ஆய்வு கூட்டத்தில் கருத்துக்கள் கூற யாரும் பயப்பட வேண்டாம்: மு.க.ஸ்டாலின்

கரூர் மாவட்ட தி.மு.க. பொது உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் கரூரில் உள்ள ஒரு மண்டபத்தில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் நன்னியூர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–இன்று (நேற்று) காலை 9 மணி முதல் கட்சி நிர்வாகிகளுடன் ஆய்வு பணி நடத்தப்பட்டது. இங்கு தலைமையுரையாற்றிய மாவட்ட பொறுப்பாளர் கூறும் போது கட்டளையிடுங்கள், உத்தரவிடுங்கள் நிறைவேற்றுகிறோம் என்று கூறினார். அதில் ஒரு திருத்தம் நான் இங்கு கட்டளையிட, ஆணையிட வரவில்லை. பிறகு எதற்காக வந்து உள்ளேன் என்றால், உங்கள் கட்டளை, உங்கள் உத்தரவை ஏற்று உங்களில் ஒருவனாக பணியாற்றும் அந்த உணர்வோடு உங்களில் ஒருவனாக என் கடமையை நிறைவேற்ற இங்கு வந்திருக்கிறேன். இன்று (நேற்று) ஆய்வு பணி நடத்தி இருக்கிறோம்.

காஞ்சிபுரத்தில் தொடங்கி கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் ஆய்வு பணி நடத்தி முடிக்கப்பட்டு தற்போது 5–வது மாவட்டமாக கரூர் மாவட்டத்தில் ஆய்வு பணி நடந்து முடிந்து உள்ளது. நாளை திண்டுக்கல், மறுநாள் சிவகங்கை அதன் பிறகு சென்னை செல்ல உள்ளேன். பின்னர் மீண்டும் நாமக்கல், திருப்பூர், கோவை ஆகிய மாவட்டங்களில் ஆய்வு பணி நடக்க உள்ளது. அதன்படி ஒரு மாதத்திற்கு 10 மாவட்டங்களில் ஆய்வு நடத்த வேண்டும் என்று தலைவர் கலைஞர், பேராசியர் ஆகியோர் எனக்கு ஆணையிட்டு உள்ளனர். அவர்கள் ஆணையை ஏற்று, அந்த பணியை நிறைவேற்றி வருகிறேன்.

கரூர் மாவட்டத்தில் 7 மணி நேரம் ஆய்வு நடந்தது. இதில் முதலில் மாணவர் அணி, இளைஞர், தொடர்ந்து மகளிர் அணி, வாக்குச்சாவடி முகவர்கள், கிளை செயலாளர்கள், ஊராட்சி பேரூராட்சி செயலாளர்கள், ஒன்றிய, நகர செயலாளர்கள், அதன் பிறகு மாவட்ட நிர்வாகிகள், பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர், தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள கட்சிக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் மருத்துவர்கள், தொழில் அதிபர்கள், தகவல் தொழில் நுட்ப இளைஞர்கள், முன்னோடிகள் ஆகியோரை சந்தித்து இந்த ஆய்வு முடிந்து இருக்கிறது.

எனவே இந்த ஆய்வு பணிக்கு தலைமை கழகம் மூலம் தேர்வு செய்து, அவர்களுக்கு கடிதம் மூலம் தகவல் அனுப்பப்பட்டு, அதை செல்போன் மூலம் உறுதி செய்த பின்னர் தற்போது அவர்களை அழைத்து பேசி உள்ளோம். இந்த ஆய்வு பணி நடக்கும் போது என் பக்கத்தில் யாரும் கிடையாது. தனியாக நடத்தினால் தான் உண்மை வெளி வரும், பிரச்சினை என்னவென்று தெரிய வரும். சில நேரங்களில் நிர்வாகிகள் முன்பு சொல்ல அச்சப்படுவார்கள். யோசிப்பார்கள். இந்த ஆய்வு கூட்டத்தில் நிர்வாகிகள் கூறிய கருத்துக்களை, இவர் தான் உங்களை பற்றி சொன்னார் என்று யாரிடடும் கூற மாட்டோம். எனவே யாரும் பயப்பட தேவையில்லை. இது கட்சியின் மானப்பிரச்சினை. கட்சி வளர்ச்சிக்காக நடத்தப்படும் ஆய்வு பணி. இந்த ஆய்வில் சில கோரிக்கைகள் வைத்தனர்.

ஆய்வுக்கு சிலரை மட்டும் அழைத்து பேசுகிறீர்களே. எங்களை அழைக்கவில்லையே என்ற கோபம் மற்றவர்களுக்கு இருக்கும். நான் மறுக்கவில்லை. இந்த குறை இருக்க கூடாது என்பதற்காகத்தான் இந்த பொது உறுப்பினர்கள் கூட்டம்.

இந்த ஆய்வு பணியில் கலந்து கொண்டவர்கள் பல்வேறு கோரிக்கைகள் வைத்தனர். அதன்படி எங்களை சுதந்திரமாக செயல்பட விடுங்கள், மாவட்டத்திற்கும், கிளைக்கும் இடைவெளி உள்ளது. அதே போன்று இணைய தளம் மூலம் இயக்கம் பற்றி மக்களிடம் எடுத்து கூற வேண்டும் என்று பல கோரிக்கைள் வைத்தனர். கண்டிப்பாக இன்னும் 2 மாதத்தில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் இணைய தளத்தில் அனுபவம் மிக்க 5 பேர் தேர்ந்து எடுத்து கழகத்தின் கட்டுரைகள், கழக முன்னோடிகளின் செய்திகள் வெளியிடப்படும்.

இதே போன்று பல்வேறு கோரிக்கைகள் என்னிடம் எடுத்து கூறினார்கள். அந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்.

நிர்வாகிகள், தொண்டர்கள் ஒத்துழைத்தால் வருகிற 2016–ம் ஆண்டு நாம் தான் ஆட்சி அமைப்போம். ஆட்சி பறிபோய் 3½ ஆண்டுகள் ஆகிறது. தி.மு.க.வை அழிக்க எத்தனை பொய் வழக்குகள் போடப்பட்டது. என் மீது கூட வழக்கு.

வழக்குகளை பார்த்து அஞ்சி, நடுங்கும் இயக்கம் அல்ல தி.மு.க என்று எல்லோருக்கும் தெரியும். பாராளுமன்ற தேர்தலில் மிக பெரிய தோல்வி. சாதாரண தோல்வி அல்ல.

ஆனால் தற்போது இந்த எழுச்சியை பார்க்கும் போது நாம் தான் ஆட்சியில் உள்ளோம் என்று தெரிகிறது. கலைஞர் கடந்த 2006–2011–ம் ஆண்டு வரை எத்தனை திட்டங்கள் செயல்படுத்தினார். குறிப்பாக சட்டசபை, பாராளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கலைஞர் தீர்மானம் நிறைவேற்றினார். தற்போது புதிய மத்திய அரசு அதை நிறைவேற்றும் என்று நினைத்தோம். ஆனால் தற்போது அந்த மசோதா காலாவதியாகி விட்டது. எனவே மேற்கண்ட தீர்மானத்தை நிறைவேற்ற தற்போது மீண்டும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது உள்ளது.

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் நாம் தோற்றோம் என்பதை ஏற்க முடியாது. தமிழக மக்கள் தான் தோற்று போய் இருக்கிறார்கள். தேர்தலின் போது நாம் எத்தனையோ கூட்டணி வைத்தோம்.

ஆனால் அ.தி.மு.க தேர்தல் கமிஷனுடன் கூட்டணி வைத்தது. எத்தனை தோல்விகளை கண்டு இருக்கிறோம். தோல்விகளை கண்டு துவண்டு போகும் இயக்கம் அல்ல. வெற்றி பெற்றாலும், தோல்வி அடைந்தாலும், தொடர்ந்து மக்களுக்காக பாடுபடும் இயக்கம் தான் தி.மு.க..

எனவே கருணாநிதி கரத்தை வலுப்படுத்த அனைவரும் பாடுபடவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply