இலங்கையை சர்வதேசம் நம்ப வேண்டும் : மங்கள சமரவீர

mangala-samaraweera-200கடந்த காலத்தில் மீறப்பட்ட உறுதி மொழிகள் மற்றும் அனுபவங்களைக் கொண்டு மதிப்பிடாது, புதிய இலங்கையை உருவாக்க முன்னெடுத்திருக்கும் அர்த்த முள்ள சாதகமான நடவடிக் கைகள் மீது சர்வதேசம் நம்பிக்கை வைக்க வேண்டுமென வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் தெரிவித்தார். தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய அரசியல் தீர்வொன்றை வழங்குவதே கடந்த காலத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் மீள ஏற்படாமல் தடுக்கும். புதிய அரசியலமைப்பின் ஊடாக தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வொன்றைக் காணமுடியும் என நாம் நம்புகின்றோம். இதற்காக கூடிய விரையில் பாராளு மன்றத்தில் அரசியலமைப்புச் சபை உருவாக்கப்படும் என்றும் கூறினார்.

 

ஜெனீவாவில் நேற்று ஆரம்பமான ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் 30ஆவது கூட்டத் தொடரில் இலங்கை சார்பில் உரையாற்றும்போதே வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

உண்மையைக் கண்டறிவது, சட்டம் மற்றும் இழப்பீட்டை உறுதி செய்வது மற்றும் மீள் சம்பவங்கள் ஏற்படாத சூழலை உறுதிப்படுத்த உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவொன்று அமைக்கப்படவிருப்பதுடன், காணாமல் போனவர்களுக்கான அலுவலகமொன்றும் திறக்கப்படவிருப்பதாக அமைச்சர் தனது உரையில் சுட்டிக்காட்டினார்.

 

உண்மை, நீதி, நல்லிணக்கம் ஆகியவற் றுக்கான ஆணைக்குழுவானது தென்னா பிரிக்க அதிகாரிகளின் ஆலோசனையுடன் உருவாக்கப்படவுள்ளது.

 

இந்த ஆணைக்குழு சகல மதங்களின் பிரதிநிதிகளையும் உள்ளடக்கியதாக இருப்பதுடன், பாதிக்கப்பட்ட மக்கள் நீதித்துறையின் மீது நம்பிக்கையிழந்து, ஒதுக்கப்படும் சூழ்நிலையில் அவர்களுக்கு உரிய ஒத்துழைப்பை வழங்கி சட்டரீதியான தீர்வைப் பெற்றுக்கொடுக்கும்.

 

அதேநேரம், காணாமல் போனவர்கள் பற்றி அறிந்துகொள்வதற்கான உரிமையை அவர்களின் குடும்பத்தினர் கொண்டுள்ளனர் என்ற சர்வதேச செஞ்சிலுவைச் சங்க நிபுணர்களின் சட்டப்பிரிவை கொண்டதாக காணாமல் போனவர்களுக்கான அலுவலகம் உருவாக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

 

கடந்த காலங்களில் இடம்பெற்ற விரும்பத்தகாத சம்பவங்கள் மீண்டும் ஏற்படாது இருப்பதை உறுதிப்படுத்துவதற்கு நிர்வாக மற்றும் சட்டத் திருத்தங்களைக் கொண்ட புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும். இதன் தொடர்ச்சியாக ஆத்திரமூட்டும் பேச்சுக்கள் மற்றும் பலவந்தமான காணாமல்போதல்கள் போன்றவற்றைத் தடுப்பதற்கு குற்றவியல் சட்டங்கள் உருவாக்கப்படும்.

 

பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு சமாதானம் கட்டியெழுப்பப்பட்டிருக்கும் சூழ் நிலையில், அதிகாரத்தில் உள்ள சிலர் உருவாக்கிய கலாசாரம் மற்றும் முறைகளால் பாதுகாப்புத் தரப்பினரின் மரியாதை சீர்குலைந்துள்ளது.

 

பொறுப்புக்கூறும் தன்மை தொடர்பில் சந்தேகம் கொள்பவர்களுக்கு நாம் கூறவிரும்புவது என்னவெனில், எதற்கும் பயப்பட வேண்டாம். இராணுவத்தினரின் நற்பெயருக்கு எதுவித களங்கமும் ஏற்படாத வகையில் நாம் நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என்ற நம்பிக்கையை பேணுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

ஓகஸ்ட் மாதம் 17ஆம் திகதி இரண்டு தரப்பிலும் உள்ள இனவாதிகள் தோற் கடிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறான சூழ் நிலையில் கடந்த காலத்தில் நிறைவேற் றப்படாத வாக்குறுதிகள், அனுபவங்கள் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு எம்மை மதிப்பிடவேண்டாம்.

 

கனவு காண்பதற்கு நாம் தயங்கக் கூடாது. அர்த்தமுள்ள பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்து தீர்வொன்றைக் காண்பதற்கு நாம் அஞ்சக் கூடாது.

 

இவற்றை நிறைவேற்றுவதற்கு நாம் அர்ப்பணிப்புடன் இருப்பதுடன், சர்வதேச சமூகம் மற்றும் இலங்கை மக்களுக்காக முன்னெடுக்கவிருக்கும் செயற்பாடுகள் தொடர்பில் அமைதிகாக்குமாறு கோரிக்கை விடுக்கின்றோம்.

 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரம சிங்க ஆகியோர் தடைகளை உடைத் தெறிந்து நாட்டை முன்னோக்கிக் கொண்டுசெல்லக் கூடிய அரசியல் உறுதிப்பாட்டைக் கொண்டவர்கள்.

 

புதிய இலங்கையை உருவாக்க முன்னெடுத்திருக்கும் அர்த்தமுள்ள சாதகமான நடவடிக்கைகள் மீது நம்பிக் கைவைத்து உதவ வேண்டும் எனக் கேட்டுக்கொள்வதாகவும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தனதுரையில் மேலும் கேட்டுக்கொண்டார்.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply