ராணுவ விரோத நடவடிக்கைகளை கைவிடுமாறு தென் கொரியாவுக்கு வடகொரியா மீண்டும் கடிதம்
1950௫3-களில் நடந்த கொரியப் போரினைத் தொடர்ந்து வட, தென் கொரிய நாடுகளுக்கிடையே தற்காலிக அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டபோதிலும் இரு நாடுகளுக்கிடையேயான சச்சரவுகள் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றன. தென்கொரியாவிற்கு அமெரிக்காவுடனான நட்புறவு வடகொரியாவுக்கு அச்சுறுத்தலாகவே உள்ளது.அணுஆயுத சோதனை குறித்த வடகொரியாவின் முயற்சிகள் அமெரிக்காவால் தடை செய்யப்படும்போதெல்லாம் அது தென்கொரியாவைத் தாக்குவதான எச்சரிக்கையிலேயே முடிவடைந்துள்ளது. அதேபோல், சமீபத்தில் ஏற்பட்ட ஒரு பிரச்சினையில் இரு நாடுகளுக்கும் இடையேயான கெசாங் வர்த்தக மையத்தை வடகொரியா முற்றிலுமாக மூடி சிறிது காலத்திற்குப் பின் மீண்டும் திறந்துள்ளது.சமீபகாலமாக இரு நாடுகளுக்குமிடையேயான சமாதான நடவடிக்கைகளை வடகொரிய அரசு எடுக்கத் தொடங்கியுள்ளது. தென் கொரியா, அமெரிக்காவுடன் இணைந்து நடத்தும் கூட்டு ராணுவப் பயிற்சிகளை ரத்து செய்யவும், இரு நாடுகளுக்குமிடையே பரஸ்பரம் தாக்கிக்கொள்ளும் போக்கினைக் கைவிடும் வண்ணமாகவும் தொடர்ச்சியான திட்டங்களை வடகொரிய அரசு எடுத்து வருகிறது. இன்று மீண்டும் வடகொரியத் தலைவர் கிம் ஜோன்ங் உன்னின் நேரடி உத்தரவின் பேரில் அந்நாட்டு உயர்மட்ட ராணுவத் தலைமையிடமிருந்து ஒரு பகிரங்க சமரசக் கடிதம் வந்துள்ளது.
நம்பிக்கையின்மையையும், மோதல் போக்கையும் தூண்டும் விதமாக நடைபெற்றுவரும் ராணுவ விரோதப் போக்கு நடவடிக்கைகளை தென்கொரியா நிறுத்துவதன் மூலம் இரு நாடுகளின் உறவுகளும் மீண்டும் சீரடைவதற்கான ஒரு பரந்த இடத்தை ஏற்படுத்த முடியும் என்று அந்தக் கடிதம் குறிப்பிட்டுள்ளது.
இதுநாள் வரை வடகொரியாவின் சமாதான முயற்சிகளை ஒரு ஏமாற்றுப் பிரசாரம் என்று தென் கொரியா ஒதுக்கிவந்ததையும் அக்கடிதம் தெரிவிக்கின்றது. வருத்ததிற்குரியவிதமாக தென்கொரிய அரசு இன்னமும் எதிர்மறையான போக்கையும், தவறான அணுகுமுறையையும் மேற்கொண்டுள்ளது. சிந்தனையற்ற தவறான சந்தேகத்தினால் இந்த முறையும் தென் கொரியா தங்களது உண்மையான முக்கியமான கோரிக்கையை நிராகரிக்கக்கூடாது என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆத்திரமூட்டும் தனது தாக்குதல்களுக்கு முன்னோடியாக சமரசப் பேச்சுகளை அளிக்கும் போக்கு வடகொரியாவிடம் கடந்த காலங்களிலும் காணப்பட்டதால் அரசியல் ஆய்வாளர்கள் பலரும் இந்த முயற்சியையும் சந்தேகத்துடனே நோக்குகின்றனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply