அதிகாரம் இல்லாத அதிகாரப் பரவலாக்கம் பயன் தராது : TNA
இலங்கையின் வடக்கு கிழக்குப் பகுதிகளில் உள்ள தமிழ் மக்கள் எவ்விதமான அச்சுறுத்தலுமின்றி, நீடித்திருக்கக் கூடிய ஓர் அரசியல் தீர்வின் மூலம் கண்ணியமாக வாழ இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோரியுள்ளது.
இந்திய நாடாளுமன்ற மக்களவையின் எதிர்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் தலைமையில், இலங்கைக்கான விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ள இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவை சந்தித்து உரையாடிய போதே கூட்டமைப்பினர் இதை வலியிறுத்தியுள்ளனர்.
வடகிழக்கு பகுதியில் நிலங்கள் தொடர்ந்து அபகரிக்கப்படுவது, இராணுவத்தினர் பிரசன்னம், முழுமையான மீள்குடியேற்றம் நடைபெறாமல் உள்ளது ஆகியவை உட்பட பல விஷயங்கள் குறித்து இந்தியக் குழுவினரிடம் தாங்கள் விவாதித்ததாக கூட்டமைப்பின் உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். அரசுக்கும், தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையே நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகள் குறித்தும் இந்தியத் தரப்பினருக்கு தாங்கள் விளக்கியதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்தியா அழுத்தம் கொடுக்குமா?
பேச்சுவார்த்தைகள் மூலம்தான் இனப்பிரச்சினைக்கான தீர்வைக் காணமுடியும் எனவும் அதற்காக அரசுடன் பேசி ஒரு முடிவுக்கு வரவேண்டும் என்பதே இந்தியாவின் விருப்பம் என இந்தியக் குழுவினர் தங்களிடம் தெரிவித்ததாகவும் அடைக்கலாதன் கூறினார்.
இது குறித்து தாங்கள் அக்கறை கொள்வதாகவும் ஸ்தம்பிதமடைந்துள்ள பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்கப்பட வேண்டும் என்பது தொடர்பில் இலங்கை ஜனாதிபதியுடன் பேசுவதாக இந்தியக் குழுவின் தலைவி உறுதியளித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்தயக் குழுவினர் சுயாதீனமாக வடக்கு கிழக்கில் மக்களை சந்திக்க வேண்டும் என்பதும் தங்களது கவனத்தில் இருப்பதாக இந்தியத் தரப்பினர் கூறியதாகவும் அவர் கூறுகிறார்.
அதிகாரம் இல்லாத அதிகார பரவலாக்கம் ஒரு பயனையும் அளிக்காது என்றும், இந்தியாவில் மாநிலங்களுக்கு உள்ளது போன்று காணி, பொலிஸ் அதிகாரங்கள் உட்பட அனைத்து அதிகாரங்களும் இலங்கையின் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட வேண்டும் என்று கூட்டமைப்பினர் வலியுறுத்தியதாகவும் ஜனாதிபதியிடம் அது குறித்து தாங்கள் பேசுவதாகவும் சுஷ்மா ஸ்வராஜ் கூறியதாக செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply