நவாஸ் ஷெரீப்பை பதவி விலக கூறும் எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை பாக். நிராகரிப்பு
பாகிஸ்தானில் கடந்த ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் பெருமளவு மோசடியில் ஈடுபட்டு, நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி வெற்றிபெற்று ஆட்சி அமைத்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. தெஹ்ரீக் இ இன்சாப் கட்சித்தலைவரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான்கானும், பாகிஸ்தான் அவாமி தெஹ்ரிக் கட்சித்தலைவர் தாஹிர் உல் காதிரியும் பிரதமர் நவாஸ் ஷெரீப் பதவி விலகக்கோரி போர்க்கொடி உயர்த்தி உள்ளனர்.
இவர்கள் தங்களது ஆதரவாளர்களுடன் பாராளுமன்றத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நவாஸ் ஷெரீப் பதவி விலகும் வரையில் தங்கள் போராட்டம் ஓயாது என அவர்கள் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில், நவாஸ் ஷெரீப் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை பாகிஸ்தான் பாராளுமன்றம் நேற்று நிராகரித்து விட்டது.
நவாஸ் ஷெரீப் பதவி விலக முடியாது என கூறும் தீர்மானத்தை மகமது கான் அசக்ஜாய் என்ற எம்.பி. கொண்டு வந்தார். இந்த தீர்மானம் ஒரு மனதாக நிறைவேறியது. அப்போது சபையில் பிரதமர் நவாஸ் ஷெரீப் இருந்தார். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இம்ரான் கான், தாஹிர் உல் காதிரி ஆகியோர் பிரதமர் பற்றியும், பாராளுமன்றம் குறித்தும் தரக்குறைவாகப் பேசி வருவதற்கு தீர்மானத்தில் கண்டனமும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமாபாத்தில் பாராளுமன்றத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை அகற்ற உத்தரவிடுமாறு பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டில் அட்டார்னி ஜெனரல் சல்மான் பட் நேற்று மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை தலைமை நீதிபதி நசிருல் முல்க் தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வு விசாரித்தது. அப்போது தலைமை நீதிபதி, ‘‘இது நிர்வாகப் பிரச்சினை. சட்டத்திற்குட்பட்டு அரசாங்கம்தான் இதைக் கையாள வேண்டும்’’ என கூறி, அட்டார்னி ஜெனரலின் மனுவை நிராகரித்தார்.
இதற்கிடையே ஜனாதிபதி மம்னூன் உசேனை பிரதமர் நவாஸ் ஷெரீப் நேற்று சந்தித்து, நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து விளக்கினார். இம்ரான் கான், தாஹிர் உல் காதிரி நடத்தி வருகிற போராட்டத்தை அமைதியாக கையாள்வதற்கு அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் பற்றி எடுத்துக் கூறினார்.
இந்த விவகாரத்தில், ராணுவமும் தலையிட மறுத்து விட்டது. மாறாக அரசுடன் பேச்சு நடத்துமாறு போராட்டக்காரர்களை கேட்டுக்கொண்டது. அதன்படி நேற்று முன்தினம் அரசு தரப்பில் பேச்சு நடத்தப்பட்டது. இதில் இம்ரான்கான் குழுவினருடன் 5 உறுப்பினர்களை கொண்ட அரசு குழுவினர் பங்கேற்றனர். இதில் திருப்புமுனை எதுவும் ஏற்படவில்லை.
இந்த நிலையில் அரசுடனான பேச்சு வார்த்தையை இம்ரான் கான் நேற்று திடீரென ரத்து செய்து விட்டார். இறுதி முடிவு ஏற்படும் வரையில் தொடர்ந்து போராடப் போவதாக அவர் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply