பாக்.அரசு – இம்ரான் கான் இடையிலான மூன்றாம் சுற்று பேச்சுவார்த்தையும் தோல்வி

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்பை பதவியில் இருந்து நீக்கும் கோரிக்கையுடன் லாகூர் நகரில் இருந்து பல்லாயிரக்கணக்கான தொண்டர்களுடன் பேரணியாக சென்ற தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியின் தலைவரும், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான இம்ரான் கான்  சுமார் 60 ஆயிரம் தொண்டர்களுடன் தற்போது தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள பாராளுமன்றத்தை முற்றுகையிட்டு மறியல் போராட்டம் நடத்தி வருகிறார். இதேபோல், கராச்சி நகரில் இருந்து புறப்பட்ட தாஹிர் உல் காத்ரி தலைமையிலான பேரணியும் தலைநகர் இஸ்லாமாபாத்தை வந்தடைந்துள்ளதால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது. ஏராளமான ராணுவத்தினரும், போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தேர்தலில் முறைகேடுகளை செய்து ஆட்சியை பிடித்த பிரதமர் நவாஸ் ஷெரிப் பதவி விலக வேண்டும்.  பாராளுமன்றத்தை கலைத்துவிட்டு மறுதேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட 14 அம்சங்களை முன்வைத்து தாஹிர் உல் காத்ரியும் போராடி வருகிறார்.

நவாஸ் ஷெரீப் பதவி விலகும் வரை அங்கிருந்து புறப்படமாட்டேன் என அறிவித்து தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார். கடந்த 10 நாட்களாக அவரது கட்சி தொண்டர்கள் பாராளுமன்றம் முன்பு முகாமிட்டுள்ளனர்.

போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர இம்ரான்கானுடன் பேச நவாஸ் ஷெரிப் 5 பேர் கொண்ட குழுவை அமைத்தார். அவர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.

எனவே, கட்சியின் மூத்த தலைவர் ஷா மெக்மூத் குரேஷி, இம்ரான்கான் உள்பட தெஹ்ரிக் – இன்சாப் கட்சியை சேர்ந்த 34 எம்.பி.க்களும் பதவியை ராஜினாமா செய்தனர்.

எனவே, அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்க இம்ரான்கான் உயர்மட்ட குழு கூட்டத்தை கூட்டி விவாதித்தார். முதல் சுற்று பேச்சு வார்த்தை தோல்வி அடைந்த நிலையில் நேற்று அரசின் பிரதிநிதிகளுக்கும் இம்ரான் கானுக்கும் இடையில் நடந்த மூன்றாம் சுற்று பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.

தேர்தல் முறைகேடு பற்றி ஒளிவு மறைவில்லாத நியாயமான விசாரணை நடத்த வசதியாக பிரதமர் நவாஸ் ஷெரிப் 30 நாட்களுக்கு பதவி விலக வேண்டும் என்றும், அப்படி முறைகேடு ஏதும் நடைபெறவில்லை என்பது உறுதி செய்யப்பட்டால், மீண்டும் அவர் பிரதமராக தொடர்வதில் தங்களுக்கு ஆட்சேபனை ஏதுமில்லை என்றும் இம்ரான் கான் நேற்றிரவு அறிவித்துள்ளார்.

இதற்கிடையே, தற்போதுள்ள அரசியல் சூழ்நிலை குறித்து ஆலோசிக்க பிரதான எதிர்க்கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவர் ஆசிப்அலி சர்தாரியை பிரதமர் நவாஸ்ஷெரிப் நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

போராட்டக்காரர்களுடன் பேசி ஒரு சமரச தீர்வு காண ஏற்பாடு செய்வதாக ஆசிப்அலி சர்தாரி உறுதியளித்துள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply