தேசிய வைபவங்களில் மாணவர்களை ஈடுபடுத்துவதற்கு அனுமதி வழங்கப்படாது : ஜனாதிபதி
சுதந்திர தின நிகழ்வில் பாடசாலை மாணவர்களைக் கொண்டு நடத்தப்படும் அணிவகுப்புக்களை நிறுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சம்பந்தப்பட்ட தரப்பினருக்குப் பணிப்புரை விடுத்துள்ளார். தான் கலந்து கொள்ளும் தேசிய நிகழ்வுகளில் பாடசாலை மாணவர்களை வீதிகளில், வெயில்களில் நிறுத்தி தன்னை வரவேற்பதை நிறுத்துமாறும், மாணவர்களைக் கஷ்டப் படுத்தி வழங்கப்படும் வரவேற்பு தனக்குத் தேவையில்லையென்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். தேசிய தொலைக்காட்சிகளில் வழங்கிய விசேட செவ்வியிலேயே ஜனாதிபதி இவ்வாறு கூறினார். சில தினங்களில் சுதந்திர தினம் நடைபெறவுள்ளது.
சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது பாடசாலை மாணவர்களைக் கொண்டு நடத்தப்படும் அணிவகுப்புக்கள், பேரணிகள் எதற்கும் அனுமதி வழங்கப்படாது. இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களுக்கு நான் பணிப்புரை வழங்கியுள்ளேன்.
ஜயமங்கள கீதம் பாடுவதற்கும், தேசிய கீதம் பாடுவதற்கும் பாடசாலை மாணவர்கள் பயன்படுத்தப்படுவர். இதற்கு மேலதிகமாக எதற்கும் பாடசாலை மாணவர்கள் பயன்படுத்தப்பட மாட்டார்கள். பாடசாலை மாணவர்கள் படும் கஷ்டம் எனக்குத் தெரியும். நான் கலந்து கொள்ளும் எந்தவொரு நிகழ்வுகளிலும் பாடசாலை
மாணவர்களை வீதியில், வெயிலில் நிறுத்திவைக்க வேண்டாம் என நான் வேண்டுகோள் விடுக் கின்றேன். பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டின் போது அரச தலைவர்களை வரவேற்பதற்கு பெருந்தொகையான பாடசாலை மாணவர்களை வீதியில் நிறுத்தியிருந்தனர்.
காலையில் வரும் சில மாணவர்கள் காலை உணவை உண்ணாமல் வரும்போது அவர்களுக்கு களைப்பு ஏற்படும். அதேநேரம் பெண் பிள்ளைகள் மலசல கூட வசதிகளின்றி பெரும் சிரமங்களை எதிர்கொண்டிருந்ததை நான் அறிவேன். எனவே பாடசாலை மாணவர்களைக் கஷ்டப்படுத்துவதை அனுமதிக்க முடியாது என்றும் ஜனாதிபதி தனது செவ்வியில் குறிப்பிட்டார்.
இதேவேளை, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளில் மாத்திரமே தான் பங்கெடுக்கப் போவதாகவும், ஏனைய நிகழ்வுகளில் பிரதமர் மற்றும் அமைச் சர்கள் கலந்து கொள்வார்கள் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
கடந்த ஆட்சியில் ராஜபக்ஷ குடும்ப உறுப்பினர்களே அனைத்து நிகழ்வு களிலும் பிரதம அதிதிகளாகக் கலந்து கொண்டனர். இதனால் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் பெரும் அதிருப்தியடைந்தனர். இவ்வாறான நிலைமை மீண்டும் ஏற்படக்கூடாது. என்ன நிகழ்வுகளில் நான் கலந்து கொள்வது என்பதை ஆராய்ந்து முடிவெடுக்கவிருப்பதாகவும் அவர் கூறினார்.
திருடர்கள் யார் என்பதை இன்னும் சில தினங்களில் முழு நாடும் அறிந்து கொள்ளும். நாட்டில் நடைமுறையிலுள்ள சட்டப்படி யார் எவர் என்ற எந்த தராதரமும் பார்க்காது அவர்களுக் கெதிராக நடவடிக்கை எடுக்கப்படும்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினதோ ஐக்கிய தேசியக் கட்சியினதோ நிகழ்ச்சி நிரலின் படியன்றி நாட்டுக்கான நிகழ்ச்சி நிரலுக்கிணங்க நாட்டையே முதன் மையாகக் கொண்டு செயற்பட தீர்மானித்துள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி; நல்லாட்சிக்கான மாற்றத்தை ஏற்படுத்த நான் பல தியாகங்களை செய்துள்ளேன். அமைச்சர்களும் ஏனையோரும் இதனை முன் மாதிரி யாகக் கொண்டு செயற்பட்டால் சவால்களை வெற்றி கொள்ள முடியும் என்றும் தெரிவித்தார்.
கடந்த நவம்பர் டிசம்பர் மாதங்களில் மாத்திரம் நாட்டின் பல பகுதிகளிலுமுள்ள ஜனாதிபதி மாளிகைகளில் உணவுக்காக மட்டும் 157 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.
இது போன்ற அனைத்து வீண் செலவினங்களையும் இல்லாதொழித்து மக்களுக்கு அதன் பிரதிபலன்களைப் பெற்றுக் கொடுப்பதே எமது நோக்கம். நாட்டையும் மக்களையும் முதன்மையாகக் கொண்டே எமது அனைத்துச் செயற்பாடுகளும் அமையும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
அவர் இப்பேட்டியின் போது மேலும் தெரிவிக்கையில், வடக்கு தெற்கு என முழு நாட்டையும் புனருத்தாரணம் செய்யும் பொறுப்பு எம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நாம் அதை நிறைவேற்ற வேண்டியுள்ளது.
நானும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் கடந்த தேர்தல் காலங்களில் மக்களுக்கு வாக்குறுதியளித்திருந்தோம். நூறு நாட்கள் வேலைத் திட்டத்திக்குப் பின் பொதுத் தேர்தலை நடத்துவதாகக் கூறியிருந்தோம்.
அந்த தேர்தல் முடிவிற்குப் பின்னர் நாம் தேசிய அரசாங்கமொன்றை அமைத்து குறைந்தது அதிலிருந்து இரண்டு வருடங்களுக்காவது அதனை காத்திரமாக முன்னெடுத்துச் செல்வோம்.
அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்ற நாம் இப்போதிருந்தே தேசிய அரசாங்கமாக செயற்பட்டு வருகின்றோம் எமது அரசியல் கலாசாரம் வன்முறையை முற்றாக இல்லாதொழிக்கும்.
நாட்டில் அஹிம்சையே சட்டமாக வேண்டும் என நான் குறிப்பிட விரும்புகிறேன். நான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குத் தலைமைத்துவம் கொடுக்க முன்வந்திருக்காவிட்டால் மோசமான சூழலையே எதிர்கொள்ள நேரும் என்பதை நானறிந்துள்ளேன்.
இதனால் தேர்தல் வாக்குறுதிகளில் கூறியுள்ளதை நிறைவேற்ற எம் இரு சாராரினதும் இணக்கப்பாடு முக்கியமாகிறது. அதேபோன்று பொதுத் தேர்தலின் பின்னரும் அரசாங்கத்தை கொண்டு நடத்த இந்த இணக்கப்பாடும் தோழமையும் மிக அவசியம்.
நாட்டில் நடத்தப்படும் தேசிய கொண்டாட்டங்கள் எளிமையாக நடத்தப்படும். அத்துடன் ஜனாதிபதியான தமக்கு அதி மேன்மை போன்ற புகழ்ச்சிகளும் அவசியமில்லை அதனைத் தாம் விரும்பவில்லை என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply