வடக்கு கிழக்குக்கு ஒரு சட்டமும் ஏனைய பகுதிகளுக்கு வேறொரு சட்டமும் : அரியநேத்திரன்
வடக்கு கிழக்கிற்கு ஒரு சட்டமும், நாட்டிலுள்ள ஏனைய பிரதேசங்களுக்கு ஒரு சட்டமும் நடைமுறையில் உள்ளதை முல்லேரியாவில் இடம் பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் மிகவும் துல்லியமாக எடுத்துக் காட்டுகின்றது. முல்லேரியாவில் இடம்பெற்ற சம்பவம் போன்று வடக்கு கிழக்கில் ஏதாவதொரு சம்பவம் இடம் பெற்றிருந்தால் அரசாங்கம் கண், வாய், மூக்கு வைத்து அதனை வேறு விதமாக திசை திருப்பி விசமத்தனமான பிரசாரத்தில் ஈடுபட்டிருக்கும்.
இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் குறிப்பிட்டார். இவ் விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கின்ற நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவினதும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தொழிற்சங்கங்கள் தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகருமான பாரத லக்ஷ்மனின் குழுக்களுக்கிடையே இடம் பெற்ற துப்பாக்கிச் சூட்டுசம்பவமானது ஆளும் கட்சியிலுள்ள அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர், தொகுதி அமைப்பாளர்கள் யாவரும் ஆயுத குழுக்களை வைத்துக் கொண்டு சுதந்திரமாக நடமாடித் திரிவதை வெளிப்படைத் தன்மையாக பறை சாற்றுகின்றது.
அரசாங்கம் சட்ட விரோதமான முறையில் ஆயுதங்களை வைத்திருப்போர் அவற்றை பொலிஸ் நிலையங்களில் அல்லது படை முகாம்களில் ஒப்படைக்குமாறு பல தடவை அறிவித்தல்களை வழங்கி காலக்கெடுக்களை விதித்திருந்தது. இந் நிலையில் முல்லேரியா துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஈடுபட்ட குழுக்களுக்கு எங்கிருந்து ஆயுதம் வழங்கப்பட்டது. இது பற்றி அரசாங்கம் பகிரங்கப்படுத்துமா?
இதிலிருந்து ஒரு விடயம் தெளிவாகத் தெரிகின்றது. ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் செல்லும் போது மக்கள் அவர்களுடன் செல்ல அச்சமுற்றுள்ளமையாகும்.
இந் நாட்டில் ஒரு சம்பவம் இடம்பெற்றவுடன் விசாரணைகள் மேற் கொள்ளப்படும், குற்றவாளிகள் நீதிமன்றில் நிறுத்தப்பட்டு குற்றமிழைக்கப்பட்டால் தண்டிக்கப்படுவார்கள் என்று கூறப்படும். ஆனால் அவ்வாறு நடப்பது அரிதாகவே உள்ளது.
இச் சம்பவத்தில் இறந்தவரும், சுட்டவரும் அரசாங்கத்தில் மிகுந்த செல்வாக்கு மிக்கவர்கள் என்பதால் நிச்சயமாக குற்றம் செய்தவர் தப்பித்துக் கொள்ள வாய்ப்புக்கள் உள்ளது.
இத்தகைய சம்பவம் வடக்கு கிழக்கில் இடம் பெற்றிருந்தால் நிலைமை என்னவாகும் என்பதை நாம் தெளிவாக விளங்கிக் கொள்ள முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply