மஹிந்தவை பிரதமர் வேட்பாளராக நியமிக்காவிட்டால் மாற்று வழி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அறிவிப்பு
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் வேட்பாளராக நியமிக்காவிட்டால் மாற்று வழியொன்றில் செல்ல நேரிடும் என ஐ.ம.சு.மு. பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர். மக்கள் கேட்கும் நபருடன் சேர்ந்து மீண்டும் ஆட்சியமைப்பதா? அல்லது ஐ.தே.கவுக்கு ஆட்சியை தாரைவார்ப்பதா என முடிவு செய்ய வேண்டும் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர். ஐ.ம.சு.மு. பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏற்பாடு செய்திருந்த விசேட ஊடகவியலாளர் மாநாடு நேற்று பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் நடைபெற்றது. இங்கு கருத்துத் தெரிவித்த அவர்கள் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு பயந்து பாராளுமன்றத்தை கலைப்பது வெட்கக் கேடான விடயம் என்றும் தெரிவித்தனர்.
ஐ.ம.சு.மு. பாராளுமன்ற உறுப்பினர் களான டளஸ் அலஹப் பெரும, திலும் அமுனுகம, ஜான வக்கும்புர, அருந்திக பெர்ணாந்து, ரஞ்சித் சொய்சா ஆகியோர் இங்கு கருத்துத் தெரிவித்தனர்.
ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை எதிர்வரும் 6ம் திகதி விவாதிக்கப்பட உள்ளது. பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை ஒழுங்குப் புத்தகத்தில் உள்ள நிலையில் அவற்றை நிறுத்த ஐ.தே.க. முயல்கிறது. எம்.பிகளின் கையொப்பங்களை வாபஸ் பெற வைக்க முயற்சி நடக்கிறது. பாராளுமன்றத்தை கலைக்குமாறு ஜனாதிபதிக்கு அழுத்தம் வழங்கப்படுகிறது. மத்திய வங்கி மோசடி குறித்த இடைக்கால அறிக்கை இன்று (25) பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட உள்ள நிலையில் அதற்கு முன் பாராளுமன்றத்தை கலைக்க அரசு முயல்கிறது 20 வது திருத்தத்திற்கு உதவ நாம் தயார்.
19 வது திருத்தம் ஏற்கெனவே நிறைவேற்றப்பட்டிருந்தால் ரணில் விக்ரமசிங்க பிரபாகரனுடன் ஒப்பந்தம் செய்த போது சந்திரிகா குமாரதுங்கவினால் பாராளுமன்றத்தை கலைக்க முடிந்திருக்காது. 4 1/2 வருடம் காத்திருக்க நேர்ந்திருக்கும். அப்பொழுது நாட்டில் தனி ஈழம் உருவாகியிருக்கும். அதனாலே நாட்டின் மீது அன்பு செலுத்தும் மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமிக்க கோருகிறோம் என்றார். அருந்திக பெர்ணாந்து எம்.பி. கூறியதாவது,
20 வது திருத்தத்தை நிறைவேற்றும் உண்மையான நோக்கம் ஜனாதிபதிக்கு இருந்தால் 140 எம்.பிகள் உள்ள ஐ.சு.மு.வுக்கு ஆட்சியை வழங்க வேண்டும். நம்பிக்கையில்லா பிரேரணைக்காக ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைத்தால் அது ஐ.தே.க.வை பாதுகாக்க எடுத்த நடவடிக்கை என்றே கூற நேரிடும். அடுத்த தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு அவகாசம் வழங்காவிட்டால் மாற்று வழியை தேட நேரிடும்.
ரஞ்சித் த சொய்சா எம்.பி. கூறியதாவது,
எமது கையொப்பங்களை வாபஸ் பெற அரசு முயல்கிறது. நாம் அதற்கு தயாரில்லை. எத்தகைய சவால் வந்தாலும் அடுத்த தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ தலைமையின் கீ போட்டியிட முடிவு செய்துள்ளோம். மஹிந்த ராஜபக்ஷ இன்றி போட்டியிட்டால் 20 இலட்சம் வாக்குகள் கூட கிடைக்காது. சு.கவில் இருந்து விலகாது தேர்தலில் குதிப்போம் என்றார்.
திலும் அமுனுகம எம்.பி.
மஹிந்த ராஜபக்ஷவையும் இணைத்து போட்டியிடுவதன் மூலமே அடுத்த தேர்தலில் வெல்ல முடியும். சுதந்திரக் கட்சியினுள் நாட்டை பாதுகாக்கக் கூடிய முன்னேற்றக் கூடிய வேறு எந்த தலைவரும் இல்லாததாலே மக்கள் மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்க கோருகின்றனர் என்றார். ஜானக வக்கும்புர எம்.பி. கூறியதாவது,
19 வது திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களிக்குமாறு 20 வது திருத்தத்தை தான் நிறைவேற்றுவதாகவும் ஜனாதிபதி உறுதியளித்திருந்தார். ஆனால் பாராளுமன்றத்தை கலைக்க முயற்சி நடக்கிறது. மக்கள் விரும்பும் நபரை தேர்தலில் நிறுத்தாமல் தோற்றுப் போகும் ஐ.தே.க.வுக்கு ஆட்சியை வழங்குவதா மஹிந்த ராஜபக்ஷவை நிறுத்தி வெல்வதா என முடிவு செய்ய வேண்டும் என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply