கூட்டமைப்பை இந்தியா பயன்படுத்தி தமிழீழத்தை இங்கு உருவாக்கும்
இலங்கையில் இந்திய ஆதிக்கத்தை நிலைநிறுத்த மோடியின் அரசாங்கம் தமிழ்த்தேசிய கூட்டமைப்பை பயன்படுத்தும் அதேவேளை கூட்டமைப்பு இந்தியாவை பயன்படுத்தி இங்கு தமிழீழத்தை உருவாக்கும் நிகழ்ச்சி நிரலை முன்னெடுக்கின்றது என குற்றம் சாட்டும் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் பொதுச்செயலாளர் டாக்டர் வசந்த பண்டார, 13ஆவது திருத்தம் மரணித்து விட்டது. அதற்கு உயிர்கொடுக்கும் முயற்சியை அரசாங்கம் கைவிட வேண்டுமென்றும் அவர் தெரிவித்தார்.
தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் இந்திய விஜயம் தொடர்பாக கருத்து தெரிவித்த போதே டாக்டர் வசந்த பண்டார இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக இவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்தியாவின் அரசியல் பொருளாதார இராணுவ ஆதிக்கத்தை இலங்கைக்குள் நிலைநாட்ட எமது நாட்டை அடிமைப்படுத்தும் முயற்சிகள் இன்று உத்வேகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்திரா காந்தியின் ஆட்சி காலத்தில் தமிழ் இளைஞர்களுக்கு ஆயுதப்பயிற்சிகளை வழங்கி இலங்கையில் பிரிவினை வாதத்தை ஏற்படுத்தும் முயற்சிகளுக்கு வித்திடப்பட்டது. அந்த முயற்சி இன்று தோல்வி கண்டு விட்டது. இதனால் தமிழ் தேசியக்கூட்டணியின் ஈழக்கனவும் கலைந்து விட்டது.
இவ்வாறானதொரு சூழ்நிலையில் மோடியின் அரசாங்கம் மீண்டும் தமது முயற்சியை ஆரம்பித்துள்ளது. கூட்டமைப்பை பயன்படுத்தி இலங்கையை அடிமைப்படுத்துவதற்காகவே அவர்களுடன் பேச்சுவார்த்தைகளை மோடியின் அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.
அதேபோன்று இந்தியாவை பயன்படுத்தி இலங்கையில் தமிழீழத்தை உருவாக்கும் நிகழ்ச்சி நிரலை கூட்டமைப்பு முன்னெடுக்கின்றது. இங்கு பிரிவினையை ஏற்படுத்தும் முயற்சி தோல்வியுற்றால் சமஷ்டி முறைமையை கொண்டு வந்து இந்தியாவின் தேவைக்கேற்ப எமது நாட்டை ஆட்டுவிப்பதே நோக்கமாகும். அதற்காகவே மரணித்து விட்ட 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துமாறும் அதிகாரத்தை பரவலாக்குமாறும் அழுத்தம் கொடுக்கப்படுகின்றது.
மரணித்து விட்ட 13க்கு உயிர் கொடுக்கும் முயற்சிகளை அரசாங்கம் கைவிட வேண்டும். இந்தியாவின் அழுத்தத்திற்கு அடிபணியாது அரசியல் காய்நகர்த்தல்களை முன்னெடுக்க வேண்டும் என்றும் டாக்டர் வசந்த பண்டார தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply