைச் சந்தித்து பேச்சு நடத்த உள்ளதாக தெரிவிக்கப்படும் அதேவேளை, தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி இக்கோரிக்கைகள் அடங்கிய அவசர கடிதமொன்றை பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அனுப்பி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கைத் தமிழர் விவகாரம் தொடர்பில், பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தமிழக முதல்வர் அனுப்பி வைத்துள்ள கடிததத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: விடுதலைப் புலிகளுடனான யுத்தம் முடிவடைந்த நிலையில் பல்வேறு முகாம்களில் உள்ள தமிழ் மக்கள் 6 மாதக் காலத்தில் மீளக் குடியமர்த்தப்படுவார்கள் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித்திருந்தார்.
ஆயினும், சுமார் 80 ஆயிரம் பேர் தொடர்ந்தும் முகாம்களிலேயே உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்கு முன்னர் இலங்கையில் முகாம்களில் இருக்கும் அனைத்துத் தமிழர்களும் மீள் குடியமர்த்தப்படுவார்கள் என்று இலங்கை அரசாங்கம் உறுதியளித்திருந்ததை நீங்கள் நன்கு அறிவீர்கள். எனவே, எஞ்சியுள்ளவர்கள் மீள் குடியேற்றத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். இது குறித்து எனது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
மேலும், ஏற்கனவே பல்வேறு பகுதிகளில் மீள் குடியமர்த்தப்பட்ட தமிழ் மக்கள் பல்வேறு பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ளனர்.
அவர்களின் பொருளாதாரப் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும். அத்துடன், தமிழ் மக்கள் நீதியான நிரந்தர அரசியல் தீர்வை எதிர்பார்த்துக் காத்துள்ளனர்.
புதுடில்லி வரவிருக்கும் இலங்கை ஜனாதிபதியுடன் தாங்கள் இந்த இரு விடயங்கள் குறித்தும் முக்கிய கவனம் செலுத்திப் பேச்சுவார்த்தை நடத்துவதுடன், தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களை பூர்த்தி செய்யும் வகையில் மீள் குடியேற்றத்தையும், மீள் கட்டுமானப் பணிகளையும் விரைவுபடுத்துமாறு அவருக்கு அறிவுறுத்த வேண்டும்.
இவ்வாறு தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி தமது அவசரக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, இலங்கைத் தமிழர் பிரச்சினையை மத்திய அரசு இதுவரை மேற்கொண்ட நடவடிக்கைகள் போதிய மனநிறைவை அளிக்கவில்லையெனவும், இனிமேலாவது ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமெனவும் தமிழக முதல்வர் தி.மு.க.வின் உயர்நிலைக் கூட்டம் அண்மையில் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றபோது பகிரங்கமாக கருத்து வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply