விக்னேஸ்வரனுக்கு எதிராக பொதுபலசேனா இன்று பேரணி
வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக பொதுபலசேனா இன்று வவுனியாவில் எதிர்ப்பு பேரணியொன்றை நடத்துகிறது. எழுக தமிழ் பேரணியில் விக்னேஸ்வரன் கூறிய கருத்துக்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் நோக்கிலேயே இந்த எதிர்ப்புப் பேரணியை தாம் நடத்துவதாக பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் கலகொட ஞானசார தேரர் தெரிவித்தார்.
யுத்தத்தால் நாட்டிலுள்ள சகல இன மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். யுத்தம் முடிந்து தற்பொழுது சகலரும் நாட்டில் அமைதியாக வாழ்வதற்காக காணப்படும் சூழலைக் குழப்பும் வகையில் செயற்படும் விக்னேஸ்வரனுக்கு எதிராகவே தாம் போராட்டம் நடத்தவிருப்பதாகக் கூறினார்.
யாழ்ப்பாணத்தில் சிங்களவர்கள் வாழ முடியாது எனக் கூறுகின்றார். பதிலுக்கு கொழும்பில் தமிழர்கள் வாழ முடியாது எனக் கூறமுடியுமா? அமைதியான சூழ்நிலையில் சிங்கள மக்களை உசுப்பிவிடும் வகையிலான வடமாகாண முதலமைச்சரின் கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்தப் போராட்டத்தை முன்னெடுக்கவிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
கடந்த சனிக்கிழமை யாழ்ப்பாணம் முற்றவெளியில் இடம்பெற்ற எழுக தமிழ் மக்கள் பேரணியில் வடக்கில் சிங்களக் குடியேற்றங்கள் தடுக்கப்பட வேண்டும், பெளத்த விகாரைகள் அமைக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருந்தன. இது இனவாதத்தைத் தூண்டும் செயற்பாடு என தென்பகுதி அரசியல்வாதிகள் பலர் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இவ்வாறான நிலையில் சிங்கள மக்களை விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் கலகொட ஞானசார தேரர் தலைமையில் வவுனியாவில் எதிர்ப்புப் பேரணியை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply