இந்தியா – பாகிஸ்தான் புதிய விசா உடன்பாடு
இந்தியா – பாகிஸ்தான் நாடுகளிடையே நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட, தளர்த்தப்பட்ட விசா நடைமுறைகள் கையெழுத்தாகியிருக்கின்றன.
குழு சுற்றுலா மற்றும் ஆன்மிக சுற்றுலா விசா, வர்த்தகப் பிரமுகர்களுக்கு தனி விசா, 65 வயதுக்கு மேற்பட்டோருக்கு நாட்டுக்குள் வந்த பிறகு விசா என்று அந்த ஒப்பந்தங்களில் பல அம்சங்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன.
இஸ்லாமாபாத் சென்றுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவுக்கும், பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக்கிற்கும் இடையே இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.
இதுவரை, மூன்று இடங்களுக்கு மட்டுமே செல்வதற்கு விசா அனுமதி அளிக்கப்பட்டு வந்த நிலையில், அது ஐந்து இடங்களாக அதிகரிக்கப்படுகிறது. 65 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மற்றும் முக்கிய வர்த்தகப் பிரமுகர்கள், பொலிசில் தகவல் தெரிவி்க்க வேண்டியதில்லை. அதேபோல், மூன்று மாதங்களுக்கு பதிலாக இனி 6 மாதங்களு்ககு விசா வழங்கப்படும்.
இதன் மூலம், கடந்த 38 ஆண்டுகளாக இருந்த கடுமையான விசா நடைமுறைகள் தளர்த்தப்பட்டு, இருதரப்பு உறவுக்கு பல்வேறு வகைகளில் ஊக்கம் கிடைக்கும் என்று கருதப்படுகிறது.
மாணவர்கள் குழுவாக சுற்றுப்பயணம் செய்ய விசா வழங்கப்படும். ஆனால், அவர்கள் கல்வி நிறுவனங்களில் சேருவதற்கு விசா வழங்கப்பட மாட்டாது.
இதற்கிடையி்ல், சனிக்கிழமையன்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹினா ரப்பானி கெர் உடன் எஸ்.எம். கிருஷ்ணா பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பிறகு இருவரும் செய்தியாளர்களிடம் பேசும்போது, இருதரப்பு உறவுகளில் சாதகமான மாற்றங்கள் ஏற்பட்டு வருவதாகத் தெரிவித்தனர்.
எஸ்.எம். கிருஷ்ணா பேசும்போது,, பாகிஸ்தான் தலைவர்களிடம் சாதகமான மாற்றத்தைக் காண்பதாகவும், அந்த மாற்றத்துக்கு ஹினா ரப்பானி கெர் முக்கியக் காரணமாக இருந்திருப்பதாகவும் பாராட்டுத் தெரிவித்தார். அதேபோல், ஹினா ரப்பானி பேசும்போது, மன்மோகன் சிங்கின் முன்னெடுப்புக்களைப் பாராட்டினார்.
”அமைதி மற்றும் பாதுகாப்புக்கு தீவிரவாதம் தொடர்ந்து பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது என்பதை இருதரப்பும் ஒப்புக்கொண்டிருக்கிறது. அதுதொடர்பாக, பாகிஸ்தான் தலைவர்கள் தங்கள் முந்தைய உறுதிமொழியை மீண்டும் வலியுறுத்தினார்கள். மும்பை தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடையவர்களை நீதியின் முன் நிறுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்திருக்கிறார்கள்” என்றார் கிருஷ்ணா.
பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஹினா ரப்பானி கெர் பேசும்போது காஷ்மீர் தொடர்ந்து முக்கியப் பிரச்சினையாக இருப்பதாக சுட்டிக்காட்டினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply