ஐ.எஸ். சார்பில் தற்கொலைத் தாக்குதலில் ஈடுபட்ட ஆஸ்திரேலிய இளைஞர் சாவு

இராக்கில் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகள் சார்பில் தற்கொலைத் தாக்குதலில் ஈடுபட்ட, ஆஸ்திரேலிய இளைஞர் ஒருவர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆஸ் திரேலியாவைச் சேர்ந்த ஜேக் பிலார்டி என்ற அந்த 18 வயது இளைஞர், மதவாதத்தால் ஈர்க்கப்பட்டு, ஐ.எஸ். அமைப்பில் இணைவதற்காக கடந்த ஆண்டு இராக், சிரியா நாடுகளுக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், இராக்கின் ரமாடி நகரில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் நிகழ்த்திய தொடர் தற்கொலைப் படைத் தாக்குதலில் பங்கேற்று, ஜேக் பிலார்டி உயிரிழந்ததாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.இதுகுறித்து ஆஸ்திரேலியாவிலிருந்து வெளியாகும் “சிட்னி மார்னிங் ஹெரால்டு’ நாளிதழ் வியாழக்கிழமை தெரிவித்ததாவது:

ஐ.எஸ். அமைப்பு வெளியிட்டுள்ள சுட்டுரை (டுவிட்டர்) பதிவில், “இன்றைய உயிர்த் தியாகிகள்’ என்ற தலைப்பிட்டு ஜேக் பிலார்டியின் புகைப்படம் வெளிட்டப்பட்டுள்ளது.

பிலார்டி ஓட்டிச் சென்றதாகக் கூறப்படும் வெடிபொருள் நிரம்பிய காரும், ஓட்டுநர் இருக்கையில் அவர் அமர்ந்திருப்பதைப் போன்ற காட்சியும் அத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், ஜேக் பிலார்டி எழுதியதாகக் கூறப்படும் வலைதளப் பதிவு (பிளாக்) ஒன்றும் இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

“மெல்போர்னிலிருந்து ரமாடி வரை: எனது பயணம்’ என்ற தலைப்பில் உருவாக்கப்பட்டுள்ள அந்த வலைதளத்தில் மேற்கத்திய சமுதாயத்தின் மீது பிலார்டிக்கு எவ்வாறு வெறுப்பு ஏற்பட்டது, அவர் எவ்வாறு இஸ்லாம் மதத்தின்பால் ஈர்க்கப்பட்டார் என்பது போன்றவை விவரிக்கப்பட்டிருந்தன என்று “சிட்னி மார்னிங் ஹெரால்டு’ தெரிவித்தது.

பிலார்டி எழுதியதாகக் கூறப்படும் வலைதளப் பதிவை தாங்களும் பார்த்தாகவும், எனினும் அது தற்போது இணையதளத்திலிருந்து நீக்கப்பட்டுவிட்டதாகவும் ஆஸ்திரேலியாவின் “ஃபேர்ஃபேக்ஸ்’ ஊடக நிறுவனம் தெரிவித்தது.

இதுகுறித்து ஆஸ்திரேலியப் பிரதமர் டோனி அப்போட் கூறியதாவது: எளிதில் மயங்கக்கூடிய இளைஞர்கள் மரணக் குழியை நோக்கி கவர்ந்திழுக்கப்படுகிறார்கள் என்பதையே இது காட்டுகிறது என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply