பிரான்ஸ் தேவாலயத்திற்குள் தாக்குதல்: மதகுரு கொலை

france வடக்கு பிரான்ஸில் ரூவானுக்கு அருகே தேவாலயம் ஒன்றில் ஆட்களை பிடித்து பணயமாக வைத்திருந்த இரு ஆயுததாரிகள் நடத்திய தாக்குதலில் அந்த தேவாலயத்தின் மதகுரு ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். தேவாலயத்திற்குள் நேற்றுக் காலை புகுந்த ஆயுததாரிகள் மத குரு மற்றும் மேலும் நான்கு பேரை பணயக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு பொலிஸார் விரைந்ததை அடுத்த அங்கு துப்பாக்கி சத்தங்கள் கேட்டதாக அங்கிருக்கும் செய்தியாளர்கள் விபரித்துள்ளனர்.

 

பணயக்கைதிகளை பிடித்து வைத்திருந்த இருவரும் கொல்லப்பட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் குறிப்பிட்டுள்ளன.

 

இதில் 95 வயதான மதகுரு கழுத்தை அறுத்து கொல்லப்பட்டிருப்பதாக பிரான்ஸ் உள்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

 

அந்த பகுதியை சுற்றிவளைத்த பொலிஸார் மக்கள் வெளியே வருவதை தவிர்க்குமாறு கோரியுள்ளனர். இதில் மற்றொரு பணயக்கைதி ஆபத்தான நிலையில் இருப்பதாக பிரான்ஸ் உள்துறை அமைச்சின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

 

தேவாலயத்தில் இருந்து வெளியே வந்த ஆயுததாரிகள் செயலிழக்கச் செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து தேவாலயத்தில் வெடிகுண்டுகளை தேடி பொலிஸார் சல்லடை இட்டனர்.

 

இந்த தாக்குதலின் நோக்கம் உடன் உறுதியாகாத போதும் சம்பவம் குறித்து தீவிரவாத தடுப்புப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

 

இது ஒரு காட்டுமிராண்டித்தனமான கொடூர தாக்குதல் என்று பிரதமர் மானுவல் வோல்ஸ் அதிர்ச்சியை வெளியிட்டுள்ளார். “பிரான்ஸ் மக்கள் அனைவரும், கத்தோலிக்கர்களும் பாதிக்கப்பட்டனர். நாம் ஒன்றிணைந்து நிற்கவேண்டும்” என்று அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் எழுதியுள்ளார். பிரான்ஸில் 84 பேரை பலிகொண்ட நீஸ் தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து அங்கு உஷர் நிலை அதிகரிக்கப்பட்டிருக்கும் சூழலிலேயே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. பிரான்ஸில் அண்மைக் காலங்களில் இஸ்லாமிய தேசம் (ஐ.எஸ்) குழு பொறுப்பெற்ற பல உயிர்ப்பலி கொண்ட தாக்குதல்களும் இடம்பெற்றுள்ளன.

 

ஜூலை 14 ஆம் திகதி இடம்பெற்ற நீஸ் தாக்குதலுக்கு பின்னர் நாட்டில் அவசர நிலை அமுலில் இருப்பதோடு மேலதிக பொலிஸார் பாதுகாப்பு கடைமைகளுக்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

 

 

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply