ஆண்மை பரிசோதனைக்கு எதிராக நித்யானந்தா மேல்முறையீடு: சுப்ரீம் கோர்ட்டில் தீர்ப்பு ஒத்திவைப்பு

நித்யானந்தாவுக்கு எதிராக அவருடைய முன்னாள் சீடரான ஆர்த்திராவ் அளித்த பாலியல் துன்புறுத்தல் வழக்கில் நித்யானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை நடத்த பெங்களூர் கோர்ட்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் நித்யானந்தா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவின் மீது கடந்த 2 நாட்களாக நீதிபதிகள் ரஞ்ஜன் பிரகாஷ் தேசாய் மற்றும் என்.வி.ரமணா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வாதங்கள் தொடர்ந்து நடைபெற்றன.

நித்யானந்தா சார்பில் மூத்த வழக்கறிஞர் மோகன் பராசரன் வாதாடினார். நித்யானந்தாவை துன்புறுத்த வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக இதுபோன்ற ஆண்மை பரிசோதனையை மேற்கொள்ள போலீஸ் தரப்பில் வற்புறுத்துகின்றனர். இந்த குற்றம் நடைபெற்றதாக கூறப்பட்டபோதே அதனை செய்திருக்க வேண்டும். இப்போது அதுபோன்ற பரிசோதனைகளை மேற்கொள்ள சட்டத்தில் இடமில்லை என்று கூறினார்.

அதற்கு நீதிபதிகள், எப்படி இருந்தாலும் ஆண்மை பரிசோதனைக்கு அவர் ஒத்துழைப்பு அளிக்கத் தான் வேண்டும் என்று கருத்து தெரிவித்தனர்.

நடிகை ரஞ்சிதா சார்பில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் ரங்காச்சாரி, தன்னுடைய கட்சிக்காரர் இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர். அவரை தேவையில்லாமல் தொடர்புபடுத்தி சிறுமைப்படுத்த முயற்சிக்கின்றனர். எனவே அவரையும் இந்த வழக்கின் விசாரணையில் சேர்த்துக் கொண்டு விசாரிக்க வேண்டும் என்று வாதாடினார். இந்த வேண்டுகோளை நீதிபதிகள் ஏற்றுக் கொள்ளவில்லை.

கர்நாடக அரசு சார்பில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் எம்.என்.ராவ், நித்யானந்தா தரப்பு புதிது புதிதாக மனுக்கள் தாக்கல் செய்து வழக்கை இழுத்தடிக்க முயற்சிக்கிறது. ஆண்மை பரிசோதனையில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரும் நித்யானந்தாவின் கோரிக்கையை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வாதாடினார்.

இதற்கு நீதிபதிகள், கர்நாடக அரசும் இந்த வழக்கை ஏன் இழுத்தடித்துக் கொண்டிருக்கிறது என்ற கேள்வியை எழுப்பினர். ஆவணங்களும் சரியான வகையில் தாக்கல் செய்யப்படவில்லை. இந்த வழக்கில் 2–வதாக குற்றம்சாட்டப்பட்டவர் மீது உள்ள குற்றச்சாட்டு என்ன என்றும் நீதிபதி கேட்டார்.

குற்றப்பத்திரிகை கன்னடத்தில் உள்ளது என்றும் அதன் மொழிபெயர்ப்பு உடனடியாகக் கிடைக்கவில்லை என்றும் வழக்கறிஞர் எம்.என்.ராவ் கூறினார். இதற்கு ஒரு குற்றப்பத்திரிகையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து ஏன் தாக்கல் செய்யவில்லை என்று உரிய அதிகாரிகளிடம் கேளுங்கள் என்றும் நீதிபதிகள் வலியுறுத்தினர்.

வழக்கை இழுத்தடிக்க நித்யானந்தா ஏன் முயற்சிக்க வேண்டும் என்றும், தன் மீது தவறு இல்லை என்றால் ஆண்மை பரிசோதனைக்கு உட்பட அவர் மறுப்பது ஏன்? என்றும் நீதிபதிகள் கேட்டனர். வாதங்கள் முடிவடைந்த நிலையில் நீதிபதிகள் வழக்கின் விசாரணையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

நடிகை ரஞ்சிதா காவி உடையணிந்து நித்யானந்தா படம் போட்ட டாலர் கொண்ட ருத்ராட்ச மாலையை அணிந்து கோர்ட்டுக்கு வந்திருந்தார். உடன் அவருடைய சகோதரியும் வந்திருந்தார். ஆர்த்தி ராவ், நித்யானந்தாவின் சர்ச்சைக்குரிய வீடியோவை வெளியிட்ட லெனின் கருப்பன் ஆகியோரும் கோர்ட்டுக்கு வந்திருந்தனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply