உண்மையான தீர்வை நோக்கி தமிழ் மக்களை அழைத்துச் செல்லுங்கள்:வீ.ஆனந்தசங்கரி
நான் ஏற்கவே கூறியது போல் கடிதத் தொடரின் நான்காவது கடிதம் உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாததாக இருக்கும். வழமைபோலவே இது புறக்கணிக்கக்கூடியதல்ல தற்போதைய மோசமான நிலைமையை பற்றி நீங்கள் உணர்வதாகவும் தெரியவில்லை. கனடா நாட்டின் ரொறொன்டோ ஒட்டாரியோ இல் விசாரிக்கப்பட்டு, ஒட்டாவா ரொறொன்டோ சமஷ்டி நீதிமன்றத்தில் இடம்பெற்ற மேன்முறையீட்டு விசாரணை ஒன்றின் தீர்ப்பு 25-08-2016 இல் வழங்கப்பட்டது. முன்னைய எனது கடிதத்திலும் இந்த வழக்கு பற்றித்தான் குறிப்பிட்டிருந்தேன். இந்த வழக்கு இலங்கையர் ஒருவரால் அகதி அந்தஸ்து கோரி குடிவரவு அகதிகள் சபையின் குடிவரவுப் பகுதிக்கு விண்ணப்பித்து கிடைத்த தீர்ப்புக்கு மீள் பரிசீலனைக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இவ் வழக்கை விசாரணை செய்த கௌரவ திரு.ஜஸ்டிஸ் புரவுன் நீதிபதி மேல் மீள்பரிசீலனை விண்ணப்பத்தை தள்ளுபடி செய்ய கடமைப்பட்டவன் என்று கூறி அதற்கான காரணங்களை நீண்ட பட்டியலில் வெளியிட்டிருந்தார். அவற்றில் நீங்கள் அக்கறை கொள்ளக்கூடியதாக நான் கருதும் சம்பந்தப்பட்ட பகுதி 41ஐ இங்கே குறிப்பிடுகின்றேன்.
“விண்ணப்பதாரி விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆதரவாக செயற்படவில்லை என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்தி கூறுகின்றார். இருப்பினும் தீர்மானிக்கப்பட வேண்டிய விடயம் அதுவல்ல. இங்கு பிரச்சினை யாதெனில் பயங்கரவாதத்தில் ஈடுபட்ட ஒரு அமைப்பின் அங்கத்துவம் பற்றியதே. விடுதலைப் புலிகள் அவ்வாறான இயக்கம்தான் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை என்பது இங்கே ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அதை நான் ஏற்றுக்கொள்கிறேன். விண்ணப்பதாரி விடுதலைப் புலிகளை ஆதரிக்கும் இலங்கை தமிழரசு கட்சியின் அங்கத்துவம் மூலமாகவும் இலங்கை தமிழரசு கட்சியை வழிநடாத்தி தீவிரமாக விடுதலைப் புலிகளை ஆதரிக்கின்ற தமிழ் தேசிய கூட்டமைப்பை வெற்றிகரமாக வழிநடத்தி விடுதலைப் புலிகளை ஆதரிக்கின்ற திரு. இரா.சம்பந்தன் அவர்களை தலைவராக ஏற்றுக்கொண்டுள்ளமையாலும் பயங்கரவாதத்தோடு சம்பந்தப்பட்ட ஒரு அமைப்பில் அங்கத்துவம் வகிக்கின்றார் என்பதற்கான போதியளவு காரணங்கள் இருக்கின்றது என குடிவரவுப்பகுதி கூறுவது நியாயமாக தெரிகின்றது.
இதனை நீங்கள் புறக்கணிக்கக்கூடிய சாதாரண விடயமல்ல. இது கனடாவில் மட்டுல்ல பல்வேறு நாடுகளில் அகதி அந்தஸ்து கோருகின்றவர்களையும், அதற்காக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்தும். இது விசாரணையை எதிர்நோக்கும் கனடாவில் மட்டுமல்ல உலகம் முழுவதிலும் பல்வேறு நாடுகளில் உள்ள பல்லாயிரக்கணக்கான இளைஞர்களை பாதிப்புக்குள்ளாக்கக்கூடிய விடயமாகும். தீர்ப்பு வழங்கப்பட்டு ஆறு வாரங்கள் கடந்து விட்டன. இவ்வழக்கு விசாரணையின்போது உங்கள் பெயர் மட்டும் முக்கியமாக பல இடங்களில் சுட்டிக்காட்டப்பட்டிருந்த போதும் இன்றுவரை இது சம்பந்தமாக நீங்கள் கருத்து எதனையும் தெரிவித்ததாக எங்கும் காணமுடியவில்லை. உண்மை நிலைமையின் பாதிப்பை உணராத ஒரு சட்டத்தரணி தனது அரசியல் கட்சி இது சம்பந்தமாக ஆராய்ந்து வருவதாகவும், எவ்வாறு இப்பிரச்சினையை கனடிய அரசோடு பேச வேண்டுமென்று ஆராய்ந்து வருவதாகவும் கூறியுள்ளார். இது நீதிபரிபாலனத்துடன் சம்பந்தப்பட்ட விடயமாகையால் கனடிய அரசோடு பேசித் தீர்த்துக்கொள்ளலாம் என்று நினைப்பது புத்திசாலிதனமாக எனக்குத் தெரியவில்லை. நமது நாட்டில் அரசியல் கைதிகளை விடுவிக்க முடியாதிருக்கும் போது வேறொரு நாட்டின் நீதித்துறையின் தீர்ப்பில் நாம் எவ்வாறு தலையிட முடியும்?
ஒரு உள்ளுர் வாரப்பதிரிகை ஒன்றுக்கு பேட்டியளித்த இந்த சட்டத்தரணி எமது நாடு கனடிய அரசுடன் நல்லெண்ண உறவு கொண்டுள்ளது. இத்தகைய ஊகம் தவறானதாகும் என்ற கூற்று நிலைமையை மேலும் மோசமடைய செய்யக்கூடும். கனடாவுடன் நாம் நல்லுறவு கொண்டுள்ளோம் என்பதை யாரும் மறுக்கவில்லை. ஆனால் கனடிய நீதிமன்றத்தின் கூற்றில் குற்றம் காண்பது என்பது என்னுடைய அபிப்பிராயப்படி கனடிய நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலுக்குக்கு ஒப்பானதாகும். இச்சட்டத்தரணி மேலும் தெரிவிக்கையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமையுடன் கலந்துரையாடி கனடாவுக்கு பிரதிநிதிகளை அனுப்ப வேண்டும் என்று கூறியிருந்தார். அதில் வெற்றி கண்டால் நல்லதுதான். ஆனால் விவாதத்துக்குரிய விடயமே தமிழ் தேசிய கூட்டமைப்புத்தான் என்பதையும் இது ஒரு நாட்டின் நீதிபரிபாலனம் சம்பந்தப்பட்ட விடயம் என்பது பற்றி தயவு செய்து அவருக்கு உணர்த்துங்கள்.
திரு சம்பந்தன் அவர்களே, அனுபவமற்றவர்களுடைய கையில் இப் பொறுப்பை கொடுத்து தமது பிள்ளைகளை நம்பி வாழும் அப்பாவிகளுக்கு உண்மைக்கு புறம்பான நம்பிக்கையை ஊட்டி அவர்களை ஏமாற வைக்க வேண்டாம். பல சந்தர்ப்பங்களில் என்னுடைய ஆலோசனைகளை நீங்கள் பெறுவதில்லை. ஆனால் அவ்வேளைகளில் நான் சரியாகவே செயற்பட்டு வந்திருக்கின்றேன். நான் எப்போதும் நிரந்தர தீர்வு பற்றியே யோசிப்பேன். நீங்கள் அதற்கு மாறாக தற்காலிகமாக சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு அரைகுறையான தீர்வை பற்றியே சிந்திப்பீர்கள். தயவு செய்து விழித்தெழுந்து இப்பிரச்சினையை கையிலெடுத்து ஆகவேண்டியவற்றை செய்யுங்கள்.
பல்வேறு நாடுகளிலும் அகதி அந்தஸ்த்து கோரி நிற்கும் இளைஞர்களை இத்தீர்ப்பு பாதிக்காதென நினைக்கின்றீர்களா? உங்களுடைய அரசியல் எதிர்காலம் கூட பாதிக்கப்படலாமென எண்ணத் தோன்றுகிறது. கனடிய நீதியரசர் மிகத்தெளிவாக நீங்களும், தமிழரசு கட்சியும், தமிழ் தேசிய கூட்டமைப்பும் பிரபல்யமான விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளை கொண்டுள்ளீர்கள் எனக்கூறுகின்றார். நீங்களும் உங்கள் சகாக்களும் அபூர்வமான கருத்துக்களை முன்வைத்து விடுதலைப் புலிகளின் ஆதரவை பெற்று பாராளுமன்றத்துக்கு சென்றீர்கள். பின்பு அவர்களை காப்பாற்றுவதற்கான எந்தவித நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லையென்பது மட்டுமல்ல அவர்களை போர்க்குற்றங்களுக் காக விசாரணைசெய்ய வேண்டுமென வலிந்து கேட்டதும் நீங்கள்தான். இதுவே தமிழர் போராட்டத்தின் வரலாற்றில் செய்யப்பட்ட பச்சைத் துரோகமாகும்.
அந்த இயக்கத்தை சேர்ந்தவர்களில் ஒரு சாரார் சிறுவர்களாக சேர்ந்தவர்கள். வேறுசிலர் பலாத்காரமாக சேர்த்துக்கொள்ளப்பட்டவர்கள். ஏனையோர் உணர்ச்சிபூர்வமான கருத்துக்களால் தூண்டப்பட்டு சேர்ந்தவர்கள். இந்த மூன்று சாராரையும் எவரெவர் எந்தெந்த பிரிவைப் சார்ந்தவர்களென அடையாளம் காணமுடியுமா? உங்களின் இந்த கூற்றுதான் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படாமைக்கு ஒரே காரணமாகும். இதுவும் ஒரு படுபாதக செயலாகும்
யுத்தகாலத்தில் நான் உங்களுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் அரசுக்கும் பல கடிதங்கள் எழுதியுள்ளேன். 11-01-2009 அன்று வன்னியில் அகப்பட்டுள்ள அப்பாவி மக்களை விடுவிக்குமாறும் அன்றேல் பாராளுமன்ற பதவிகளை துறக்குமாறும் கேட்டிருந்தேன். 16-03-2009 தம்பி பிரபாகரனுக்கு எழுதியிருந்த கடிதத்தில் 81,000; குடும்பங்களைச் சேர்ந்த மூன்று லட்சத்து முப்பதாயிரம் மக்களின் சாபத்துக்குள்ளாக வேண்டாமென்று கோரியிருந்தேன். 02-05-2009 இல்; இலங்கை ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில் அரசுக்கு ஏற்புடைய ஒரு சர்வதேச அரசு சார்பற்ற நிறுவனத்தை வன்னிக்குச் அனுப்பி விடுதலைப் புலிகளை கண்டு அப்பாவி மக்களை விடுவிக்குமாறு கேட்டிருந்தேன். துரதிஸ்டவசமாக இதற்கு ஒருவரும் செவிசாய்க்கவில்லை. 10-04-2009 அன்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சின் செயலாளர் ஸ்ரீ சிவ்சங்கர் மேனன் உங்களை அதாவது தமிழ் தேசிய கூட்டமைப்பை உடனடியாக டெல்லிக்கு வருமாறு விட்ட அழைப்பை முதலில் யுத்தத்தை நிறுத்துங்கள் என்றுகூறி நிராகரித்தீர்கள். இந்த ஆலோசனைகளில் ஏதாவது ஒன்றுக்கு சாதகமான நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் முற்று முழுதாக, விடுதலைப்புலிகள், தம்பி பிரபாகரன் அவர் குடும்பத்தார் உள்ளடங்களாக அனைவரும் காப்பாற்றப்பட்டிருப்பார்கள். அக்காலத்தில் இடம்பெற்ற பல்வேறு துயரச்சம்பவங்கள் நடந்திருக்காது. உங்களையும், உங்களுடைய தமிழரசு கட்சியையும், தமிழ் தேசிய கூட்டமைப்பையும் எவரும் பயங்கரவாத அமைப்போடு தொடர்புள்ளவர்கள் என முத்திரை குத்தப்பட்டிருக்கமாட்டீர்கள்.
திரு.சம்பந்தன் அவர்களே தற்போது நடந்து கொண்டிருக்கின்ற அத்தனைக்கும் நீங்களே முழு பொறுப்பேற்க வேண்டும். 2004ம் ஆண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பு இலங்கை தமிழரசு சார்பில் தேர்தலில் போட்டியிடவேண்டிய அவசியமும் இருக்கவில்லை. அந்த நேரத்தில் விடுதலைப் புலிகள்தான் தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள்,அவர்கள்தான் தமிழ் மக்களின் தேசிய தலைமை என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு அங்கீகரித்தமை அவசியமற்ற செயலாகும். அதற்கு முன்பே இனப்பிரச்சினை சம்பந்தமாக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கும் அதுபோன்ற செயல்பாடுகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கு ஏகபிரதிநிதித்துவ அந்தஸ்த்து வழங்குவதாகவும் வேறு விடயங்களுக்கல்ல என்பதையும் நாம் எல்லோரும் தீர்மானித்திருந்தோம். தலைமை பதவியை மட்டுமே தனது ஓரேநோக்கமாகவும் சிந்தனையாகவும் கொண்ட ஒருவருடைய முட்டாள்தனமான கோரிக்கைகள் அத்தனைக்கும் இணைந்து நீங்கள் செயற்பட்டமையாலேயே தமிழ் மக்கள் இந்நிலைமைக்கு ஆளாகியுள்ளனர். பதவி பேராசை எல்லாவற்றையும் அழித்துவிட்டு இப்போது இலங்கைவாழ் தமிழ் சமூகம்; பயங்கரவாதிகளாக பிரகடனப்படுத்தப் படும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
உங்களால் முடிந்தால் தயவு செய்து எங்களை காப்பாற்றுங்கள். உங்களால் முடியாவிட்டால் உங்களுடைய பணியில் தோல்வியடைந்துள்ளதாக வெளிப்படுத்தி உங்களுடைய தலைமைத்துவத்தை முழுஅதிகாரம் பெற்ற தந்தை செல்வாவால,; கௌரவ ஜீ.ஜீ.பொன்னம்பலம் கௌரவ எஸ்.தொண்டமான் ஆகியோரின் அனுசரணையுடன் தமிழ் மக்களின் பெரும் சொத்தாக விட்டுச்செல்லப்பட்டட தமிழர் விடுதலைக் கூட்டணியிடம் கையளியுங்கள். எனக்கு தற்போது 83 வயதாகியும் தேவைப்படுவது மிக விரைவாகவும் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியதுமான நல்லதொரு தீர்வேயொழிய எதுவித பதவியும் அல்ல. தமிழ் மக்களுக்கு ஏற்புடைய தீர்வொன்று வழங்கப்படும் பட்சத்தில் நான் ஒதுங்கியிருக்கத் தயாராகவுள்ளேன். உங்களால் தனியாக நின்று எமது பிரச்சினைக்கு ஒரு தீர்வை என்றும் காணமுடியாது. இப்போதாவது முக்கிய விடயங்கள் பற்றி பேசுவதற்கு ஓர் சர்வகட்சி மாநாட்டை கூட்டுங்கள் அன்றேல் அப்பணியை என்னிடம் கையளியுங்கள்
வீ.ஆனந்தசங்கரி செயலாளர் நாயகம்- த.வி.கூ
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply