களுவாஞ்சிகுடியில் படையினர் வீடு வீடாக பணம் அறவிடுவது தடுப்பு
மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடியின் சில பிரதேசத்தில் படையினரால் வீடு வீடாகச் சென்று மேற்கொள்ளப்பட்டுவந்த பணம் அறவீடு செய்யும் நடவடிக்கையை பிரிக்கேடியரின் கவனத்துக்கு கொண்டு சென்றதையடுத்து அவரின் தலையீட்டால் நிறுத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா தெரிவித்தார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா,
களுவாஞ்சிகுடியின் சில பிரதேசத்தில் உள்ள சில கிராமங்களில் படையினர் வீடு வீடாகச் சென்று விடுதலைப் புலிகளின் தாக்குதலில் உயிரிழந்த இராணுவ வீரர்களின் நினைவாக நூல் வெளியிடவுள்ளதாகவும் அவற்றில் விளம்பரம் செய்யுமாறும் கோரி துண்டுப் பிரசுரங்களை வழங்கியுள்ளனர்.
எதிர்வரும் 5, 6, 7, 8ஆம் திகதிகளில் நீர்கொழும்பு கொட்டாவ மாநகரசபை மண்டபத்தில் இந்த புத்தகம் வெளியிடப்படவுள்ளதாக கோரியே இந்த பண அறவீட்டை படையினர் மேற்கொண்டு வந்துள்ளனர். இதன்போது பணத்துக்கான ரசீதுகளும் வழங்கப்படவில்லை.
இது தொடர்பில் நான் கொழும்பில் இருக்கும்போது கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மா.நடராசாவினாலும் பொதுமக்களினாலும் எனது கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது. இது தொடர்பில் நான் தொலைபேசியில் மட்டக்களப்பு மாவட்ட 231 படைப்பிரிவின் கட்டளைத் தளபதி பிரிக்கேடியர் சுகத்த திலகரட்னவிடம் தொடர்பு கொண்டு இது தொடர்பில் தெரிவித்தேன். அதனை தான் ஆராய்வதாகவும் குறித்த துண்டுப்பிரசுரம் ஒன்றையும் தருமாறு பிரிக்கேடியர் தெரிவித்தார்.
இந்நிலையில் மட்டக்களப்புக்கு திரும்பிய நான் பிரிக்கேடியரை அவரது அலுவலகத்தில் சந்தித்து துண்டுப் பிரசுரத்தையும் வழங்கினேன். எனினும் அவர் அந்த துண்டுப் பிரசுரத்தினை ஏற்கனவே பெற்றிருந்ததுடன் அதற்கான அனுமதியை இராணுவ தலைமையகம் அவர்களுக்கு வழங்கியிருந்ததாகவும் சிங்க ரெஜிமண்ட் படைப் பிரிவால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவு தெரிவித்தார்.
அத்துடன் இதற்கான அனுமதி இராணுவத் தலைமையகத்தால் வழங்கப்பட்டாலும் இதனை செயற்படுத்தும் பிரிவினர் எனது அதிகாரத்துக்குட்பட்ட பகுதி என்பதால் எனது அனுமதியை பெறவில்லை. அவர்கள் அனுமதி கோரும் வரையில் பண அறவீட்டை இடைநிறுத்தியுள்ளதாக பிரிக்கேடியர் தெரிவித்தார்.
இதன்போது நான் இந்த பண அறவீட்டை தற்காலிகமாக நிறுத்தினால் போதாது சஞ்சிகை வெளியீட்டுக்கான விளம்பரத்துக்காக இந்த பணம் அறவீடுசெய்யப்படுவதால் வீடு வீடாகச் சென்று பணம் அறவிடுவதை முற்றாக நிறுத்துமாறு பிரிக்கேடியரிடம் கோரினேன்.
சாதாரண குடிமக்கள் விளம்பரம் செய்யவேண்டிய அவசியமில்லை. எனவே இந்த பணம் அறவீட்டை நிறுத்துமாறு கோரியபோது அதனை பரிசீலனை செய்த பிரிக்கேடியர் வீடு வீடாக சென்று பணம் அறவிடுவதை நிறுத்துவதாக தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply