யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் மீது தாக்குதல்
யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் சுப்பிரமணியம் தவபாலசிங்கம் அடையாளம் தெரியாத ஆட்களால் தாக்கப்பட்டு காயம் அடைந்துள்ளார்.
யாழ் நகரத்தில் பலாலி வீதியில் உள்ள இராணுவக் காவலரண் அருகே வைத்து தவபாலசிங்கத்தை மோட்டார் சைக்கிளில் வந்த தலைக்கவசம் அணிந்த நபர்கள் தாக்கியதாகவும் விரட்டியதாகவும் யாழ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தவபாலசிங்கத்தை நேரில் சென்று சந்தித்தத யாழ் மாவட்ட த.தே.கூ. நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.
தனி நாடா கேட்கிறாய் என்று கூறியபடி அந்தக் கும்பல் தன்னைத் தாக்கியதாகவும், தான் தப்பியோடியபோது தன்னை விரட்டி வந்ததாகவும், பின்னர் அருகில் நின்றிருந்தவர்கள் தடுக்க முற்பட்டதை அடுத்தே அவர்கள் தன்னை விட்டுவிட்டுச் சென்றதாகவும் தவபாலசிங்கம் தன்னிடம் தெரிவித்ததாக ஸ்ரீதரன் கூறினார்.
யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் என்ற நிலையில் இருந்து கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவாக வாக்களிக்கும்படி கருத்து தெரிவித்தற்காகவும், மர்ம மனிதர்கள் நடமாட்டம் தொடர்பில் யாழ் பல்கலைக்கழகத்தில் தான் ஏற்பாடு செய்து நடத்திய போராட்டங்களுக்காகவும் தன் மீது ஆத்திரம் கொண்டவர்களால் தான் தாக்கப்பட்டிருக்கலாம் என்று தவபாலசிங்கம் தன்னிடம் தெரிவித்ததாக த.தே.கூ. நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
தவபாலசிங்கம் தாக்கப்பட்ட இடத்தை வைத்துப் பார்க்கையில், அரசாங்கத்துடன் தொடர்புடைய ஆயுதக் குழுக்கள் அல்லாத வேறு எவரும் அவரைத் தாக்கியிருக்க வாய்ப்பில்லை என்று ஸ்ரீதரன் குற்றம்சாட்டினார்.
தவபாலசிங்கம் தாக்கப்பட்டது தொடர்பில் பொலிசார் புகாரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அவரின் வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டதாகவும் கடைசியாக வந்துள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply