ஐ.எஸ். இயக்கத்தின் ரசாயன ஆயுத நிபுணர் பலி; ஈராக்கில் அமெரிக்க கூட்டுப்படைகள் வான்தாக்குதல்
ஈராக்கில் அமெரிக்க கூட்டுப்படைகள் நடத்திய வான்தாக்குதலில் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் ரசாயன ஆயுத நிபுணர் கொல்லப்பட்டார். ஈராக் நாட்டில் சதாம் உசேன் அதிபராக இருந்தபோது, அங்கு ரசாயன ஆயுத வல்லுனராக இருந்தவர் அபு மாலிக். என்ஜினீயர். இவர் சாலி ஜாசிம் முகமது பாலா அல் சபாவி என்றும் அறியப்பட்டிருந்தார்.
சதாம் உசேனின் வீழ்ச்சிக்கு பின்னர் அவர் 2005-ம் ஆண்டு அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்தார். பின்னர் அந்த இயக்கத்தில் இருந்து விலகி, இன்றைக்கு உலகுக்கே அச்சுறுத்தலாக விளங்குகிற ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்தார்.
வழிகாட்டி
ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் ரசாயன ஆயுதங்கள் ஏதும் இல்லை என்றாலும்கூட, ரசாயன ஆயுதங்களை உற்பத்தி செய்கிற ஆற்றல் வாய்ந்த இயக்கமாக மாறுவதற்கு இந்த அபு மாலிக்தான் வழிகாட்டி வந்தார் என்று நம்பப்படுகிறது.
மற்றொரு தகவல், ஐ.எஸ். தீவிரவாதிகள் குளோரின் வாயுவை பயன்படுத்தி வந்ததாகவும் கூறுகிறது.
வான்தாக்குதலில் உயிரிழப்பு
இந்த நிலையில் கடந்த 24-ந்தேதி ஈராக்கில் மொசூல் நகர் அருகே அமெரிக்க கூட்டுப்படைகள் நடத்திய வான்தாக்குதலில் அபு மாலிக் கொல்லப்பட்டார்.
இவரது மரணம், ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துக்கு பெருத்த அடியாக அமைந்துள்ளது.
உறுதி செய்தது, அமெரிக்கா
அபு மாலிக், வான்தாக்குதலில் கொல்லப்பட்டதை அமெரிக்க ராணுவ அதிகாரிகள் உறுதி செய்தனர். இது தொடர்பாக அமெரிக்க ராணுவம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “மொசூல் நகர் அருகே நடத்திய வான்தாக்குதலில் அபு மாலிக் கொல்லப்பட்டு விட்டார். அவரது மரணம், தீவிரவாத இயக்கத்தின் வலிமையை குறைக்கும். அப்பாவி மக்களுக்கு எதிராக ரசாயன ஆயுதங்களை உற்பத்தி செய்து, பயன்படுத்துகிற ஆற்றலை குறைக்கும்” என கூறப்பட்டுள்ளது.
சிரியாவிலும், ஈராக்கிலும் ஐ.எஸ். தீவிரவாதிகளை குறிவைத்து, அமெரிக்க கூட்டுப்படைகள் கடந்த ஆகஸ்டு மாதம் 8-ந் தேதியிலிருந்து இதுவரை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வான்தாக்குதல்களை நடத்தி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply