“அத்தகொட்டா” உட்பட 18 பேருக்கு மரணதண்டனை

colnoori174942924_5050130_25112016_kaa_cmy1தெரணியகல நூரி தோட்டத்தின் முகாமையாளர் கொலை தொடர்பில் 18 பேருக்கு மரணதண்டனை வழங்கப்பட்டுள்ளது. தெரணியகல பிரதேச சபையின் முன்னாள் தலைவர் “அத்த கொட்டா” என்றழைக்கப்படும் அனில் சம்பிக்க விஜேசிங்க உள்ளிட்ட 18 பேருக்கே அவிசாவளை மேல்நீதிமன்ற நீதிபதி தேவிகா அபயரட்ன, மரணதண்டனை வழங்கித் தீர்ப்பளித்துள்ளார்.

இவர்களுக்கு எதிராக, தாக்குதல் நடத்தியமை, படுகொலை செய்தமை, காவலாளிகளைத் தாக்கியமை உள்ளிட்ட 10 குற்றச்சாட்டுக்களுக்கே மரணதண்டனை வழங்கப்பட்டுள்ளது.

 

கடந்த 2013ஆம் ஆண்டு ஜூலை மாதம் 5ஆம் திகதி தெரணியகல நூரி தோட்ட முகாமையாளரான நிஹால் பெரேரா படுகொலை செய்யப்பட்டிருந்தார். இச்சம்பவம் தொடர்பில் சம்பிக்க விஜேசிங்கவுடன், அமில வசந்த விஜயசிங்க, ரி.கே.வீரபாகு, விஜயகுமார, ரமேஷ் சசிகுமார், பெருமாள் ரவிகுமார், பெருமாள் உதயகுமார், ராஜேந்திரன் ரவிகுமார், ரமேஷ் சிவகுமார், சித்திரவேல் நிஷாந்தகுமார், கிருஷ்ணவேல் ராஜேந்திரன், எச்.ஜீ.அசன் ரங்கன் விஜயசிங்க, எஸ்.பழையாண்டி, ஆறுமுகேஸ் அர்ஜுன், இந்திக விஜயசிறி, அருணாச்சலம் முனியாண்டி, இந்துனில் லக்‌ஷித, தினேஷ் சத்துரங்க ஆகியோருக்கே மரணதணடனை வழங்கப்பட்டுள்ளது.

 

சட்டவிரோதமாக ஒன்று கூடியமை, காவலாளிகளைத் தாக்கி காயப்படுத்திய குற்றங்களுக்காக அவர்களுக்கு மரண தண்டனைக்கு மேலதிகமாக, மூன்றரை வருடங்கள் கடூழியச் சிறைத்தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.

 

எழுபத்தொரு வயதான நூரி தோட்ட முகாமையாளர் பெரேரா, எஸ்.யூ.வி வாகனத்தில் சென்ற குழுவினரால் கடுமையாகத் தாக்கப்பட்டிருந்தார். படுகாயமடைந்த நிலையில் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

 

இந்தக் கொலை வழக்குத் தொடர்பான தீர்ப்பு நேற்று அறிவிக்கப்படுவதை முன்னிட்டு அவிசாவளை மேல்நீதிமன்ற வளாகத்தில் விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். முற்பகல் 9.30 மணியளவில் குற்றவாளிகள் நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பட்டனர். நீதிபதி தேவிகா அபயரட்ன தீர்ப்பை அறிவிப்பதற்கு முன்னர் அரசதரப்பு சட்டத்தரணிகள் மற்றும் ஏனைய சட்டத்தரணிகளுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

 

தனது தீர்ப்பினை வாசித்த நீதிபதி, இந்த படுகொலைச் சம்பவம் குறித்த விசாரணைகளை தெரணியகல பொலிஸார் கையாண்ட விதத்தினை கடுமையாக விமர்சித்திருந்தார். பொலிஸாரின் சில செயற்பாடுகள் குறித்த தோட்டத்தின் நிலைமைகளை மோசமடையச் செய்திருந்ததாகவும், பின்னர் விசாரணைகள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் மாற்றப்பட்டிருந்ததாகவும் குறிப்பிட்டார்.

 

அரச சட்டத்தரணி பிரதி சொலிசிட்ட ஜெனரல் ஷானில் குலரட்ண முறைப்பாட்டாளர்கள் சார்பில் சாட்சியங்களை ஆஜர்படுத்தியிருந்ததுடன், பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் சட்டத்தரணி அசங்க சேனாரட்ண ஆஜராகியிருந்தார்.

 

2013ஆம் ஆண்டு இடம்பெற்ற இந்தப் படுகொலைச் சம்பவத்துடன் பிரதேசத்தைச் சேர்ந்த அரசியல்வாதிக்கு தொடர்பு இருப்பதாக ஆரம்பம் முதல் குற்றஞ்சாட்டப்பட்டுவந்தது. இச்சம்பவத்தை விசாரணை நடத்துவதில் பாரபட்சம் காட்டப்பட்டமை தொடர்பில் தெரணியகல பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உட்பட 18 பேர் இடமாற்றம் செய்யப்பட்டிருந்தனர்.

 

நிஹால் பெரேராவின் படுகொலை குறித்த வழக்கு கடந்த 2015ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 24ஆம் திகதி ஆரம்பமானது. ஆரம்பத்தில் தெரணியகல முன்னாள் பிரதேச சபைத் தலைவர் உட்பட 21 பேருக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. இச்சம்பவம் குறித்து 20 பேர் சாட்சியமளித்திருந்தனர். குற்றவாளிகள் கைதுசெய்யப்பட்ட நாள் முதல் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருக்கவில்லை. மரண தண்டனை தீர்ப்பையடுத்து குற்றவாளிகள் சிறைச்சாலை அதிகாரிகளால் அழைத்துச்செல்லப்பட்டிருந்தனர்.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply