ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேர திட்டமிட்ட 11 இந்தியர்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் சிறைபிடிப்பு
ஈராக் மற்றும் சிரியா நாடுகளின் சில பகுதிகளை ஆக்கிரமித்து தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேர திட்டமிட்ட 11 இந்தியர்கள் ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் சிறைபிடிக்கப்பட்ட தகவல் தற்போது வெளியாகியுள்ளது. ஏற்கனவே 17 இந்தியர்கள் இங்குள்ள நாடுகளில் வேலைசெய்தபடியே ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்துள்ள நிலையில் அந்த இயக்கத்தில் சேரும் திட்டத்தோடு ஈராக் மற்றும் சிரியாவுக்கு செல்ல முயன்ற குற்றத்துக்காகவும், அந்த இயக்கத்தில் சேர விரும்பியவர்களுக்கான பயண ஏற்பாடுகளை செய்து தந்தமைக்காகவும், அவர்களுக்கு நிதி திரட்டித்தரும் ரகசிய செயல்களில் ஈடுபட்டமைக்காகவும் ஒரு பாகிஸ்தான் நாட்டுக்காரர், ஒரு வங்காளதேசத்தவர் மற்றும் 11 இந்தியர்கள் என 13 பேர் கடந்த (ஆகஸ்ட்) மாதம் கைது செய்யப்பட்டதாக அராபிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கைதான 13 நபர்களில் 8 பேர் அபுதாபியையும், ஐந்து பேர் துபாயையும் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. இவர்களிடம் ரகசிய இடத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், குற்றத்தின் தன்மைக்கேற்ப, சிறை தண்டனையோ, ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் இருந்து வெளியேற்றப்படும் தண்டனையோ விதிக்கப்படலாம் எனவும் அந்த செய்திகள் சுட்டிக்காட்டுகின்றன.
இதே குற்றச்சாட்டின்கீழ் முன்னர் கைது செய்யப்பட்ட கேரள மாநிலத்தைச் சேர்ந்த இரு இந்தியர்கள் சில நாட்களுக்கு முன்னர் இங்கிருந்து நாடு கடத்தப்பட்டு, கொச்சி மற்றும் மலப்புரம் விமான நிலையத்தை வந்தடைந்தது நினைவிருக்கலாம்.
சமூக வலைத்தளங்கள் மூலமாக ஐ.எஸ்.தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பு ஏற்படுத்திக்கொள்ள முயன்ற அபுதாபி மற்றும் துபாயில் இயங்கிவரும் இரு இந்திய குழுவினரின் நடவடிக்கைகளை மிக நெருக்கமாக கண்காணித்த ஐக்கிய அரபு அமீரக ரகசியப் போலீசாரின் அதிரடி நடவடிக்கையின் விளைவாக தற்போது மேலும் 11 இந்தியர்கள் கைதாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply