ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் தாக்குதல்: பஸ் பயணிகள் 50 பேர் பணய கைதிகளாக சிறைபிடிப்பு
ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் தாக்குதல் தொடர்கிறது. அங்கு கார் பயணிகள், பணய கைதிகள் என அடுத்தடுத்து 24 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். பஸ் பயணிகள் 50 பேர் பணய கைதிகளாக சிறைபிடிக்கப்பட்டனர்.ஆப்கானிஸ்தானில் கடந்த சில மாதங்களாக தலீபான்கள், அரசு படையினருடன் கடுமையாக சண்டையிட்டு பல நகரங்களை பிடித்து வருகின்றனர்.இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் தலீபான்கள் அமைப்பின் தலைவர் முல்லா அக்தர் மன்சூர், பாகிஸ்தானில் ஆப்கானிஸ்தான் எல்லைப்பகுதியில் கடந்த மாதம் 21-ந் தேதி காரில் பயணம் செய்தபோது, அமெரிக்கா ஆளில்லா விமான தாக்குதல் நடத்தி கொன்றது. இந்த சம்பவத்தை தொடர்ந்து தலீபான்கள் இயக்கத்தின் புதிய தலைவராக ஹைபதுல்லா அகுந்த் ஜாதா நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றார். அவர் பொறுப்புக்கு வந்துள்ள நிலையில், தலீபான்கள் நிலையில் மாற்றம் ஏற்படுமா, அரசுடன் ஆக்கப்பூர்வமான பேச்சு வார்த்தை நடத்துவார்களா என்ற கேள்விகள் உலக அரங்கில் எழுந்தன.
ஆனால் தலீபான்கள் நிலையில் எந்த மாற்றமும் இல்லை என்பதை நிரூபிக்கிற விதத்தில் ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர். கடந்த மாதம் 31-ந் தேதி ஆப்கானிஸ்தானின் வட பகுதியில் குண்டூஸ் மாகாணத்தில் அலியாபாத் மாவட்டத்தில் தலீபான்கள், ஒரே நேரத்தில் 3 பஸ்களை வழிமறித்து சரமாரியாக தாக்குதல் நடத்தினர். 16 பயணிகளை சுட்டுக்கொன்ற அவர்கள், 30 பேரை பணய கைதிகளாகவும் பிடித்து சென்றனர்.
இந்த நிலையில், குண்டூஸ் நகரில் நெடுஞ்சாலைகளில் தலீபான்கள் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்துவதில் குறியாக உள்ளனர். நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) இரவு அங்கு இரண்டு கார்களை தடுத்து நிறுத்தினர். அந்த கார்களில் இருந்தவர்களை வெளியே வருமாறு உத்தரவிட்டனர். அவர்கள் வெளியே வந்தபோது சரமாரியாக சுட்டுக்கொன்றனர். இதில் 12 பேர் பலியானதாக தகவல்கள் கூறுகின்றன.
இது தொடர்பாக குண்டூஸ் மாகாண கவர்னரின் செய்தி தொடர்பாளர் ஜாவித் சாலங்கி நேற்று நிருபர்களிடம் பேசுகையில், “கார்களில் பயணம் செய்தவர்களை தலீபான்கள் வெளியே வர உத்தரவிட்டு, அவர்கள் வெளியே வந்தபோது சுட்டுக்கொன்று விட்டனர். 12 பேர் இப்படி சுட்டுக்கொல்லப்பட்டு, அவர்களது உடல்கள் கிடந்ததை உள்ளூர்வாசிகள் கண்டிருக்கிறார்கள்” என கூறினார்.
அந்த சம்பவத்தை தொடர்ந்து அடுத்த சில மணி நேரத்தில், சமீபத்தில் கடத்தி சென்று பணய கைதிகளாக வைத்திருந்த 7 போலீசார் உள்ளிட்ட 12 பேரை ஆண்டார் மாவட்டத்தில் தலீபான்கள் சுட்டுக்கொன்று விட்டதாகவும், இந்த சம்பவத்தை உள்ளூர் மக்களை கூடி வந்து பார்க்குமாறு நிர்ப்பந்தித்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
படுகொலை செய்யப்பட்ட 12 பேரும் வெவ்வேறு காலகட்டங்களில் பணய கைதிகளாக பிடிக்கப்பட்டவர்கள் என்று ராணுவ உளவு பிரிவு அதிகாரி குலாம் முகமது தாரி தெரிவித்தார்.
நேற்றும் தங்களது தாக்குதல்களை தொடர்ந்த தலீபான்கள், குண்டூஸ் நகர் அருகே ஒரு பஸ்சையும், ஒரு காரையும் வழிமறித்து தாக்கினர். அவற்றில் பயணம் செய்த 50 பேரையும் வெளியே வரச்செய்து, பணய கைதிகளாக சிறைபிடித்தனர்.
இதுகுறித்து போலீஸ் செய்தி தொடர்பாளர் மகபோசுல்லா அக்பரி கூறும்போது, “தலீபான்கள் கடத்திச்சென்ற பயணிகளை மீட்பதற்கு எங்களால் முடிந்த அளவுக்கு முயற்சி எடுக்கிறோம்” என குறிப்பிட்டார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply