கியூபா நாட்டின் புரட்சித் தலைவர் பிடல் காஸ்ட்ரோ மரணம்

castoஅமெரிக்கா தனது ஏகாதிபத்திய கொள்கையின் மூலம் கியூபாவிலும் தனது கொடியை நாட்டியிருந்தது. ஆனால் அமெரிக்காவால் அங்கு நெடுங்காலம் நிலைத்து நிற்கமுடியவில்லை. அமெரிக்காவின் பல பெரு முதலாளிகள் கியூபாவில் கால்பதித்து கியூபா நாட்டு அரசின் துணையுடன் அங்கு தொழில் செய்து கியூபா நாட்டு மக்களையும் அதன் செல்வத்தையும் சுரண்டிக்கொண்டிருந்தனர்.

இதனைக் கண்டு கொதித்தெழுந்த பிடல் காஸ்ட்ரோ கியூபாவின் அரசிற்கு எதிராக போராட்டத்தில் குதித்தார். அவர் தனது போராட்டத்தை முன்னெடுத்து செல்ல தேர்ந்தெடுத்த கொள்கைதான் கம்யூனிசம். பிடல் காஸ்ட்ரோ கல்லூரியில் படிக்கும்பொழுதே கம்யூனிச கட்சியில் இணைந்து பல போராட்டங்களில் ஈடுபட்டு சிறை சென்றார்.

அவரது தொடர் போராட்டத்தின் விளைவாக 1959ம் ஆண்டு புல்ஜென்சியோ பாட்டிட்ஸ்டாவின் ஆட்சியை வீழ்த்தி தலைமை அமைச்சராக பொறுப்பேற்றார். 1959 முதல் 1976 வரை கியூபாவின் பிரதமராகவும், 1976 முதல் 2008-ம் ஆண்டு வரை கியூபாவின் ஜனாதிபதியாகவும் பொறுப்பு வகித்தார்.

இவர் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு அமெரிக்காவிற்கும் கியூபாவிற்கும் நேரடி மோதல்கள் வெடித்தது. முதலில் காஸ்ட்ரோவை அமெரிக்கா தனது பக்கம் இழுக்க நினைத்து திட்டங்களை தீட்டியது. ஆனால் அதனுடைய திட்டங்கள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன. கியூபாவின் வளங்கள் அனைத்தும் கியூபா மக்களுக்கே சொந்தம் என காஸ்ட்ரோ அறிவித்தார். மேலும் கியூபாவில் உள்ள தொழிற்சாலைகள் அனைத்தையும் பொதுவுடைமையாக அறிவித்தார், காஸ்ட்ரோ. அதனால் கடும் கோபம் கொண்ட அமெரிக்கா கியூபாவின் மீது பொருளாதார தடை விதித்தது.

கியூபாவில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் அனைத்தும் கியூபாவிலேயே தேங்கும் நிலை ஏற்பட்டது. அப்பொழுது பிடல் காஸ்ட்ரோவுக்கு கை கொடுத்தது, ரஷியா. கியூபாவின் பொருட்களை ரஷியா இறக்குமதி செய்ய ஒப்புக்கொண்டது. மேலும் கியூபா மக்களும் தங்கள் நாட்டிற்காக கடுமையாக உழைத்தனர்.

இதனால், அமெரிக்க நிறுவனங்கள் வெகுவாக பாதிக்கப்பட்டன. எனவே காஸ்ட்ரோவை கொலை செய்ய அமெரிக்காவின் சிஐஏ அமைப்பு தீவிரமாக செயல்பட்டது. ஒருமுறை இரண்டு முறை அல்ல மொத்தம் 638 முறை பிடல் காஸ்ட்ரோவை கொலை செய்ய திட்டமிட்டு அமெரிக்கா தோல்வியை தழுவியது.

பிடல் காஸ்ட்ரோவுக்கு விஷம் கொடுப்பது, ரசாயனம் தெளிப்பது, குண்டு போடுவது, துப்பாக்கியால் சுட்டுக் கொல்வது, சுருட்டில் விஷம் தடவுவது, விபத்து ஏற்படுத்துவது, விஷ மாத்திரை கொடுப்பது என பல முயற்சிகளை மேற்கொண்டது. பிடல் காஸ்ட்ரோவை கியூபாவில் உள்ள மாஃபியா கும்பலை வைத்து கொல்ல அமெரிக்கா முடிவு செய்தது. ஆனால் அந்த முயற்சியும் தோல்வியில் முடிந்தது.

இந்நிலையில், கியூபாவுடன் நட்பு பாராட்டுவது என்று அமெரிக்காவின் தற்போதைய அதிபர் பராக் ஒபாமா முடிவு செய்து அதற்கான முயற்சிகளையும் செய்தார். 54 ஆண்டுகள் கழித்து அமெரிக்காவில் கியூபா நாட்டு தூதரகம் திறக்கப்பட்டது. அதேபோன்று கியூபாவில் அமெரிக்க தூதரகம் திறக்கப்பட்டது. இதை தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஒபாமா கடந்த மார்ச் மாதம் கியூபாவுக்கு சென்றார்.

கியூபாவின் முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோவின் தம்பியான தற்போதைய அதிபர் ரவுல் காஸ்ட்ரோவை, ஒபாமா சந்தித்தார். இந்த சந்திப்பின்போது இருநாட்டு நல்லுறவு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

உடல்நலம் குன்றிய நிலையில் சக்கர நாற்காலியின் துணையின்றி நடமாட முடியாத நிலையில் இருக்கும் கியூபா கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் அதிபருமான பிடல் காஸ்ட்ரோ – ஒபாமாவை சந்தித்துப் பேச மறுத்து விட்டார்.

13-8-1962 அன்று கியூபாவில் ஒரு செல்வ செழிப்பான விவசாய தந்தைக்கு பிறந்தவர்தான் பிடல் காஸ்ட்ரோ. செல்வ செழிப்பான குடும்பத்தில் பிறந்திருந்தாலும் கியூபா மக்களின் அடிமை நிலையை கண்டு தனது வசதியான வாழ்க்கையை விட்டுவிட்டு மக்களுக்காக அமெரிக்கா என்னும் மிகப்பெரிய ஏகாதிபத்திய நாட்டை எதிர்த்து போராட ஆரம்பித்தார்.

உலகில் உள்ள அனைத்து நாடுகளையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள அமெரிக்கா முடிவு செய்தது. ஆனால், கியூபாவில் அமெரிக்காவின் ஆதிக்கத்தை நிலைநாட்ட முடியவில்லை. அதற்கு முட்டுக்கட்டையாக இருந்தவர்தான் பிடல் காஸ்ட்ரோ.

சுமார் 600-க்கும் மேற்பட்ட கொலை முயற்சிகளில் இருந்து தப்பி அமெரிக்காவிற்கு சிம்மசொப்பனமாக விளங்கிய பிடல் காஸ்ட்ரோ இன்று தனது 90-வது வயதில் காலமானதாக அந்நாட்டின் அரசு தொலைக்காட்சிகள் செய்தி வெளியிட்டுள்ளன.

யாருக்கும் தலைவணங்காத அந்த தன்மானத் தலைவனின் மரணம் தொடர்பான செய்தி உலகம் முழுவதும் வாழும் பலரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply