தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுக்கு ‘2017க்குள் தீர்வு வேண்டும்’ : சம்பந்தன்
தமிழ் மக்களுடைய பிரச்சினைகள், 2017ஆம் ஆண்டுக்குள் தீர்க்கப்பட வேண்டும் என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அலுவலகம் அமைக்கப்படுவதற்கான சட்டம், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருந்தாலும், அச்சட்டம் இன்னமும் அமுல்படுத்தப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
இலங்கை வெளிவிவகார அமைச்சின் பிராந்திய தூதரக சேவைகளுக்கான பணியகம், யாழ் மாவட்டச் செயலகத்தில், நேற்று (26) திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் இவ்வாறு கூறினார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
“வடக்கு மாகாணத்தில் பல இலட்சம் மக்கள் இடம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழ்கின்றனர். தமிழ் மக்களில் 50 வீதமான மக்கள்கூட, தற்போதும் இங்கு வாழவில்லை. அவர்கள் உலகத்திலுள்ள நாடுகளில் பரந்து வாழ்கின்றனர். எனவே, யாழ்ப்பாணத்தில் இவ்வலுவலகம் திறக்கப்படுவது பொருத்தமானதாக இருக்கம்.
“இதற்கு மேலதிகமாக, மக்களது இறைமையின் அடிப்படையில், அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்றே நாம் நீண்டகாலமாக கேட்டு வருகின்றோம். எங்களுடைய காணி விடயங்கள், பாதுகாப்பு விடயங்கள், கல்வி, சுகாதார, விவசாயம் உட்பட பல விடயங்கள், மக்களுடைய இறைமையின் அடிப்படையில் அதிகாரங்கள் பகிரப்பட்டு, மக்கள் தங்கள் அதிகாரங்களை பயன்படுத்துவதன் மூலமாக, சுயநிர்ணய உரிமையை அடைய வேண்டுமென்று, நாங்கள் நீண்டகாலமாக கேட்டு வந்திருக்கின்றோம்.
இந்த நாட்டு மக்கள் மத்தியில், உண்மையான புரிந்துணர்வு, நல்லிணக்கம் ஏற்பட்டு, நாட்டில் நிரந்தரமான சமாதானம் ஏற்படுவதாக இருந்தால், அந்த சமாதானம், சமத்துவத்தின் அடிப்படையில் ஏற்படுத்தப்பட வேண்டும். சமத்துவம் ஏற்படுவதாக இருந்தால், இறைமையின் அடிப்படையில் அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட்டு, அந்தந்த பிராந்தியங்களில் வாழ்கின்ற மக்கள், அந்த அதிகாரங்களைப் பயன்படுத்தி, தங்களுடைய வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்கின்ற நிலைமையை ஏற்படுத்த வேண்டும்.
அந்தக் கருமங்கள் ஆரம்பிக்கப்பட்டிருந்த போதும், சமீப வாரங்களில் பல தடங்கல்கள் காரணமாக அது தாமதமடைந்திருக்கிறது. ஆனால், இந்த வருடத்துக்குள் அதாவது, 2017ஆம் ஆண்டுக்குள் நிறைவேற்றப்பட வேண்டுமென்று நாங்கள் விரும்புகிறோம். இதில் ஒன்றை நான் தெளிவாகக் கூற விரும்புகின்றேன். இதனை தமிழ் மக்கள் மாத்திரம் விரும்பவில்லை. இந்தக் கருததுக்கு ஆதரவாக தென்னிலங்கையிலுள்ள சிங்கள மக்களும் சில அரசியல் தலைவர்களும் உள்ளனர்.
ஆனபடியால் இவ்வாறான முற்போக்குச் சிந்தனை கொண்டவர்கள் எல்லோரும் ஒன்றாக அணிதிரண்டு, இந்த நாட்டினுடைய சுபீட்சத்தை கருத்திற்கொண்டு இந்த நாட்டில் உலகத்தில் மதிப்பை பெற்றுக்கொள்ளப்படுவதாக இருந்தால், இந்த நாடு வளர்ச்சியடைந்து முன்னேற்றமடைந்து. பொருளாதார ரீதியாக முன்னேறுவதாக இருந்தால், இது அத்தியாவாசியமான விடயமாகும். அதனால், தாமதமில்லாமல் அது விரைவில் நடைபெற வேண்டுமென நாங்கள் எல்லோரும் கருதுகிறோம்’ என தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply