அரச ஊடகங்களுக்கு எதிராக மனித உரிமை மீறல் முறைப்பாடு : மஹிந்த தேசப்பிரிய 

நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் பக்கச் சார்பாக நடத்துகொண்டமைக்காக அரசாங்க ஊடகங்களுக்கெதிராக மனித உரிமைகள் ஆணைக் குழுவில் முறைப்பாடு செய்யப்போவதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய நேற்று தெரிவித்தார். எதிர்காலத்தில் இவ்வாறான செயற்பாடுகள் இடம் பெறாமல் தடுப்பதற்காக பொறிமுறை கட்டமைப்பொன்று நிறுவப்பட வேண்டியது அவசியமென்பதை சுட்டிக்காட்டிய ஆணையாளர், அதனை உருவாக்கு வதற்கான அடிப் படையாகவே இந்த முறைப்பாட்டினை செய்ய உத்தேசித்திருப் பதாகவும் கூறினார்.

நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலின் கண்காணிப்பு தொடர்பிலான இறுதி அறிக்கையினை ட்ரான்ஸ்பெரன்ஸி இன்டர்நேஷனல் நிறுவனம் நேற்று பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் வெளியிட்டு வைத்தது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே தேர்தல்கள் ஆணையாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தேர்தலின் போது அரசாங்க ஊடகங்கள் பக்கச்சார்பாக நடந்து கொள்வதனை தடுக்கும் வகையிலான பொறிமுறையினை கண்காணிப்பு குழுக்கள், சிவில் சமூகம் மற்றும் நியமிக்கப்படவுள்ள சுயாதீன தேர்தல் ஆணைக்குழு ஆகியன இணைந்து உருவாக்க வேண்டியது அவசியமெனவும் ஆணையாளர் இச்சந்தர்ப்பத்தில் வலியுறுத்தினார்.

அரசாங்க ஊடகங்களும் அமைச்சுக்களும் பக்கச்சார்பாக நடந்துகொள்வதற்கு காரணமாக இருந்தவர்கள் இப்போது பதவியிலில்லாமையினால் பொறுப்புக் கூறுவதற்கு ஒருவரும் இல்லாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இவ்வாறான செயற்பாடுகளை தடுப்பதற்கு உறுதியான பொறிமுறை கட்டமைப்பொன்று இருக்குமாகவிருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் சட்டத்தை மீறி செயற்படமாட்டார்களெனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply