அமெரிக்கா உதவியுடன் இந்தியாவில் 6 அணு மின்நிலையங்கள்: மோடி-ஒபாமா சந்திப்புக்கு பிறகு அறிவிப்பு

O -MODI5 நாடுகள் சுற்றுப் பயணத்தில் ஆப்கானிஸ்தான் கத்தார் சுவிட்சர்லாந்து நாடுகளை தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் அமெரிக்கா சென்றார். தலைநகர் வாஷிங்டனுக்கு சென்ற அவர் அங்கு வெள்ளை மாளிகையில் அதிபர் ஒபாமாவை சந்தித்து பேசினார்.சந்திப்பின் போது பொருளாதாரம், பயங்கரவாதம், பருவநிலை மாற்றம், பிராந்திய பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசப்பட்டது. இப்பேச்சு வார்த்தை சுமார் ஒரு மணி நேரம் நடந்தது.

அதை தொடர்ந்து அதிபர் ஒபாமாவும், பிரதமர் நரேந்திரமோடியும் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.

அப்போது பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது:–

இந்தியாவும், அமெரிக்காவும் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளாகும். இருநாடுகளும், தங்களுக்கு எதிரான சவால்களுக்கு எதிராக மட்டுமின்றி உலக நாடுகள் எதிர் கொள்ளும் பல்வேறு சவால்களுக்கு எதிராகவும் தோளோடு தோள்நின்று பணியாற்று வதை பெருமையாக கருதுகிறோம். இந்தியாவில் 35 வயதுக்குள் 80 கோடி இளைஞர்கள் உள்ளனர். அவர்கள் அமெரிக்காவுடன் இணைந்து மனித சமூகத்துக்கு சேவையாற்ற உள்ளனர்.

இணைய தள குற்றங்களை தடுப்பதில் இருநாடுகளும் இணைந்து செயலாற்றும். ஜி-20 மாநாட்டில் நாங்கள் மீண்டும் சந்திக்க இருக்கிறோம். அப்போது பருவ நிலை மாற்றம் தொடர்பான முடிவுகளை பேச உள்ளோம்.

அணுசக்தி வினியோக நாடுகளின் கூட்டமைப்பு (என்.எஸ்.ஜி.) ஏவுகணைகள் தொழில்நுட்ப கட்டுப்பாடு அமைப்பு ஆகியவற்றில் இந்தியா உறுப்பினராவதற்கு அதிபர் ஒபாமா ஆதரவு தெரிவித்துள்ளார். அதற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். அமெரிக்க பாராளுமன்றத்தில் உரையாற்ற என்னை அழைத்ததற்கும் நன்றி கூறுகிறேன்’’ என்றார்.

முன்னதாக அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியதாவது:–

இந்தியாவின் வளர்ச்சிக்கும், அபிவிருத்திக்கும் அணுசக்தி தொழில் நுட்பம் தேவைப்படுகிறது. எனவே, அணுசக்தி வினியோக கூட்டமைப்பில் (என்.எஸ்.ஜி.) இந்தியா உறுப்பினராவதை அமெரிக்கா ஆதரிக்கிறது.

ஆக்கப்பூர்வமான அணு சக்தி துறையில் இருநாடுகளுக்கும் இடையே நிலவும் ஒத்துழைப்பை மேம்படுத்துவது, பாதுகாப்பு விவகாரங்களிலும் அமெரிக்கா ஆதரவாக செயல்படும்.

கடந்த ஆண்டு இந்திய குடியரசு தினவிழா கொண்டாட்டத்துக்கு என்னை தலைமை விருந்தினராக அழைத்த மோடிக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். அங்கு எனக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டதற்கும் மகிழ்ச்சி அடைகிறேன்’’.

இவ்வாறு ஒபாமா தெரிவித்தார்.

அமெரிக்க அதிபர் ஒபாமா-பிரதமர் நரேந்திர மோடியின் சந்திப்பை தொடர்ந்து வெள்ளை மாளிகை ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில் இந்திய அணு மின் கழகம், அமெரிக்காவின் வெஸ்டிங் ஹவுஸ் நிறுவனமும் இணைந்து இந்தியாவில் புதிதாக 6 அணு மின் நிலையங்கள் அமைக்க உள்ளன.

இதற்கான பொறியியல் மற்றும் வடிவமைப்பு பணிகளை உடனடியாக தொடங்குவது என இரு நிறுவனங்களும் ஒப்புக் கொண்டுள்ளன. இதற்கான ஒப்பந்தம் வருகிற 2017-ம் ஆண்டு ஜூன் மாதத்துக்குள் நடைபெறும்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply