சகல தரப்பினரின் கருத்துக்களை அறிந்த பின்னர் மூன்றாம் தரப்பு குறித்து இந்தியா சிந்திக்க வேண்டும்”
தேசிய இனப்பிரச்சினை தொடர்பில் உள்நாட்டில் அனைத்து தரப்பினருடனும் கருத்துக்களை கேட்டறிந்த பின்னர் மூன்றாந் தரப்பின் முக்கியத்துவம் குறித்து சிந்திக்க வேண்டிய தேவை இந்தியாவிற்கு உண்டு என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
இந்திய சர்வகட்சி பாராளுமன்ற குழுவினருடன் நடைபெற்ற சந்திப்பின் பின்னர் கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இரா. சம்பந்தன் எம்.பி. இவ்வாறு கூறினார்.
“அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தையின் முன்னெடுப்புகளின் அடிப்படையில் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்தின் அவசியம் குறித்து தீர்மானிக்க முடியும். இக்கருமத்தை முன்னெடுப்பதற்கு மூன்றாம் தரப்பாக யார் வரப்போகிறார்கள்? அவர்களால் எதனைச் சாதிக்க முடியும்? என்ற பல விடயங்களை சிந்திக்க வேண்டியதுள்ளது.
அத்தோடு அரசியல் தீர்வு உட்பட தமிழ் மக்களின் அனைத்து பிரச்சினைகளின் தற்போதைய நிலை மற்றும் வடக்கின் உண்மை நிலைவரம் போன்ற விடயங்களை மிகவும் ஆழமாக இந்திய சர்வகட்சி பாராளுமன்ற குழுவிற்கு தெளிவுபடுத்தியுள்ளோம்.
ஒரு மணித்தியாலயம்வரை நீடித்த இந்தப் பேச்சுவார்த்தை திருப்திகரமாக அமைந்ததுடன் இருதரப்பும் மனம்விட்டு தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு குறித்து பரந்தளவில் பேசியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்திய அரசாங்கம் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைக்க ஒத்துழைப்புகளையும் தேவையான உதவிகளையும் செய்யும் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்விஜயமானது அரசியல் தீர்வு பேச்சுவார்த்தைக்கும் தீர்வுத் திட்டத்துக்கும் ஓர் அழுத்தமாக அமையும். மூன்றாம் தரப்பின் தேவை பேச்சுவார்த்தைகளின் முன்னெடுப்பிலேயே தீர்மானிக்கப்படப்படும். அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் காணப்படாவிட்டால் மூன்றாம் தரப்பு அவசியமானதாகும்” என அவர் மேலும் குறிப்பிட்டார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply