வட மாகாணசபையினை சுமுகமாக செயற்பட மஹிந்த அரசு அனுமதிக்காவிடின் இலங்கை சுதந்திரதினம் கரிநாளாகும் : கே.சிவாஜிலிங்கம்

மக்களால் தெரிவு செய்யப்பட்ட வடமாகாணசபையினை சுமுகமாக செயற்பட மஹிந்த அரசு அனுமதிக்காவிட்டால் எதிர்வரும் இலங்கை சுதந்திரதினத்தினை வடக்கு மக்கள் கரி நாளாக கடைப்பிடிக்க வேண்டிவருமென கூட்டமைப்பின் வடமாகாணசபை உறுப்பினரும் டெலோ அமைப்பின் அரசியல் பிரிவு தலைவருமான கே.சிவாஜிலிங்கம் எச்சரித்துள்ளார்.யாழ்.ஊடக அமையத்தில் இன்று நடத்தப்பட்ட பத்திரிகையாளர் மாநாட்டில் இத்தகவலை வெளியிட்ட அவர் வடமாகாணசபை ஒட்டுமொத்தமாகக்கூடி இத்தகைய முடிவினை எடுக்கவேண்டி வரலாமெனவும் எச்சரித்தார்.

இதே வேளை மக்களால் தெரிவு செய்யப்பட்ட வடக்கு மாகாணசபையினை செயற்படவிடாமல் மஹிந்த அரசு தடுத்து வருகின்றமை தொடர்பில் வடமாகாணசபையின் முதலமைச்சர் அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்களென அனைவரும் மக்களிடம் எடுத்துச்சொல்ல  வேண்டுமெனக் கேட்டுக்கொண்ட அவர் அவ்வகையிலேயே தற்போது தான் பத்திரிகையாளர் மாநாட்டை கூட்டியிருந்ததாகவும் தெரிவித்தார்.

குறிப்பாக வடக்கு தேர்தலை நடத்திவிட்டதாக இலங்கை அரசு சர்வதேசத்தினை ஏமாற்றியும் வருகின்றது. இனி சமரசம் என்ற பேச்சிற்கே இடமில்லை. அம்பலப்படுத்த வேண்டியதே அனைவரதும் கடைமையெனவும் அவர் தெரிவித்தார்.

மஹிந்தவின் ஆசீர்வாதத்துடன் இருக்கும் வடக்கு ஆளுநர் மற்றும் பிரதம செயலாளர் ஆகியோர் தொடர்பில் வடமாகாணசபை தீர்க்கமான முடிவொன்றினை விரைவில் எடுக்க வேண்டும்.

எதிர்வரும் 27ம் திகதி அடுத்த மாகாணசபை கூட்டத்திற்கு முன்பதாக இம்முடிவு எடுக்கப்பட வேண்டும். தவறினால் சக உறுப்பினர்கள் மற்றும் மக்களை அணிதிரட்டிப் போராடாப்போவதாகவும் சிவாஜிலிங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மக்கள் கூட்டமைப்பின் மீது சீற்றத்தில் இருக்கிறார்கள். வாக்களித்த அவர்களது எதிர்பார்ப்புக்கள் எவையுமே நிறைவேற்றப்படவில்லை. முதலில் மக்களிற்கு உண்மைகள் சொல்லப்பட வேண்டும். நாம் இந்த மாகாணசபையினை பிரச்சினைக்கான அடிப்படை தீர்வு திட்டமாக கூட கருதவில்லை. அது இப்போது உறுதியாகி வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply