சூடான் ஐ.நா.அலுவலகம் மீது தீவிரவாதிகளின் தாக்குதலில் இந்தியர் உள்பட 22 பேர் பலி: பான் கி மூன் கண்டனம்
தெற்கு சூடானில் உள்ள ஜொங்கோலி மாநிலத்தின் அபோக்கோ நகரில் ஐ.நா. அலுவலகத்தின் மீது சுமார் 2 ஆயிரம் நுவர் இன தீவிரவாதிகள் நேற்று முன்தினம் அதிரடி தாக்குதல் நடத்தினர். பயங்கர ஆயுதங்களுடன் ஐ.நா. அலுவலகத்தை முற்றுகையிட்ட அவர்கள், உள்ளே இருந்த சர்வதேச அமைதிப்படையினரை நோக்கி துப்பாக்கிகளால் சரமாரியாக சுட்டனர்.தாக்குதல் நடந்தபோது இந்தியாவை சேர்ந்த 43 அமைதிப்படையினர் அலுவலகத்தின் உள்ளே இருந்தனர். ஜுபாவில் உள்ள ஐ.நா. வளாகத்தில் சுமார் 20 ஆயிரம் பேர் தஞ்சம் அடைந்துள்ளது போல் போக்கோ நகரின் ஐ.நா. அலுவலகத்திலும் தீவிரவாதிகளுக்கு பயந்து சுமார் 50க்கும் மேற்பட்டவர்கள் தஞ்சம் அடைந்துள்ளனர்.
அவர்களை கொல்லும் நோக்கத்தில் தீவிரவாதிகள் இன்று நடத்திய ஆவேச தாக்குதலில் இந்தியாவை சேர்ந்த 2 அமைதிப்படையினர் பரிதாபமாக உயிரிழந்தனர். சூடான் ராணுவத்தை சேர்ந்தவர்கள் உள்பட மொத்தம் 22 பேர் நேற்றைய தாக்குதலில் பலியாகினர்.
படுகாயமடைந்த பலர் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
இந்த தாக்குதலுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் பான் கி மூன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்திய அமைதிப்படை வீரர்களின் குடும்பங்களுக்கும், இந்திய அரசுக்கும் அனுதாபமும் ஆறுதலும் தெரிவித்து அவர் செய்தி அனுப்பியுள்ளார்.
இதேபோல், இந்திய அரசுக்கும், பலியான இந்திய அமைதிப்படை வீரர்களின் குடும்பங்களுக்கும் அனுதாபமும் ஆறுதலும் தெரிவித்து 15 நாடுகளை உள்ளடக்கிய ஐ.நா. பாதுகாப்பு சபையும் செய்தி அனுப்பியுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply